அடானியா பாலஸ்தீனத்தில் பிறந்தவர். கிழக்கு லண்டனைச் சேர்ந்த பல்கலையில் ஊடகம் மற்றும் சமூகவியலில் முனைவர் பட்டம் பெற்றவர். இதற்கு முன் இவர் எழுதிய மூன்று நாவல்கள் பலரது கவனத்தைப் பெற்றன. இது 2021 புக்கர் இன்டர்னேஷனல் நீண்ட பட்டியலில் இடம்பெற்ற நாவல்.
பாலஸ்தீனத்தில் எகிப்து எல்லையை ஒட்டிய இஸ்ரேலிப்படையின் ரோந்து எந்த சம்பவமுமில்லாமல் (பாம்பு கடித்தது தவிர) ஒவ்வொரு நாளும் நடக்கிறது. வருடம் 1949. அத்துமீறி எல்லையைக் கடப்பவர்களை அனுமதிக்காமல் இருக்க ரோந்து. காலங்காலமாக வாழ்ந்த பகுதியை விட கைப்பற்றிய பகுதிக்கு கவனம் கூடுதல் தேவை. அதனால் ரோந்து. அப்படி ஒரு ரோந்தில் ஆயுதம் ஏந்தாத அராபியவிவசாயிகள் எல்லைக்குள் புகுந்து விடுகிறார்கள். துப்பாக்கிச்சூட்டில் ஆறு ஆண்கள் இறக்க, துரதிருஷ்டவசமாக பதின்மவயதுப்பெண் சிறைபிடிக்கப்படுகிறாள். அவளுக்கு என்ன நேர்ந்திருக்கும் என்பதற்கு அதிக கற்பனைவளம் தேவையில்லை. இந்த சூழ்நிலையில் இதுவும் சம்பவமில்லை. ஆனால் இந்தப்பெண் கொல்லப்பட்டு இருபத்தைந்து வருடங்கள் கழித்துப் பிறந்த பாலஸ்தீனியப்பெண் சம்பவம் நடந்து ஐம்பது ஆண்டுகள் கழித்து நடந்த உண்மையறிய போலி அடையாளஅட்டையுடன் சம்பவம் நடந்த இடத்திற்கு வருவதே சம்பவம். அதுவே இந்த நாவல்.
ஜனநாயக முறையில் இஸ்ரேலிப் படையினரிடம் வாக்கெடுப்பு நடத்தப் படுகிறது. பிடிபட்ட பெண்ணை சமையலுக்கு உபயோகிக்கலாமா இல்லை ஆசைக்கு உபயோகிக்கலாமா என்று! ஏகமனதாகப் பின்னது தேர்ந்தெடுக்கப்படுகிறது. அதிகாரத்தைத் தட்டிக்கேட்க முடியாத எல்லா நிலைகளிலும் ராணுவங்கள் மாறும் ஆனால் அப்பாவிப் பெண்கள் மாறப்போவதில்லை. தலையைக்கூட மூடிக்கொள்ளும் பெண்ணின் உடலில் ஒட்டுத்துணி இல்லாமல் மொத்த ராணுவத்தின் முன்னால் ஹோஸ் பைப் வைத்துக் குளிப்பாட்டுகிறார்கள். ஆண்கள் மிருகங்கள் என்பவர் அமெரிக்க ராணுவத்தின் பெண் அதிகாரிகள் ஈராக் ஆண்கைதிகள் மீது நடத்திய பாலியல் வன்கொடுமைகளைத் தேடிப் படியுங்கள்.
இஸ்ரேல், பாலஸ்தீனம், ஜெருசலேம் இவற்றின் வரலாறு தெரியாது இந்த நாவலை முழுமையாகப் புரிந்து கொள்வது கடினம். அரசியலை நேரடியாகப் பேசாது, சம்பவங்களின் மூலம் அரசியலைப் புரிந்து கொள்ள வைக்கும் Political Novel இது. நாவலில் ஒரு காட்சி. நாற்பதுகளுக்கு முன் பாலஸ்தீனிய மேப்பில் இருந்த கிராமங்கள், நடப்பு இஸ்ரேல்மேப்பிலும் இல்லை, Physicalஆகவும் இல்லை. திபெத் சீனாவின் மேப்பில் இருப்பது நினைவுக்கு வருகின்றதா?
நூறுபக்கத்திற்கும் குறைவான இந்த நாவலை எழுத இவருக்கு பன்னிரண்டு வருடங்கள் ஆகியிருக்கிறது. நாம் வருடம் பன்னிரண்டு எழுதுவதால் தான் புக்கர் இன்டர்னேஷனல் போன்ற விசயங்களை விரும்புவதில்லை. இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்ட நாவல், ஒரு போர்வீரனின் விட்டேத்தியான பார்வையில் படர்க்கையில் சொல்லப்படும் நாவல், எதற்கும் பயந்துநடுங்கும் ஒரு இளம்பெண்ணின் கோணத்தில் தன்மையில் சொல்லப்படுகையில் மொழிநடை மட்டுமன்றி சொல்லப்படும் வார்த்தைகளும் மாற்றம் கொள்கின்றன. யாரும் எதிர்பார்க்காத முடிவு. ஒரு திரில்லர் நாவலின் சுவாரசியத்துடன் கதையை நகர்த்தி தான் சொல்ல வேண்டியதைச் சொல்லி இருக்கிறார். ஒரு பேட்டியில் இவர் சொன்னது” ஒரு ஆட்டை கொல்வதற்கு இழுத்துப்போகும் போது இன்னொரு ஆட்டுக்குக்கூட என்ன என்று தெரிவது மனிதனுக்குத் தெரியாது என்றா நினைக்கிறீர்கள்! அப்படியானால் பாலஸ்தீனத்தைப் பற்றி நான் ஆடுகளிடம் தான் பேச வேண்டும்”.
https://www.amazon.in/dp/B088ZRFY43/ref=cm_sw_r_wa_apa_glc_4MTHPP100EA7C1HH6962