எரிக் பிரான்ஸைச் சேர்ந்த எழுத்தாளர். திரைப்படத் தயாரிப்பாளர். பிரான்ஸின் பல இலக்கிய விருதுகளைப் பெற்றவர். 2017ல் பிரான்ஸின் மிகச்சிறந்த விருதான Prix Goncourtஐ The Order Of The Day என்ற நூலுக்கு வென்றார். இதுவரை பத்து நூல்களை எழுதியிருக்கும் இவரது இந்த நூல் 2021 புக்கர் இன்டர்னேஷனல் நீண்ட பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
இப்படித்தான் இந்த நாவலின் முதல்பத்தி ஆரம்பிக்கிறது:
” அவனது அப்பா தூக்கிலிடப்பட்டார். லெற்றிடத்தில் எறியப்பட்ட தானிய மூட்டை போல. அவனை இரவில் அவர்கள் தோளில் சுமக்க வேண்டியதாயிற்று, அதன் பின் அவன் எந்த சத்தத்தையும் எழுப்பவில்லை, அவன் வாயில் பூமி நிரம்பியிருந்தது. (கிருஷ்ணனின் வாய் மற்றும் Biblical reference).அதன்பிறகு, எல்லாவற்றிலுமே தீ பிடித்தது. ஓக் மரங்கள், வயல்வெளிகள், ஆறுகள், நதிக்கரையில் வெள்ளை மஞ்சள் நிறத்தில் பூக்கள் பூக்கும் செடி, தரிசுநிலம், தேவாலயம், எல்லாமே.
அப்போது அவனுக்கு பதினோரு வயது”
பதினாறாம் நூற்றாண்டில், புராட்டஸ்டன்ட் சீர்திருத்தவாதிகள் கத்தோலிக்க திருச்சபை மீது தாக்குதலைத் தொடங்குகிறார்கள். ஆனால் அதுவும் திருச்சபை போலவே விரைவாக ஒரு நிறுவப்பட்ட முதலாளித்துவ அதிகாரமையமாக மாறுகிறது. பரலோகத்தில் சமத்துவம் என்று உறுதியளிக்கப்பட்டிருந்த கிராமப்புற தொழிலாளர்களும் நகரங்களின் ஏழைகளும் கேட்கத் தொடங்கினர்: ‘ஏன் இங்கேயும் இப்போது பூமியிலும் நாம் சமத்துவமாய் இருக்கக்கூடாது?’ தாமஸ் முன்ட்ஸர் என்பவர் தலைமையில் கிளர்ச்சி நடக்கிறது. முடிவுஎன்னவாக இருந்தாலும் தாமஸ் முன்ட்ஸர் வாழ்வை மீண்டும் இந்தத் தலைமுறைக்கு சொல்லத்தான் வேண்டும்.
மரம் வைத்தவன் தண்ணீர் விடுவான் என்று கடவுளை மட்டும் நம்பி கண்ணீரால் தினம் அபிஷேகம் செய்த அர்ச்சகரின் பெண்கள் பசி தாங்காமல் உடல்விற்றுப் பிழைக்கையில் வராத கடவுள், கடவுளின் பெயரால் வாழ்நாள் முழுதும் சேவை தவிர வேறு சிந்தனை இல்லாத கன்னியாஸ்திரிகள் காமக்கொடூரர்களால் பாலியல் வல்லுறவு செய்து கொல்லப்படுகையில் வாராத கடவுள், ஆண்பெண் பேதம் தெரியா பச்சிளம் சிறுமி மதத்தின் பெயரால் இன்னொருமதக் கோவிலில் பாலியல் சித்திரவதை செய்யப்பட்டுக் கொல்லப்படுகையில் காப்பாற்றாத கடவுள் அவருக்கு உகந்த நேரத்தில் வருவதற்காகக் காத்திருப்பவர் காத்திருக்கட்டும். ஆனால் வறியவர்களுக்கும், பாவப்பட்ட ஜீவன்களுக்கும் எந்த தேசத்திலும், எந்த மதத்திலும் கடவுள் இல்லை.
கிருத்துவ இலக்கியம் என்பது மேலை இலக்கியத்தின் ஒரு பகுதி. முழுக்க Biblical reference கொண்ட மற்றுமொரு நாவல் இது. வரலாற்றில் வேறு இடங்களில் வேறு காலங்களில் நடந்தவற்றை சுருக்கி மொத்தமாக நம் காட்சிக்கு வைக்கிறார் எரிக். வரலாற்றில் சற்றே புனைவு கலந்து இன்றைக்கும் பொருத்திப் பார்க்கும் நூல் இது. கிருத்துவமதம் வளர்ந்ததன் காரணம் Adaptability மற்றும் நூற்றாண்டுகளாக சலிக்காத பிரச்சாரம். ஜெர்மனியில் லத்தீன் மொழியிலிருந்து ஜெர்மனிக்கு மாஸ் மாறியதும் ஜனங்கள் சாரிசாரியாக வருகிறார்கள். விவசாயிகளின் போரைப் பற்றிய நாவல் இது. அவர்கள் கேள்வி கேட்க ஆரம்பித்ததும், தெருவுக்கு வந்து போராட ஆரம்பித்ததும் பயங்கர ஆயுதங்களால் தாக்கப்படுகிறார்கள். பதினாறாம் நூற்றாண்டிலிருந்து கால யந்திரத்தில் ஏறி இருபத்தி இரண்டாம் நூற்றாண்டில் ஏதோ ஒரு தேசத்தில் நீங்கள் இறங்கினாலும் இதே காட்சிகளை நீங்கள் காணப்போவது மனிதவரலாற்றில் ஆறாத சோகம். மொழிபெயர்ப்பு மூலத்தின் சக்திவாய்ந்த மொழியை சிதைக்காமல் அப்படியே கொண்டு வந்திருக்கிறது.
https://www.amazon.in/dp/B08D9NK5FP/ref=cm_sw_r_wa_apa_glc_GYMQMRFCS2QT30HVP7QR