சக்தி வைத்தியம் -:தி ஜானகிராமன்:
ஆசிரியர் குறிப்பு:
நான் யார் இவர் குறித்து குறிப்பெழுத? பல எழுத்தாளர்கள் கட்டாந்தரையில், மணலில் நடந்து கடக்கையில் ஈரம் காயாத சிமெண்ட் தரையில் காலடித்தடங்களைப் பதித்த கலைஞன். என் மனவெளியில் அந்தக் காலடித்தடங்களின் ஊடாக எனக்கு பரிட்சயமில்லாப் பெண்களுடன் நெருங்கிப் பழகி களித்திருந்தேன் நான். 1978ல் வெளிவந்த சிறுகதைத் தொகுப்பு இது. 1979க்கான சாகித்ய அகாதமி விருதை வென்றது.
கங்கா ஸ்நானம்:
ஏழு வயதில் மணமுடித்து ஒன்பது வயதில் விதவையாகி சகோதரர்களின் குடும்பத்தில் தொண்டூழியம் செய்து, எண்பது வயதுக்கு மேல் சகோதரர்களுக்கு வயதாகி விட்டது என்று முதியோர் இல்லத்தில் சேர்க்கப்பட்ட அந்தப் பெண்ணைப் பார்த்ததும் கங்கா ஸ்நானம் அக்காவைப் பற்றி தி.ஜா எழுதிய வரி தான்நினைவுக்கு வந்தது. “அர்த்தமில்லாமல் பிறந்து- வாழ்ந்து- மடிந்து…”
ஒரு துரோகம் தான் கதைக்கரு. சின்னசாமி காசிக்குப் போனாலும் கருமம் தொலையாமல் துன்பமிகஉழன்று தவிக்கையில், அவர் மனைவி (அவர் பெயர் கூட கதையில் இல்லை) எவ்வளவு எளிதாக கடந்ததை மறந்து கடவுள் நாமத்தைச் சொல்கிறார். கடைசியில் கணவருக்குச் சொல்லும் அறிவுரையைப் பாருங்கள். தி.ஜா புல்லைக்கிள்ளிப் பெண் என்று சொன்னால் கூட. சௌந்தர்யம் குறையாது வெட்கச்சிவப்பு சிவக்குமோ!
தீர்மானம்:
இந்தக்கதைக்கு எந்த விமர்சனமும் நியாயம் செய்ய முடியாது. சிறுகச்சிறுகச்சிறுகச்சிறுக விசாலி என்னும் சிறு பெண்ணைத் தொடர்கிறோம். விசாலி கழுத்தில் இருக்கும் திருமாங்கல்யத்தைக் கடித்துக் கொண்டு சோழி விளையாடுகிறாள். அத்தையிடம் புக்ககம் போகாமல் எவ்வளவு நாள் விளையாடுவாய் எனத் திட்டு வாங்குகிறாள். கூட்டிச்செல்லப் புக்கக மனுஷாள் வந்ததும் முன்னால் வர வெட்கப்படுகிறாள். கல்யாணத்தில் அவள் அப்பாவிற்கும் புக்கக மனுஷாளுக்கும் பிரச்சினை. எதற்காக வந்திருக்கிறார்கள் இப்போது? இரண்டு நிமிடங்களில் பத்துவயதுப்பெண் பெரியமனுஷியாகி நிற்கிறாள். அத்துடன் கதை முடியவில்லை.
வெறுப்பு மாறாததும், உடைந்த கண்ணாடியாய் உறவு ஆனதும், தந்தையின் ஆசீர்வாதமுமாய் கதை முடிகிறது. “உலகத்தாயைக் கண்ட மோனத்தில் அந்த உள்ளங்கள் ஒடுங்கிக் கிடந்தன”. இதில் வரும் அப்பா, அத்தை, ராதா, ராதாம்மா, பெரிய மாமனார் என்று தெளிவான கதாபாத்திரங்களுடன் பதினோரு பக்கத்தில் என்ன ஒரு அழகிய சித்திரம்! குழந்தை மணத்தை எதிர்க்க நூறு பிரச்சாரங்கள் தேவையில்லை இந்த ஒருகதை போதும். ஆனால் இது குழந்தை மணத்தைப் பற்றியே பேசவில்லை. உறவுகளுக்குள் சிகல்களையும், அதே உறவுகளுக்குள் இருக்கும் நெகிழ்வையும் பேசுகிறது. தமிழில் இதுவரை வந்த தலைசிறந்த கதைகளில் ஒன்று.
அட்சராப்பியாசம் ஒரு வித்தியாசமான கதை. சம்பந்தமில்லாதது போல் பதுங்கியிருக்கும் ஒரு தகவல் கதையின் மர்மமுடிச்சை அவிழ்க்கும் பாணியை அப்போதே கையாண்டிருப்பார் தி.ஜா.
கோதாவரிகுண்டு 1961ல் எழுதியிருக்கிறார் தி.ஜா. 2020ல் சில சிறுகதைகளைப் படித்தால் நாம் அறுபது வருடம் பின்னோக்கிப் போனது போல் தோன்றுகிறது.
வீடு சிறுகதையல்ல. குறுநாவல். நனவோடையும் நடப்புமாக நகரும் கதை. 1964ல் எத்தனை பேர் இதை முழுமையாக உள்வாங்கி இருக்க முடியும். கதையின் முடிவில் ஒரு Twist இருக்கிறது ஆனால் அதற்கான காரணம் சொல்லப்படவில்லை.
விளையாட்டு பொம்மை ஒரு மகா புத்திசாலிக்கு Alzheimer வந்ததை சொல்லிக் கொண்டே போய் சடக்கென்று ஒரு காதல்கதையாய் மாறுகிறது.
தி.ஜாவின் மொழிநடை அதிமதுரம்:
“அவள் உள்ளே விரைந்த போது தன் பிராணனே இன்னொரு உடம்பெடுத்து விரைவது போலிருந்தது”.
” அச்சாரம் கொடுத்து பண்ணிணாற்போல் படைத்து விட்டு, அதிருஷ்டத்தையும், புத்தியையும் கழித்துவிட்டு….சை ! கடவுள் இவ்வளவு சராசரிக்குக் குறைவான படைப்பாளியா”
” முந்தாநாள் உங்க டீச்சரம்மா ஒரு ரசம் பண்ணாளே பாரு! சமுத்திரராஜாவே வந்து வச்சாப்பில இருந்தது.”
மொத்தம் 12 கதைகள் ஆனால் ஏதோ வேறு உலகிற்கு போய் வந்த பிரமிப்பு. ஒவ்வொரு முறை தி.ஜாவின் சிறுகதைகள் படிக்கும் போது இவர் இன்னும் சிறுகதைகள் எழுதியிருக்கலாமே என்று தோன்றும். நாவல் படிக்கையிலும் அப்படித்தான். ஒவ்வொரு கதையிலும் எவ்வளவு Variety, ரத்தமும் சதையுமாய் கண்ணெதிரே நடைபோடும் மனிதர்கள், அவர்கள் பலவீனங்களையும் பரிவுடன் நம்மை நோக்க வைக்கும் மொழிநடை, அன்பு, மனிதநேயம், நுட்பமான உணர்வுகளை அலட்டாமல் புரிந்து கொள்பவர் புரியட்டும் என்று சொல்லும் கதைபாணி…… தி.ஜாவைப் படிக்காதவர்கள் வாழ்வின் சில உன்னத தருணங்களை இழக்கிறார்கள். தி.ஜா வால் மரணிக்க முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை.
இப்பிரதி:
மீனாட்சி புத்தகநிலையம்
முதல்பதிப்பு 1978
விலை ரூ 6.50.
இவரது சிறுகதைகள் முழுத்தொகுப்பு:
காலச்சுவடு பதிப்பகம்
முதல்பதிப்பு 2014
விலை ரூ 990.