அம்மா வந்தாள் – தி.ஜானகிராமன்:
1966ல் வந்த நாவல் இது. அப்பு கதாபாத்திரத்தில் நடிக்க விருப்பம் என்று பலவருடங்கள் முன்பு கமல்ஹாசன் தெரிவித்த போது அவரது முதிர்ச்சியை நினைத்து அப்போது வியந்து பேசியது நினைவுக்கு வருகிறது.
சிறுவயதில் பாட்டியிடம் கேட்கும் கதைகளில் பேதமில்லை. எல்லாமே நல்ல கதைகள் தாம். ராட்சஷனிடமிருந்து இளவரசி தப்பி, இளவரசனை மணம் முடித்தால் நிம்மதியான தூக்கம். வளரவளர, வாசிக்க வாசிக்க ஆஜானுபாகுவான ஒன்றாம் வகுப்பு வாத்தியார் குறுகித்தேய்ந்தது போல் ஆகிப் போகிறார்கள் நிறைய எழுத்தாளர்கள். எங்கு சுற்றியும் ரங்கனை சேர்வது போல் தி.ஜா போல் வெகுசில மாஸ்டர்கள்.
அப்பு குழந்தையாய் வேதசாலையில் சேர்ந்தவன். பதினாறு வருடமாய் அம்மா உனக்கு பூரண ஆசீர்வாதம் செய்கிறாள் என்று கடிதம் தவறாமல் அப்பா எழுதும் வரிகளில் அம்மா அருள் பாலிப்பதாய் உருகுபவன். அவன் வீட்டுக்கு செல்லும் போதெல்லாம் ஒரு தனிமலர்ச்சியையும், பிரத்யேகப் புன்னகையையும் அவனுக்காக மட்டும் ஏந்தும் அம்மா. அம்மா அழகு. அம்மா கம்பீரம். அம்மா சிரிப்பது, நடப்பது, பார்ப்பது எல்லாமே ராணி மாதிரி. சிம்மாசனம் இல்லாத ராணி. அம்மா புடம் போட்ட தங்கம்.
இந்து கொள்ளை அழகு. அலாதி பிரியம். சிறுவயதில் அனாதையாகி அப்புவுடன் வேதசாலையில் வளர்ந்தவள். பன்னிரண்டு வயதில் திருமணமாகி வாழ்ந்தோம் என்று பெயருக்கு புகுந்தவீடு சென்று விதவையாக திரும்பவந்தவள். குழந்தையில் இருந்தே அப்புவின் மீதுதான் காதல் என்கிறாள் திடீரென்று. உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்வது போல் என்கிறான் அப்பு அவள் காதலை ஏற்கமறுத்து.
தண்டபாணி ஊருக்கெல்லாம் நல்லநாள் பார்த்து தருபவர். தங்கத்தாம்பாளத்தில் வைத்துத் தாங்குவது போல் ஒரு முதலாளி. ஹைகோர்ட் ஜட்ஜ், பாங்கு சேர்மன் என்று அவரிடம் முகம் சுருங்காமல் திட்டு வாங்கி வேதாந்தப் பாடங்களின் அர்த்தத்தைத் தெரிந்து கொள்ளும் சீடர்கள். எல்லாவற்றிலும் அதிகாரமாக, பீடத்தில் இருக்கும் தண்டபாணி ஏன் இதில் மட்டும் சகித்துக் கொண்டிருந்திருக்க வேண்டும்? அலங்காரம் என்றேனும் திரும்பி மொத்தமாக தன்னிடம் வருவாள் என்ற எதிர்பார்ப்பு மட்டுமா? உன்னை மன்னித்து தண்டிக்கிறேன் என்று சொல்லாமல் சொல்வதா!
தன்னிலையில் சொல்லப்படும் கதைகளில் கணவன்/மனைவியின் பிறழ்உறவு வாசகர்களை அதிகம் பாதிக்கும். அது ஒரு யுத்தி. அலங்காரத்தம்மாள் மிகக்குறைந்த நேரத்திற்கு தண்டபாணியின் கோணத்தில் கிடைக்கிறாள். மீதி முழுதும் அப்புவின் அம்மா என்ற கோணத்தில். அப்புவைக் கண்ணுக்குள் வைத்துப் பார்த்த அம்மா. அப்பு வளர்ந்தபின்னும் கன்றுக்குட்டி தான். அவனால் அம்மாவை வெறுக்கவோ கோபப்படவோ முடியாது. வேண்டுமானால் விலகி இருக்கலாம். எந்த நேரத்தில் அம்மாவைக் கட்டிக்கிறாப்பில என்று அப்பு சொன்னானோ, இந்து அம்மாவும் ஆகிறாள்.
இது அலங்காரத்தம்மாளின் கதை இல்லை. அவள் தரப்பில் எந்த நியாயங்களும் பேசப்படுவதில்லை. அவள் எதையும் மறுக்கவுமில்லை. குழந்தைகளுக்கு மணமாகி, வெளியில் தெரிந்து, எல்லாவற்றிற்கும் பிறகு ஏன் இந்த உறவு? நாம் யார் அதைக் கேட்க? அவளால் சிவசுவை விட்டு இருக்க முடியாது. சிவசுக்கும் கூட அப்படியே இருக்கலாம். அப்புவின் மீது ஏதோ அவளுடைய நம்பிக்கையை ஏற்றி பாவத்தைக் கரைக்கப் பார்க்கிறாள். அம்மாவின் விசயம் அப்புவின் எல்லா நம்பிக்கைகளையும், மதிப்பீடுகளையும் புரட்டிப் போடுகிறது. அம்மா அடுத்த நம்பிக்கையை நோக்கி நகர்கிறாள்.
இருநூறு பக்கங்களுக்கும் உள்ளாக இவ்வளவு கூர்மையான நாவலை எழுதுபவர் எப்பேர்ப்பட்ட கலைஞனாய் இருந்திருக்க வேண்டும்! உரையாடல்களிலும் அதன்பின் வரும் மௌனங்களிலும் இவ்வளவு ஆழத்தைக் கொண்டு வரும் இந்த எழுத்து எப்படி இவருக்கு வாய்த்திருக்கும்.! ” உன் கண்ணுக்கு பழசெல்லாம் புதுசாப்படாமே இருக்கணுமே” “உன் காலில் விழுந்து எல்லாம் பொசுகிண்டு விடலாம்னு நினைச்சேன். நீயும் அம்மா பிள்ளையா இருக்கே!” அம்மாபிள்ளையில் எவ்வளவு ஆழமான அர்த்தம்! நாவல் முழுதும் இதே தான். தி.ஜா மகாசமுத்திரம். முங்கி எழுந்து குளித்துவிட்டேன் என்று சொல்பவர்கள் அசடுகள்.