கென்யாவைச் சேர்ந்த எழுத்தாளர். கிழக்கு ஆப்பிரிக்காவின் முன்னணி எழுத்தாளராகக் கருதப்படுபவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர். இங்கிலாந்திலும் ஆப்பிரிக்காவிலும் ஆங்கிலப் பேராசிரியராகப் பணிபுரிந்தவர். இவருடைய Weep Not Child உலகவாசகர்களின் கவனத்தை ஈர்த்துப் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த நாவல் புக்கர் இன்டர்னேஷனலின் நீண்டபட்டியலின் பதிமூன்று நூல்களில் ஒன்று.
கென்யாவின் வாய்மொழிக்கதை இது. பைபிளில், இஸ்லாமில் ஆணின் விலா எலும்பிலிருந்து பெண் படைக்கப்படுகிறாள். ஆனால் இந்தப் புராணக்கதையில் கடவுள் ஆண் பெண் இருவரையும் ஒன்றாகப் படைத்துப் பனிபடர்ந்த மலையில் நின்று கீழ்நிலங்களைப் பார்வையிட வைக்கிறார். இயற்கையின் பல சீற்றங்களில் இருந்து இருவரும் தப்பித்துப் பெண் ஒன்பது மகள்களைப் பெற்றெடுக்கிறாள். உண்மையில் பத்து மகள்கள். கடைசிப்பெண்ணுக்கு கால் ஊனம் என்பதால் கச்சிதமான ஒன்பது பெண்கள். அவர்கள் அழகு மனிதர்களை மட்டுமன்றி, பறவை, மிருகங்களையும் ஸ்தம்பிக்க வைக்கிறது. அவர்கள் இதயத்தைக் கொள்ளை கொள்ள தொன்னூற்று ஒன்பது மாவீரர்கள் வருகிறார்கள். இருப்பது ஒன்பது. எளிய வழி, யுத்தம் செய்து மிஞ்சும் ஒன்பது பேர் இவர்களை மணந்து கொள்வது. ஆனால் தகப்பனும் தாயும் மகள்களுமே ரத்தம் சிந்துவதை விரும்பவில்லை. பின் என்ன தான் செய்தார்கள்?
மகாபாரதக் கதையில் குந்தி தர்மனைப் பெற்ற செய்தி கேட்டு இரண்டுவருடம் கர்ப்பம் தரித்திருந்த காந்தாரி வயிற்றில் இடித்துக் கொண்டு வெளிவந்த பிண்டத்தில் பிறந்தவர் துரியோதனாதிகள் என்றும் சொல்வதுண்டு. இந்தக் கதையைப் படிக்கும் நாமும் அப்படி இடித்துக் கொண்டால் இது போல் இரண்டாயிரம் புராணக்கதைகளை நாவல்களாக்கலாம்.
கென்யா போன்ற தேசத்தில் பத்து கதைகள் என்றால் நம்மிடம் இலட்சம் கதைகள். சென்ற ஆண்டு புக்கர் இன்டர்னேஷனலிலும் வாய்மொழி புராணக்கதை குறுகிய பட்டியல் வரை வந்தது.
ஆயிரத்தொரு இரவுகள் கதையை ஆங்கிலத்தில் படித்த அரேபியப்பெண் அதிர்ச்சி அடைந்தேன் என்று சொல்லியிருந்தார். மேற்கத்திய வாசகர்களுக்கு நம் தொன்மத்தைக் கொண்டு செல்கையில் சில மாறுதல்களைக் கண்டிப்பாக செய்ய வேண்டியதாகிறது. இந்த நூலின் ஆசிரியர் புராணக்கதையில் செய்த சின்னச்சின்ன மாறுதல்களே இதை புக்கர் பட்டியலில் கொண்டு சேர்த்திருக்கிறது.
உலகவாசகர்கள் எண்ணிக்கையில் அதிக சதவிகிதம் பெண்கள். காலம்காலமாக விலா எலும்பு என்ற கதையை விட்டு வெளிவருகையில் அதுவே Catchy ஆகிறது. அடுத்தது எங்கள் பெண்கள் பெற்றெடுக்கும் குழந்தைகள், அவர்கள் குழந்தைகள், குழந்தைகளின் குழந்தைகளுடன் நாங்கள் விளையாட வேண்டும் என்று சொல்கையில் தனிமையில் வாழ நிர்பந்திக்கப்பட்ட மேலைநாட்டு மனம் கற்பனையில் சொர்க்கத்தைக் கண்டு கொள்கிறது.
“எந்த விலங்கையும் தற்காப்பிற்காகவோ இல்லை கடும்பசியைத் தீர்ப்பதற்கோ அல்லாமல் வேறு எதற்கும் கொல்லக் கூடாது” . ” ஒரு மரத்தை அழித்தால் இன்னொரு மரத்தை உருவாக்க வேண்டும்’.”வேலைகள் யார் திறமையாக செய்கிறார்களோ அவர்கள் எடுத்துக் கொள்ளவேண்டும், இந்த வேலை ஆண் செய்யும் வேலை இந்த வேலை பெண் செய்யும் வேலை என்று எதுவுமில்லை”.
இதை எல்லாம் நாமும் முன்பே படித்திருக்கிறோம், இந்தியத்தனம் எல்லாவற்றிலுமிருந்து எடுத்துக் கொண்டதா இல்லை இந்தியத்தனம் எல்லா நாடுகளிலும் இருக்கிறதா!
தாய்மொழியில் எழுதிய நாவலை இவரே ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்திருக்கிறார். மூலத்தில் இருந்தது போல் ஆங்கிலத்திலும் வசனகவிதையாகவே வருகிறது. மூல ஆசிரியர் மொழிபெயர்ப்பாளராவதன் அனுகூலம் மனதில் உதித்த வார்த்தைகள் வேறுமொழியிலும் மாறாது வருதல். ” காதுகள் ஆன்மாவின் கண்கள்” என்பது போல் ஏராளமான வரிகளின் அழகியலில் வாசிப்புவேகம் தடைபடும் மொழிநடை.
பலரை நாக்கால் ஒரேநேரத்தில் இழுத்து
முழுங்கிவிடும் கண்ணுக்குத் தெரியாத மிருகம், லெளிச்சத்தைக் கண்டு பயப்படும் இருள்மிருகம், மனிதனா மிருகமா எனத்தெரியாத மூன்று கால் மூன்று கைகள் கொண்ட நெருப்பை விழுங்கிஉமிழும் ஜந்து, ரத்தக்காட்டேரி, ஒற்றைக்கண் ராட்சசன் என்று நமக்குப் பழக்கமான எல்லோருமே வருகிறார்கள்.
மூதுரை போன்ற நூல்களில் வரும் அறக்கருத்துகள் வருகின்றன. தொய்வில்லாத கதைசொல்லல் அடுத்து என்ன என்ற பரபரப்பைத் தூண்டுகிறது. முடிவில் யாரும் எதிர்பாராத திருப்பம் ஒன்று நேர்கிறது. வாய்மொழிக்கதைகளை எப்படி Present செய்ய வேண்டும் என்பதற்கு இந்த நூலை உதாரணம் சொல்லலாம். Life begins at the end of your comfort zone என்பதே ஆரம்பத்தில் இருந்து முடிவுவரை கதை சொல்லும் நீதி.
https://www.amazon.in/dp/B088ZBCRYS/ref=cm_sw_r_wa_apa_glc_FFYRD2V6X4VZHKTV19V2