சீனாவின் சமகால எழுத்தாளர்களில் எழுத்தில் அதிக பரிசோதனைகள் செய்யும் எழுத்தாளர். எண்ணற்ற சிறுகதைகளையும் நான்கு நாவல்களையும் எழுதியுள்ளார். இவரது எழுத்தில் சிம்பாலிசமும், சுயசரிதைக் கூறுகளும் நிரம்பியிருக்கும். மேற்கத்திய கலாச்சாரத்தையும் சீனக்கலாச்சாரத்தையும் கலந்து எழுதுபவர். 2019 நோபல் பரிசு கிடைக்கக்கூடும் என்று கருதப்பட்ட பெயர்களில் இவருடையதும் ஒன்று. இந்த சிறுகதைத் தொகுப்பு புக்கர் நீண்டபட்டியலின் பதிமூன்றில் ஒன்று.
மிருகங்கள், நிழல் மனிதர்கள், மரங்கள், ஆவிகள், பூதங்கள் தங்களது கோணத்தில் பார்க்கும் விசயங்களை மனிதர்களிடம் பகிர்ந்து கொள்ளும் முயற்சியே இந்தக் கதைகள். முதல் குறுநாவலில் தன்மையில் கதை சொல்வது மனிதர் இல்லை என்று தெரிந்தாலும் யார் என்று புரிந்து கொள்ள நிறைய பக்கங்களைக் கடக்க வேண்டியிருக்கும். சீனாவின் தொன்மத்தை, நிலப்பரப்பை, நவீனவாழ்க்கை முறையை மேற்கத்திய சாயம் கலந்து கொடுக்கிறார் என்றும் சொல்லலாம். அநேகமாக எல்லாக் கதைகளிலும் பாண்டஸி வருகிறது. சிலகதைகளில் சர்ரியல் காட்சிகள் வருகின்றன. ஒரு பேட்டியில் மனிதனின் மூளையில் உதிக்கும் எண்ணங்களைத் தொடர்வது கடினம் என்றிருப்பார் இவர். இந்தக் கதைகளில் அதையே இவர் எழுத்தில் கொண்டுவர முயற்சித்திருப்பதாகத் தோன்றுகிறது.
முதல் கதை மட்டும் எண்பது பக்கங்கள் கொண்ட நீண்ட கதை. மற்ற எல்லாமே சிறுகதைகள். முதல் கதை, Story of the slumsல் கிழவனின் காயம்பட்ட காலை எலி தின்னும் காட்சியுடன் ஆரம்பிக்கும் கதை, நம்மை சீனாவிற்குத் தூக்கிச்சென்று பலகாட்சிகளை கண்முன் விரிக்கிறது. காஃப்கா, போர்ஹே, தாந்தே போன்ற பல மாஸ்டர்களைப் பற்றிய ஆய்வுக் கட்டுரைகள் எழுதிய Can Xue எல்லோருடைய பாதிப்பையும் தன் எழுத்தில் கொண்டிருக்கிறார். பக்க அளவினால் மட்டுமல்ல Weirdness மூலம் புதியஉலகத்தின் காட்சிகளை விவரிக்கும் இதுவே என்னளவில் தொகுப்பின் சிறந்த கதை.
எல்லாக் கதைகளிலுமே சீனத்தத்துவ நோக்கை எளிதாகக் காட்சிப்படுத்துதல் நடக்கிறது. அநேகமான கதைகளில் Home townஐத் தேடிப் பலர் செல்லும் காட்சி வருகிறது. சீனாவின் அதிவேக நகர்மயமாக்கல் இவரது ஆழ்மனதில் ஏதோ தொந்தரவை அளித்திருக்கக்கூடும். வீடற்றிருத்தல், நிலையற்ற தன்மை, மற்றும் மனித இருப்புக்கான நிலையான வடிவங்களிலிருந்து விலகநேரிடும் நிலைமை இவற்றை சுற்றியே கதைகள் நகர்கின்றன. முழுக்கவே சீன மண்ணின் கதைகள் இவை என்றாலும் உலகத்தின் எந்த நாட்டவரும் இந்தக்கதைகளுடன் தங்களைப் பொருத்திக்கொள்ள முடியும்.
பதினாறு கதைகள் கொண்ட தொகுப்பு. புக்கர் இன்டர்நேஷனல் என்ற ஒன்று இல்லாதிருந்தால் Comtemporary Literature என்பதே நம்மில் பலருக்குத் தெரியாது போயிருக்கும். சீனாவின் சிறுகதைகளின் தரம் இவ்வளவு உயரத்தில் இருக்கும் என்பதும் தெரியாது போயிருக்கும். இந்தத் தொகுப்பில் இருக்கும் கதைகள் எளிதான வாசிப்புக்கு உகந்தவை அல்ல. வேகமான வாசிப்பில் நான் முழுவதும் உள்வாங்கிக் கொள்ளவில்லை, தவற விட்டவைகள் கண்டிப்பாக இருக்கும் என்ற உணர்வுடன் படித்த புத்தகம் இது. நிதானமாக மறுவாசிப்பு செய்யவேண்டும். Definitely a strong contender for Shortlist.
https://www.amazon.in/dp/B087TMKYK1/ref=cm_sw_r_wa_apa_glc_AYBZPKXJE1594ED1FFGT