கச்சேரி – தி.ஜானகிராமன்:
ஆசிரியர் குறிப்பு:
காவேரி ஆற்றொழுக்கு மொழிநடையால் சிரஞ்சீவி ஆன கலைஞன். உரையாடல்களில், அதற்கிடையே பொதிந்திருக்கும் மௌனங்களின் சத்தங்களில் வாசகர்களை மயங்கவைத்த மந்திரவாதி. மீறல்களின் அழகியலை இலக்கியமாக்கிய எழுத்துச் சித்தன். வாழ்நாளில் ஒரே ஒரு எழுத்தாளரை மட்டுமே படிக்க முடியும் என்று நான் சபிக்கப்பட்டால், நான் சொல்லும் பெயர் தி.ஜாவாகத் தான் இருக்கமுடியும்.
உ.வே.சா அவர்கள் பெருவாழ்வு வாழ்ந்து 1942ல் மறைகிறார். ஏட்டுச்சுவடிகளை மீட்டெடுத்து, தமிழுக்குப் பல இலக்கியங்களை அச்சின் மூலம் நமக்குக் காணக்கிடைக்க வைத்த மகாமகோபாத்தியாயர். ஆனால் நம் காலத்தில் எழுதிய இந்த அற்புதக் கலைஞனின் சிறுகதைகளைத் தேடிக் கண்டுபிடிக்க இத்தனை சிரமங்கள் என்பது நமக்கெல்லாம் Eye opener. கவிஞர் சுகுமாரனுக்கு வந்தனங்கள்.
ஈசுவரத் தியானம்:
மீண்டும் மீண்டும் படித்துப் பார்த்தேன். குறுங்கதை Formatல் கச்சிதமாகப் பொருந்துகிறது. எழுதிய ஆண்டு 1938.
கடவுளே! கடவுளே!
புஷ்கரணி :
நம்பிக்கை என்பது எல்லாவற்றையும் புறம்தள்ளி விட்டு முழுமையாக நம்புதல். Trust is either zero percent or cent percent, there is no in between. திரௌபதி இரண்டு கைகளைத் தூக்கி வழிபட்டது போல்.
” இன்னும் வருடத்திற்கொருமுறை இந்த புஷ்கரணியின் பாசிகள் ஜன்ம நஷத்திரத்தைக் கொண்டாடும் வழக்கமுண்டு”
பூடகமாய் நையாண்டி செய்யும் இந்த மொழிநடை தான் நாம் பறி கொடுத்தது.
மகாமகக் குளத்தில் குளிக்க அசூயைப் படுபவனும், சடங்கிற்காக எங்கிருந்தோ வந்து முழுகிப் போவோரும் இல்லாத நம்பிக்கையை இருப்பதாய் கற்பிதம் செய்கிறார்கள். 1943ல் வெளியான கதை.
நர்மதையின் யாத்திரை:
இது நதியின் யாத்திரையா இல்லை பெண்ணின் யாத்திரையா! இரண்டிற்கும் பெரிய வித்தியாசமில்லை. தி.ஜாவின் கதைகளில் எப்போதும் பெண்கள் தான் யாரைச்சேர வேண்டும் என்று தீர்மானிக்கிறார்கள்.
ஜயத்தின் பயம்:
ஜயத்திற்கு பயம் இருப்பதாகத் தெரியவில்லை. சொல்ல வேண்டியதெல்லாம் தெளிவாகச் சொல்கிறாள். ராகவனுக்குத் தான் கொஞ்சூண்டு பயம்.
வித்தியாசம்:
பூனைக் காதலுக்கும், மனிதக் காதலுக்குமான வித்தியாசம். மோகம் முப்பது நாள், ஆசை அறுபது நாள்.
பணக்காரன்:
மகாலஷ்மி அவளுக்குப் பிரியப்பட்ட இடத்தில் தான் இருப்பாள் என்பார்கள். எவ்வளவு இறுக்கப் பிடித்தாலும் அவளுக்குப் பிடிக்கவில்லையென்றால் வீட்டில் வைத்திருக்க முடியாது.
நரை:
1948ல் வெளியான கதை. பழி ஓரிடம், பாவம் ஓரிடம் என்றானது. மன்னிப்புக் கேட்பது யார் என்ற கேள்வி தான் இன்னும் தொங்கி நிற்கிறது.
ஆனைக்குப்பம்:
ஆனைக்குப்பம் இப்போது இல்லை ஆனால் ஆனைக்குப்பத்தார் பிரிந்து ஊருக்கு ஒருத்தராய் சென்று, பிள்ளைகள் பெற்று ஊர் பாரம்பரியத்தை வளர்ப்பதாகக் கேள்வி.
தூக்கம்:
1948ல் வந்த கதை. புதிதாய் திருமணமாகி வரும் பெண்கள் குடும்ப சமன்நிலையைப் பெரும்பாலும் குலைப்பார்கள். கூட்டுக் குடும்பங்கள் இப்போது வெறும் தகவலாய்ப் போனது.
ராஜப்பா:
தி.ஜா கதைகளில் அடிக்கடி வரும் வைராக்கியத்தை விட்டுக் கொடுக்காத, சகல பலவீனங்களும் கொண்ட பலரில் ராஜப்பாவும் ஒருவர்.
அவப்பெயர்:
1949ல் வெளியான கதை. ஒரு எள்ளல் தொனியில் ஆரம்பிக்கும் கதை முடிகையில் வேதனையான கதை ஆகிறது. கண்ணுச்சாமி இந்த சம்பவத்தின் பின்னும் தன்னை மாற்றிக்கொள்ளவில்லை. அவர் கொலையே செய்தாலும் அது தான் நியாயம் என்று சொல்ல கைத்தடிகள். இறந்தவளுக்கு அவப்பெயர் என்பதை விட செய்த குற்றத்திற்கு சாட்சியாய் இருப்பது தான் கண்ணுச்சாமிக்குப் பொறுக்கவில்லை. அதை தி.ஜா கடைசிவரை கோடிட்டுக்கூடக் காட்டுவதில்லை இந்தக் கதையில்.
ஜீவனாம்சம்:
தி.ஜா தஞ்சாவூர் கும்பகோணத்தில், கிழவர்கள் கிளிபோன்ற இளம்பெண்ணை மணம் செய்ததைப் பார்த்துப் பாதிக்கப்பட்டிருக்க வேண்டும். கதைகளில் அடிக்கடி நிகழ்கிறது. “ஒரு தப்பு பண்ணினால் பல தப்புகள் பண்ண வேண்டியிருக்கிறது” என்ற வரியில் எத்தனை செய்திகள்! 1950ல் அமுதசுரபியில் வந்த போது அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியிருக்கும்.
அன்ன விசாரம்:
பிடித்த விளையாட்டுக்காரரின் Backhand smashஐப் பார்த்துக் கொள்ளும் ஆனந்தத்தைப் போல இந்தக் கதையை ரசித்துப் படித்தேன். அன்ன விசாரமிருந்தால் ஆயுள் முழுவதற்கும் அந்த விசாரத்திற்கே வாழ்க்கை சரியாய் போகும் என்பார் பட்டினத்தார். கிழவர் மருந்து கேட்பது கூட திருஷ்டிகழிப்புக்காகத் தான் என்று எனக்கு சந்தேகம். பட்டுத்தொழில் பற்றி எத்தனை கேள்விகள் கேட்டாலும் கடைசியில் சாப்பாட்டில் வந்து நிற்கும் கிழவர். கடைசியில் வரும் கிழவி இந்தவாழ்க்கையில் நகைமுரண்.
ஆறுதல்:
இரண்டு வேறுபட்ட நிகழ்வுகளை ஒரே கதையில் இணைக்கையில் நம்முடைய முதல் மதிப்பீடுகள் மாறி, அனுதாபங்களும் இடம் மாறுகின்றன. இது எல்லா காலங்களிலும் நடக்காததும் இல்லை. ஆனால் எங்கே, எப்படி உபயோகப்படுத்துவது என்பது இவருக்குக் கைவந்த கலை. பன்னிரண்டு மணிக்கும் மூன்று மணிக்கும் இடையில் நடந்தது! ஹூம்……. இப்படியும் மனிதர்கள்! 1953ல் வெளிவந்த கதை.
பரமபாகவதன்:
பரமபாகவதனைப் பார்த்தால் பரமனுக்கும் பயம். தகுதியில்லாதவர் சிபாரிசுக் கடிதங்களை வைத்து எல்லாம் பெறுவதை நையாண்டி செய்யும் கதை.
தர்மம்:
காலத்திற்கேற்ப மாறும் தர்மம்.
உண்டை வெல்லம்:
1958ல் வெளியான கதை. இன்னும் தமிழ் சினிமா திறமையை விட அதிர்ஷ்டத்தையே நம்பி இருக்கிறது. மகா கணபதிகள் வருவதும் இன்னும் நிற்கவில்லை. என்ன ஒரு உதாரணம்! அம்ரபாலி, மெக்தலின்……
சங்கீத சேவை:
அரைகுறை சங்கீத ஞானத்திற்கு கிடைக்கும் உலகளாவிய அங்கீகாரமும், கிடைக்கின்ற பதவிகளும்….. என்றோ சங்கீதத்திற்கு எழுதியது எல்லாவற்றிற்கும் பொருந்தும். தி.ஜாவின் வழக்கமான கதைகளில் இருந்து மாறுபட்ட கதை.
குழந்தை மேதை:
Child Prodigy ன் மறுபக்கம். குழந்தையின் கோணத்தில் எல்லாமே வேறுபடுவது மட்டுமல்லாது, எவ்வளவு வேகமாக அதன் சிந்தனை மாறுகிறது!
கோவிந்தராவின் மாப்பிள்ளை:
தங்கமான மாப்பிள்ளை.
திருப்பதிக்குப் போன மயில்சாமி:
பணம் ஓரளவிற்கு மேல் சேர்ந்தால் எவ்வளவு செலவழித்தாலும் அதை விடப் பலமடங்கு வந்து சேர்ந்து விடும். பணமே பணத்தை அழைத்து வருவது.
எருக்கம் பூ:
தி.ஜா எழுதிய கதையா!
ஸீடீஎன்………-சிறுகதை- தி.ஜானகிராமன்:
ஹாஸ்யக்கதை என்று குறிப்பு சொல்கிறது. தற்கால சூழ்நிலையில் இந்தக் கதைக்கு வேறு வண்ணம் கிடைக்கிறது. நேற்றைய நகைச்சுவை இன்றைய சோகங்கள் என்பது தனிமனிதனுக்கு மட்டுமல்ல தேசத்திற்கும் பொருந்தும் போலிருக்கிறதே.
கச்சேரி:
கண்கள் பனிக்காமல் கதையைப் படித்து முடிக்க முடியாது. தி.ஜாவைத் தவிர வேறுயார் இந்தக் கதையை எழுதமுடியும்!
நிலவு கருமேகம்-
குழந்தைகள் மனதளவில் வெகுவாக வளர்ந்து விடுகிறார்கள், நம் நினைவில் அவர்கள் இன்னும் குழந்தைகள் என்ற எண்ணம் இருந்த போதும் கூட.
பூச்சி டயலாக:
கரப்பான் பூச்சி பேச்சுக்கும் கட்சிக்காரர்கள் பேச்சுக்கும் அதிக வித்தியாசமில்லையே!
காபி:
Nostalgia வந்து மனதை மூழ்கடிக்கையில் வர்க்கபேதங்கள் கண்ணில் படுவதில்லை.
“………,……….”
தி.ஜா எழுதிய கதையாக நம்ப முடியவில்லை. பரிசோதனை முயற்சியா!
இருபத்தெட்டு கதைகள் இதுவரை தொகுப்புகளில் வெளியாகாதவற்றை அரும்பாடுபட்டு சேகரித்திருக்கிறார்கள். தி.ஜாவின் தரத்திற்குப் பொருந்தாத கதைகள் சிலவும் தொகுப்பில் உண்டு. பிரியத்தில் கரைக்கும் ஸ்நேகிதம் ஆவியாய் போய் பல வருடங்கள் கழித்து, ஒரு நாள், ஒரே நாள் ரத்தமும் சதையுமாய் எதிர்வரும் வரம் கிடைத்தவன், பேசுவதா, கேட்பதா, தொடுவதா, தொடர்வதா என்ற குழப்பத்தில் ஆழ்ந்ததைப் போன்ற தடுமாற்றமும், குதூகலமும் உங்களுக்கும் வரக்கூடுமெனில் தி.ஜா தன் எழுத்தால் உங்களையும் பாதித்திருக்கிறார்.
சிறுகதைகள்
பிரதிக்கு:
காலச்சுவடு பதிப்பகம் 95005 74295
முதல்பதிப்பு ஜனவரி 2020
விலை ரூ 275.