அம்மா வந்தாள் என்ற தலைப்பே அப்புவைப் பிரதானப்படுத்தியது. அப்புவின் அம்மா வந்தாள். குழந்தையிலிருந்து எத்தனை வருடம் ஏங்கியிருப்பான் அவனது அம்மாவின் வரவிற்காக. கடைசியாக அம்மா வந்தாள். ஆனால் அவள் வரும்போது அப்புவுக்கு இன்னொரு அம்மா கிடைத்து விடுகிறாள்.
“வெகுகாலமாக அனுபவித்த சிலஉணர்வுகள் கடைசியில் எப்படியோ உருவம் பெறுகின்றன.
அம்மா வந்தாளின் ஒவ்வொரு பாத்திரத்திலும் நான் பார்த்த ஏழெட்டுப் பாத்திரங்களின் சேஷ்டைகள் ஒருமித்து இருக்கின்றன. அந்த அம்மாள் நான்கண்ட ஐந்தாறு பெண்களின் கலவை” என்கிறார் தி.ஜா முன்னுரையில்.
எது புனிதம் என்று நம்புகிறானோ ( அப்பு- நான் புனிதம் என்ற பேச்சுக்கே வரவில்லை) அது புனிதமில்லை என்றும், எவள் குறைப்பட்டுப் போனவள் என்று கருதுகிறானோ அவள் உண்மையில் புனிதம் என்று கண்டுகொள்வதே நாவலின் மையக்கருத்து.
இந்துவுக்கு பரசுவுடன் பன்னிரண்டு வயதில் திருமணம். “பரசு ஏன் தான் இப்படி மெலிந்திருந்தானோ” இது அப்புவின் பார்வை. அப்புவிற்கு பரசு மேல் இனம்புரியாத கோபம். எதற்கு?
கோரையால் பரசுவை நினைவுப்பெருவெளியில் அடிக்கும் அளவிற்கு! இந்துவின் முழங்கையிலும் நாலு அடி விழுகிறது.
இந்து முதலில் பூடகமாகப் பேசுகிறாள்.
“காவேரி மாத்திரம் புதுசா இருந்ததாக்கும்”
சுற்றிவளைத்துத் தன் மனதை சொல்லி அவனை போகவிடாது செய்யப் பார்க்கிறாள். ஊருக்குப் போய் காசி யாத்திரை போகப் போகிறாயா (திருமணம்) என்கிறாள்.
வாய் ஓயாமல் பேசுகிறாள். அத்தையுடன் கல்யாணத்திற்குப் போவதை இந்த சந்தர்ப்பத்திற்காகவே
தவிர்த்தேன் என்கிறாள் மறைமுகமாக.
நான் புருசன் இறந்ததும் உனக்காகவே இங்கு திரும்ப வந்தேன் என்கிறாள். அப்புவுக்கு இன்னும் புரியவில்லை. வேதம் மூளை, மனது எல்லாவற்றிலும் நிரம்பி இருக்கையில் லோகாதய வாழ்வில் அசடாக இருக்கிறான் அப்பு.
மனதால் உன்னையே மணம் செய்தேன், தாம்பத்யத்தில் உன்னை மனதில் கொண்டே கலவி கொண்டேன், புக்ககத்திலும் நீ என் அருகில் கிடப்பதாக பிரமை கொண்டேன், கணவன் இருந்தவரை கடமையாய் அந்த வீட்டில் இருந்தேன், அவன் இறந்த பின் உன்னைக் காண ஓடி வந்தேன். என்றும் என்னுடன் நீ இருந்தாய். உன்னுடன் ஆகாததால் எனக்கு இன்னும் மணமே ஆகவில்லை என்கிறாள் இந்து. இதைவிட ஒரு பெண் எப்படி காதலை சொல்வாள்?
அப்புவின் மனஓட்டம் இது: பெற்ற பிள்ளை போல் தன்னை இவ்வளவு காலம் பார்த்துக்கொண்ட அத்தை என்ன நினைப்பாள்? பரசு இறந்தாலும் அவனது ஆன்மா இந்து பேசுவதைக் கேட்டுத் துடியாய்துடிக்கும். வேதம் கற்றுக்கொள்ள வந்த இடத்தில் இப்படி ஒரு உறவை வளர்த்துக் கொண்டால் பின் அம்மா முகத்தில் எப்படி விழிப்பது? அப்பு வெளியில் சொல்லாவிட்டாலும், மனதிலும் நினையாவிட்டாலும் இந்துவின் காதலை ஏற்றுக்கொள்ள ஒரே தடை அவள் விதவை. முதலில் அவளை அத்தை என்கிறான் பின் அம்மா என்கிறான் கடைசியில் தங்கை என்கிறான். அவனைப் பொறுத்தவரை அவளிடமிருந்து தப்பிக்க வேண்டும்.
இந்து இவன் நிர்தாட்சயணமாய் மறுத்தும் இவனை வெறுக்கவில்லை. நினைவு தெரிந்த நாளிலிருந்து மனதில் மிதந்த ஆசைமுகம் அப்புவுடையது. இரயில் போகும் பாதையில் நின்ற இந்து அவனைக் கடைசியாகக் கண்களில் வாங்கிக் கொண்டு வெளியே விட்டு விடாமல் பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றே நினைத்திருப்பாள்.
மாத்ரு தேவோ பவ. “வேதம் எங்கம்மா மாதிரி. அதுதான் எனக்கு ஈச்வரன், எனக்கு அம்மா. எங்கம்மா மாதிரி அது ஒரு தங்கம். எங்கம்மா மாதிரி அது புடம்போட்ட தங்கம். மாற்றுக் குறையாத தங்கம்.” என்று வீட்டுக்கு வரும் அப்புவிற்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. வீட்டில் நுழையும் போதே சிவசுவை தம்பி என்று நினைத்து அடையாளச்சிக்கல், அடுத்து சிவசு உரிமையாய் படுக்கையறை வந்ததைப் பார்த்து துணுக்குறுவது, மன்னியின் நழுவல் பதில், அப்புறம் அப்பா பேசாமல் பார்த்துண்டேயிருக்கணும் என்பது எல்லாவற்றிலும் துளி சந்தேகம் இருந்ததென்றால் அம்மா அவள் வாயாலேயே நீ தான் கடைசிப்பிள்ளை என்று உறுதிசெய்து விடுகிறாள்.
தண்டபாணி- Cuckold husband. தண்டபாணியின் பார்வையை சொல்ல ஆண் விமர்சகர்களுக்கு சிரமம். முன்முடிவுகள், மரபில் தோய்ந்த மனம், திரையில் எம்.ஜி.ஆரை விரட்டி விரட்டி பெண்கள் காதலிக்கையில் தன்னை அங்கே கொஞ்சம் வைத்துப்பார்க்கும் உளவியல் எல்லாம் சேர்ந்து பார்வையைப் பழுதாக்கும். அப்பு வருகிறான் என்றதும் அலங்காரத்தம்மாளிடம் பதினாறுவருடம் முன்பு என்னத்தையோ பண்ணித் தொலைச்சிருக்கோமே என்று நினைக்கிறாயா என்று கேட்கிறார். இதே கேள்வியை அவர் பலமுறை கேட்டிருப்பார். அப்பு சிவசுவைப் பார்த்து குழம்பியதை உள்ளுக்குள் ரசிக்கிறார். சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்து, மனைவியின் கற்பில் மானம் என்ற ஆண்மனம், பிள்ளைகளின் எதிர்காலம், என்றாவது முழுதாக அவள் திரும்பக் கிடைத்து விடமாட்டாளா என்ற எண்ணம், இல்லை வேதாந்தத்தில் ஊறிய மனம் எனக்கு அழுக்கும் இல்லை அதைப்போக்க குளியலும் இல்லை என நினைக்குமோ! இவற்றில் ஒன்றோ கலவையோ அவரை சகித்துக் கொள்ள வைத்திருக்க வேண்டும். என்றாவது ஒரு பெண்விமர்சகர் தண்டபாணி குறித்து விரிவாக எழுதட்டும்.
சிவசு அலங்காரத்தம்மாள் உறவு. மருமகள் வந்த பிறகு, வீடே குறிப்பாக கடைசி இரண்டு பிள்ளைகள் அவமானத்தில் சுருங்கும் போது எதற்கு இந்த உறவு? உடம்பில் முடைநாற்றம், வேர்வை நாற்றம், வாயில் ஒரு நிரந்தர துர்கந்தம் என்று பக்கத்தில் உட்கார ஆணே தயங்குகையில், பணம், அழகு, அறிவு கொண்ட மணமான பெண், தன் வாழ்க்கையே கேள்விக்குறியாகும் என்று தெரிந்தும் சமூகஅந்தஸ்த்தில் கீழ்ப்படியில் இருக்கும் அவனை ஏன் தன் படுக்கையில் அனுமதிக்கிறாள்? இது போன்ற கேள்விகளுக்கு சம்பந்தப் பட்டவர்களிடமே விடையிருக்காது. தண்டபாணியை மட்டுமல்ல சிவசுவையும் ஒரு பேச்சில் அடக்குபவள் அலங்காரத்தம்மாள். எனவே அவளது விருப்புடன் கூடிய உறவு அது என்பதில் சந்தேகமேயில்லை.
அலங்காரத்தம்மாள் மனதளவில் வருந்தியிருக்காவிட்டால் தன் குழந்தைகளிலேயே அவள் மனதிற்கு மிகவும் நெருங்கிய அப்புவை வேதம்படிக்க அனுப்பியிருக்க மாட்டாள். வேதம் அவள் பாவத்தைச் சுட்டெரிக்கும் என்பது அவள் நம்பிக்கை. அப்புவின் காலில் விழுந்து பாவமன்னிப்பு கேட்க அவள் தயார். அப்புவால் அவள் செய்ததை ஏற்றுக் கொள்ளவும் முடியாது அவளை எதிர்த்து எதுவும் சொல்ல முடியாது. அவளுக்கும் தெரியும் அது. அதற்குப் பிறகு அவள் பேசவில்லை. அப்பு ஏம்மா இப்படி பண்ணினே என்று ஒரு வார்த்தை கேட்டிருந்தால் அவள் தரப்பை சொல்லியிருப்பாள், அழுதிருப்பாள், காலில் விழுந்து கதறியிருப்பாள். அப்பு அந்த சந்தர்ப்பத்தை அவளுக்குத் தரவில்லை.
அலங்காரத்தம்மாளின் மனதில் அப்புக்கு உச்சாணிக் கொம்பில் இடம். சேஷராமனின் மனைவி சேட்டுடன் அவன் வீட்டுக்குத் தான் போனாள். தன் வீட்டில் வைத்து அவள் செய்யவில்லை. இவள் தன் வீட்டுப் படுக்கையிலேயே இன்னொருவனை சேர்த்தவள். நாக்கில் பல்போட்டு அந்த வீட்டிலா பெண் எடுப்பேன் என்கிறாள். அதே போல் தான் இந்து விசயத்திலும். .! ” உன் கண்ணுக்கு பழசெல்லாம் புதுசாப்படாமே இருக்கணுமே” என்று துடிக்கிறாள். அவன் மனம் அவளிடத்தில் என்று தெரிந்ததும் கடைசியில் அம்மாபிள்ளையாய் இருக்கே என்கிறாள். அம்மா பழசைத்தான் புதுசாய் தேர்ந்தெடுத்தாள்.
திரும்பிவரும் அப்புவின் கண்களுக்கு இந்து நாணப்படுவது முதல்முறை தெரிகிறது. இந்து புதிதாக…. அழகாக இருக்கிறாள். இவன் இந்துவிடம் எத்தனை துருவிக் கேட்டாலும் அம்மா பற்றி பேசுவதில்லை. உன்னால் பாரம் தாங்கமுடியாது கல்லை என் தலையில் சுமத்து என்கிறாள். இந்து அப்புவுக்கு அம்மாவாகிப் போகிறாள்.
அலங்காரத்தம்மாளின் உயிர் எப்போதும் அப்புவைச் சுற்றியே. உடல் என்ன வேண்டுமானாலும் செய்யும். அப்புவின் நிழலில் கடைசிகாலத்தில்
பாவத்தைக் கரைத்து உயிர்விடுவது என்பது நடக்காதது என்று தெரிந்து விடுகிறது. அப்பு இந்துவை விட்டு, பாடசாலையை விட்டு வரப்போவதில்லை. அப்பு இல்லாது தண்டபாணி, சிவசு மற்ற குழந்தைகளிடம் இருந்து பெறுவதற்கு எதுவுமில்லை அவளுக்கு. உரையவிழ உணர்வவிழ உளமவிழ காசிக்குப் போய் உயிர்விடுதல் மட்டுமே ஒரே வழியாகப் போகிறது. உடல் யாருடன் வேண்டுமானாலும் சேரும், உயிர் எப்போதும் ஆன்மாவிற்கு நெருக்கமானவனுடன் மட்டுமே!அவன் காதலனானாலும் சரி மகனானாலும் சரி.
உரையாடல் தி.ஜா படைப்புகளின் பெரிய பலம். குறிப்பாக இந்து நாவல் ஆரம்பத்தில் தன் மனதைத் திறப்பது, அப்புவை வைத்துக்கொண்டே அலங்காரத்தம்மாளும் சிவசுவும் Coded languageல் பேசுவது. நம் அசிங்கத்தின் நடுவே அப்புவை இழுக்காதே என்று பூடகமாகச் சொல்கிறாள். நமக்குள் எல்லாம் முடிந்ததா என்ற சிவசுவின் கேள்விக்கு இல்லை ஆனால் சமயாசமயம் இல்லாமல் ஆசைப்படக் கூடாது என்கிறாள். அதே போல் அப்புவும் அம்மாவும் கடைசியில் பேசிக்கொள்வது. சின்னக் கவனக்குறைவு கதாபாத்திரங்கள் சொல்வதை முழுதும் புரியாது கடந்துபோக வைத்துவிடும். “காப்பிப் பொடி வாங்கிண்டு வரேன்னு போனார்” என்ற ஒரு வரியில் சிவசுவை சமாதானப்படுத்தி மீண்டும் தன் கட்டுக்குள் கொண்டு வரும் அவசரம் எத்தனை பேருக்குப் புரியும்?
இதுவும் ஒரு முக்கோணக் காதல்கதை.
அம்மாவாலும் இந்துவாலும் அப்பு இல்லாத வாழ்வை நினைத்துப் பார்க்க முடியாது. இந்து நீ இல்லை என்றானால் உயிருடன் இருக்க மாட்டேன் என்று சொன்னதைத் தான் கடைசியில் வேறு மொழியில் அம்மா சொல்கிறாள்.
ஆயிரம் பக்கங்கள் எழுதி கதாபாத்திரத்தின் மனஅவசங்களை, அலைக்கழிப்பை வாசகருக்குக் கடத்துவது ஒருவகையில் பெரிய திறமை என்று சொல்வதற்கில்லை. இருநூறுக்கும் குறைவான பக்கங்களில் இது போன்ற ஆழமான இலக்கியம் படைக்க முடியும் என்பது என்வரையில் பிரமிப்பே. சின்னக்குழந்தை கையில் தங்கும் அன்னம் போல் எடுத்துக்கொண்டு இவ்வளவு தான் தி.ஜா என்று யாரேனும் சொல்கையில் சிரிப்பு மேலிடுகிறது. நான் என்னால் செரிக்க முடியாத அன்னத்தைத் தட்டில் எடுத்தவன். வேறு யாரேனும் பானையில், குண்டானில் எடுத்திருக்கக்கூடும். கடைசியில் நாம் பார்த்த யானையை நாம் சொல்கிறோம்.