நானா, 1978ல் ஜார்ஜியாவில் பிறந்த பெண். இவர் எழுத்தாளரும், புகழ்பெற்ற திரைப்பட இயக்குனரும் ஆவார். தங்களுக்காக குரல் கொடுக்க முடியாத குழந்தைகளுக்குக் குரல் கொடுப்பவர். இந்தநூல் 2015ல் ஜார்ஜியன் மொழியில் எழுதப்பட்டு சிறந்த முதல் நாவலுக்கான பரிசுகளை வென்றதுடன், அந்த ஆண்டுக்கான சிறந்த ஜார்ஜியன் நாவலாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. சென்ற வருடம் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியான இந்த நாவல் புக்கர் இன்டர்நேஷனலின் 2021ன் நீண்ட பட்டியலில் இடம்பெற்ற 13 நாவல்களில் ஒன்று.
பெரியவர்களின் குரூர உலகத்திற்கு எதிராக, ஒருவருக்கு ஒருவர் துணையாகத் தோள்கொடுக்கும் சிறுவர் உலகத்தைப் பற்றிய உணர்ச்சிவசப்படாத சித்தரிப்பு இந்த நாவல்.
கெர்ச் ஸ்டிரீட் என்பது தெருவல்ல, ஜார்ஜியாவில் ஒரு நகரம். நாஜிகள் படையெடுப்பில் 1942ல் விழுந்துபட்ட நகரம். அதில் நினைவுச்சின்னங்களோ, பெருமைப்படும் நினைவுகளோ எதுவும் இல்லை. அதனாலோ என்னவோ பின்வந்த சோவியத் அரசாங்கங்கள் அந்த நகரத்தை முன்னேற்றும் முனைப்புகளைக் காட்டவில்லை. சாதாரண நகரத்தில் இருக்கும் சாதாரண இடங்களைத் தவிர அங்கே அறிவார்ந்த இயலாமையுள்ள (Intellectually challenged) குழந்தைகளுக்கு ஒரு பள்ளி இருக்கிறது. அந்த நகரத்தின் பாஷையில் சொன்னால் அறிவிலிகளின் பள்ளி.
பிணத்தை எரியூட்டியவுடன் திரும்பி சிதையைப் பார்க்காது நடக்க வேண்டும் என்பது நம் நாட்டில் மட்டுமிருக்கும் நம்பிக்கை என்று நினைத்திருந்தேன். ஜார்ஜியாவில் பிணங்களைப் புதைத்தபிறகு அவர்கள் நிம்மதியாக உறங்கட்டும் என்று “திரும்பிப் பார்க்காமல் நடந்து செல்லுங்கள்” என்கிறார்கள்.
அறிவார்ந்த இயலாமை என்பது என்ன? குழந்தைகள் எல்லாம் சேர்ந்து ஒரு சிறுமியைப் பிடித்துக்கொண்டு ஒரு சிறுவனை பாலியலுறவு கொள்ளச் செய்யும் விளையாட்டு அறிவார்ந்த இயலாமை எனச் சொல்லலாம்..ஆனால் அமெரிக்க தம்பதிகள் தத்து எடுத்த சிறுவனுக்கு, சில ஆங்கில வார்த்தைகள் கற்பதற்கு டியூசனுக்கு பணம் சம்பாதிக்க, பிடிக்காத, வயதான ஒருவனுடன் படுத்து அவன் தரும் பணத்தைக் கொடுக்கும் மனப்பான்மை மூளை நன்கு வளர்ந்த குழந்தைகளுக்கு இருப்பதில்லை. டியூசன் சொல்லித்தரும் பெண்ணுக்கும், இந்தப்பெண்ணுக்கும் சிறுமிகளாய் இருந்த போது நடந்தது தனிக்கதை.
இந்தக் குழந்தைகளின் உலகத்தின் ஒரு சிலமாதங்களில் நடப்பது தான் இந்த நாவல். லேலா என்ற பதினெட்டு வயது சிறுமியின் கோணத்தில் விரியும் கதை. இந்தக் குழந்தைகளுக்கு நடக்கும் கொடுமைகள் உண்மையில் நடந்ததா என்று அவர்களுக்கே குழப்பமாக இருக்கிறது. இவர்கள் சொல்வதை யாரும் வெளியில் நம்பப்போவதும் இல்லை. அது தான் இவர்களிடம் எல்லாவித வன்முறைகளில் ஈடுபடுபவருக்கு வசதியாகப் போய்விடுகிறது.
நானா இதுபோன்ற பள்ளியின் அருகே வளர்ந்தவர். அந்தக்குழந்தைகளுடன் தொடர்ந்து உரையாடி அவர்கள் உலகத்தை நன்கு புரிந்து கொண்டவர். சிறுவயதில் தெரிந்து கொண்ட விசயங்களை இப்போது நாவலாக தத்ரூபமாக வடித்திருக்கிறார். சினிமா இயக்குனராக இருந்த அனுபவமும் இந்த நாவலுக்கு உதவி செய்திருக்கும். இலக்கிய ஆர்வலர்கள் தவறாமல் படிக்க வேண்டிய நாவல்.
https://www.amazon.in/dp/B08N5CCJY4/ref=cm_sw_r_wa_apa_glc_FRPD3NQRF7ARA9T0XM9M