டிச்சி செக்கோஸ்லேவியாவைச் சேர்ந்த Pragueல் போலந்து தாய்க்கும், செக்கோஸ்லேவியா தந்தைக்கும் பிறந்தவர். இதுவரை ஐந்து நாவல்களும், இரண்டு சிறுகதைத் தொகுப்புகளும், எண்ணற்ற விமர்சனங்களும், அல்புனைவுக் கட்டுரைகளும் எழுதியவர்.
தாய்மொழியில் விருதுவென்ற இந்தநாவல் ஆங்கில மொழிபெயர்ப்பில் 2021 புக்கர் இன்டர்னேஷனல் நீண்ட பட்டியலில் இடம்பிடித்திருக்கிறது.
இசைக்கலைஞர் ஒருவர் இன்னொரு இசைக்கலைஞருக்காகக் காத்திருக்கையில், வீடற்ற, முதல்நாள் இரவு தாக்கப்பட்ட இளைஞன் ஒருவனிடம் பேச்சுக்கொடுக்கையில் இவருக்குப் பழைய நினைவுகள் தொடர்ந்து கதைகளாய் வருகிறது. (இவனிடத்தில் நானிருந்திருக்க வாய்ப்பு பலமாக இருந்திருக்கிறது) Prague நகரமும், புறநகரங்களும் கதைக்களன்கள். துர்க்கனவின் நினைவு மீதங்களில் இருந்து முளைப்பவை இந்தக்கதைகள். சச்சரவு மற்றும்
குழப்பத்தில் மூழ்கிய நகர வீதிகளின் வலை அமைப்பை நினைவூட்டும் ஒரு படத்தொகுப்பே இந்த நாவல்.
போலந்து மற்றும் செக்கோஸ்லேவியாவின் வேர்களோடு,
கலைவரலாறு, நாகரீகவியல், இலக்கியம் முதலியவற்றில் பட்டம் பெற்றவர் என்பது விடாது மழைபோல் பொழியும் கதைகளில் இருந்து எளிதாகத் தெரியவருகிறது. எந்த விதமான பகுதிகளோ, பத்திகளோ, பகுப்புகளோ இல்லாது தொடர்ந்து செல்லும் நாவல் சிலருக்கு ஆர்வமூட்டவும், சிலருக்கு எரிச்சல் மூட்டவும் கூடும்.
புலம்பெயர்ந்த சிறுவர்களின் போதை மருந்து, சாராயம், வன்முறைகளில் ஊறிய இருண்ட, தொந்தரவுமிக்க பிள்ளைப்பருவ நினைவுகளில் சற்றே பரவசம் ஏற்படுத்தும் தருணங்களும் இருந்திருக்கின்றன. டிச்சி காட்டும் உலகம் இருணடதாக இருக்கிறது. வெவ்வேறு தேசங்களில் இருந்து இந்த நகருக்கு வந்துசேர்ந்த இவர்களுக்கு
நட்பு இருளுக்கு நடுவில் சிறிது வெளிச்சமாகிறது. நாவல் முடிகையில் வரும் திருப்பம் நம் புரிதலை மாற்றிக் கொள்ளச் செய்கிறது.
டிச்சியின் மொழிநடை விரைவானது, தன்னிச்சையாய் நகர்வது, ஒழுங்கில்லாதது, கொச்சை வார்த்தைகள் கலந்தது, ஆதியும் அந்தமும் இல்லாமல் கதைசொல்லியின் நினைவில் தோன்றும் விதத்தில் சொல்லப்படுவது. வரிகளும் அங்கங்கே தொடர்வரியாக சில இடங்களில் சின்ன வரியாக ஒரு ஒழுங்கின்மையை ஒழுங்காகக் கடைபிடித்தது போல்.
இந்த நாவல் வாசிக்க எளிதானதல்ல, இந்த நாவல் பொறுமையையும், இவரது பரிட்சார்த்த முயற்சிகளுக்கு தன்னை ஒப்புவிக்கும் வாசகமனத்தையும், கதைசொல்லியின் நிலையில் நம்மைவைத்துப்பார்க்கும் Empathyஐயும் கோருவது. அதற்குப் பரிசாக நாளை மற்றுமொரு நாளேயில் கந்தனின் வாழ்க்கையில் பங்கேற்க ஜி.நாகராஜன் கூட்டிச்செல்வாரே அதுபோல Peague நகர வீதிகளில் ஒரு இருண்ட வாழ்க்கையில் பங்கேற்றுக்கொண்டு திரும்பலாம்.
https://www.amazon.in/dp/B07Z8HXNWF/ref=cm_sw_r_wa_apa_glc_EX20B9KFPVRS3JKVGS22