உயிர்த்தேன் – தி.ஜானகிராமன்:
உயிர்த்தேன் ஒரு கிராமத்தின் கதை. சிறிதும் பெரிதுமாய் நாற்பது வீடுகளே இருக்கும் சின்னக்கிராமம். அப்பாவின் ஊர், அவர் வர நினைத்து ஆசை நிறைவேறாது, சட்டென மரணித்த நினைவு அழுந்த மகன் வியாபாரத்தில் சம்பாதித்தது போதும் என்று வீடு, நிலம் வாங்கி இதே கிராமத்திற்கு வந்தபின் நடப்பதே கதை.
ஒவ்வொரு வரியில் அவரவர் குணாதிசயங்கள். சுக்கிரன் வக்கரித்தது போல் ஒரு ஊர். ஒருவன் வந்ததும் எல்லாமே மாறுகிறது. தரிசு நிலம் விளைநிலம் ஆகிறது. கழனிகள் நெல்மணிகளால் குலுங்குகின்றன. இடிந்த கோயில் கும்பாஷேகத்திற்குத் தயாராகிறது. காடு விளைகையில் பொறாமை, குரோதம், விரோதம் போன்ற களைகள் பிடுங்கி எறியப்படுகின்றன.
யாரை விதூஷகன் என எளிதாகக் கடந்து செல்கிறோமோ அவர்களே மற்றவர்களைவிட புத்திசாலிகளாக இருக்கிறார்கள். ஆமருவிக்கு ஊர் மொத்தமும் அறியாத இரகசியம் தெரிகிறது. அதையே சிலையாய் வடிக்கவும் தெரிகிறது. தி.ஜாவின் நாவல்களில் வழக்கமாக வரும் சங்கதி இது. பட்டும்
படாமல் புரணி பேசுவது போல் சொல்லும் வார்த்தை கடைசியில் கதையின் போக்கையே மாற்றும்.
புயல் போல் வரும், பிரியம் ஒன்றையே மதமாகக் கொண்ட அனுசூயா இதில் வந்து போகிறாள். மரப்பசு அம்மணியின் சாயல் முழுக்கக் கொண்ட அனுசூயா. இவள் தான் பின்னர் அம்மணி ஆகியிருக்கக்கூடும்.
ஒருகுடம் பாலுக்கு ஒரு துளிவிஷம் என பழனிவேல். விஷம் என்றால் தொண்டையில் சிக்கிக் கொண்டு முழுங்கவோ துப்பவோ முடியாத விஷம். படிப்பு கோழைத்தனத்தைச் சொல்லித் தரும். தனக்குக் கிடைக்காதது யாருக்கும் கிடைக்கக்கூடாது என சொல்லித் தரும். படிப்பு திருடனை மாற்றாது. அகப்படாமல் நூதனமாய் திருடச் சொல்லித்தரும். ஆனால் பழனிவேல் வித்தியாசமானவன். அம்மனுக்கு அவன் அளிக்கும் நைவேத்தியம்…………
செங்கம்மா நதி போல் பிரவாகம் எடுத்து வருகிறாள். எல்லோருக்கும் பிரியத்தைக் கொடுக்க நினைக்கும் எல்லா ஜீவன்களும் ஏதாவது கஷ்டத்தை அனுபவித்தாக வேண்டும். காந்தியை கடைசிவரை முஸ்லீம்களும் நம்பவில்லை, இந்துக்களும் நம்பவில்லை.
நீளமான காரைத்திறந்து அப்சரஸ் போல் இறங்கும் பெண்ணைப் பார்த்தால் பெருமூச்சு வரும். வீட்டுக்குப் போகும் வழியில் நமக்கு எங்கே கொடுத்து வைத்திருக்கிறது என்ற ஞானம் வரும். அதே கருப்பாய், குள்ளமாய், எத்தி நிற்கும் பல்லோடு நிற்கும் ஒருவனின் மனைவியாய் அதேபெண் சைக்கிளின் பின்கேரியரில் இருந்து இறங்கினால் வயிறு மட்டுமில்லை எல்லாமே எரியும். கடவுளுக்கு சாபம் கொடுப்போம். பாத்தியமில்லாதவன் அனுபவிக்கும் சொத்து போலத்தோன்றும். மனித சுபாவம். நாவலே இந்த உளவியலின் அடித்தளத்தில் எழுப்பப்பட்ட கட்டிடம். அதை உணர்ந்து கொள்வதில் கிடைக்கிறது இலக்கிய இன்பம்.