செம்பருத்தி- தி.ஜானகிராமன்:
பதின்மவயதில் கருப்புவெள்ளைத் திரையில் பத்மினி என் ஆள் என்றால் பக்கத்தில் இருப்பவன் உமிழ்நீர் விழுங்குவான். அதே வசனத்தை ஜமுனாவிற்கு அவன் சொல்கையில் நான்……அப்படித்தான் ஆகிப்போகிறது தி.ஜாவைத் தொடர்ந்து படிப்பது. ஒன்றை மீறி ஒன்று. ஒன்றுக்கு தேவிகா மூக்கென்றால் இன்னொன்றிற்கு E V சரோஜாவின் கண்கள். முழுசரணாகதி என்பது வைணவத்தத்துவம் என்று யார் சொன்னது?
அந்தரத்தில் கயிற்றின் மேல் நடந்து நடந்து தி.ஜாவிற்கு நடை பழக்கமாகி விட்டது. நாம் தான் அவர் கீழே இறங்கும் வரை உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு. குஞ்சம்மாவின் படிய இழுத்து வாரிய தலையும், புன்னகையும், நாணத்தையும் கனவில் கண்டேனா, கதையில் படித்தேனா இல்லை நேரில் என்னிடம் தான் செய்தாளா என்று ஒரு தெளிவில்லாத மதிமயக்கம்.
சின்ன அண்ணன் குத்தும் சொரசொர தோலுக்கு உள்ளிருக்கும் தெவிட்டாத சுளை. நிறையப்பேரைப் பார்த்திருக்கிறேன், ஆர்ப்பாட்டம், அதிகாரத்திற்கு உள்ளே இலைகள் மறைத்த பூவெனப் பாசம். பெரியண்ணன் உலகம் வேறு. உச்சாணிக் கொப்பில் இருந்து கிளைமுறிந்து விழுந்தும் உயிர் போகாதது போல் ஒரு வாழ்க்கை. சில சமயங்களில் சின்னவயதிலேயே செத்துப் போய் விடுபவர்கள் அதிருஷ்டசாலிகள்.
அண்ணாக்குட்டியும் இன்னும் ஐந்தாறு பைத்தியங்களும் கடைவீதியைக் கலகலக்க வைக்கிறார்கள். அண்ணாக்குட்டிக்கு கொஞ்சம் அதிகம் நமக்கெல்லாம் கட்டுக்குள் இருப்பதால் நாலுபேர் முன்பு கௌரவமாக உலாத்தி வருகிறோம்.
பெற்றவர் செய்து வைக்கும் திருமணஉறவு பற்றி தி.ஜாவின் நாவல்கள் நிறையவே பேசுகின்றன. இந்த நாவலிலும் கூட மூன்று சகோதரர்கள், மூன்று செய்து வைக்கப்பட்ட திருமணங்கள், ஒருத்தனுக்கு வரம், ஒருத்தனுக்கு சாபம் இன்னொருத்தனுக்கு உண்மை தெரியாமல் செத்துப் போனதால் வரமா, சாபமா என்றே தெரியாது.
சொல்லாத சொல்லுக்கு விலையேதுமில்லை என்பது மட்டுமில்லை சொல்லாத சொல் உருகி நிற்கும் உறவையும் இல்லை என்று ஆக்கும். இந்த ஒரு அந்தரங்கத்திற்குக் கூட நான் பாத்யமில்லையா என்று குஞ்சம்மா கேட்கும் கேள்வியில் மறைந்த நுட்பத்தை எத்தனை பேரால் கண்டு கொள்ள முடியும்.
தி.ஜாவின் நாவல்களில் நான் எடுக்கத் தயங்குவது இந்த நாவல். தலைசிறந்த நாவல்களில் ஒன்று. ஆனால் நீண்ட தாம்பத்ய வாழ்வின் ஏற்ற இறக்கங்கள், அர்த்தமில்லாக் காதலில் வாழ்க்கையைத் தொலைத்தல், இருபது முப்பது வருடங்கள் பின்னர் செய்தது சரியா என்று அலமலந்து போதல், வாழ்க்கையின் நிலையாமை என்று ஒரு வெறுமை சூழ்ந்து கொள்ளும். எல்லாமே நிறைந்து, சுகமாக வாழ்ந்தார்கள் என்பதற்கு தேவதை கதைகள் தான் படிக்கவேண்டும் இலக்கியத்தில் சாத்தியமில்லை. பெரிய அண்ணியை ஒன்றுமில்லாமல் நம்முன் நிறுத்தியவர், குஞ்சம்மாவையும், புவனாவையும் கொஞ்சமாகத் திறந்து காண்பிக்கிறார். முதல்முறை படிக்கையில் அவர்கள் மனஓட்டத்தின் திக்கு புரியாமல் திணறிய ஞாபகம். உரையாடல்கள்……….. லலிதாவை தலை முதல் கால்வரை ஆயிரத்தெட்டு நாமங்களால் அழைத்தும் சலிக்காதது போல் திரும்பத்திரும்ப சொல்லித்தான் ஆகவேண்டியதாகிறது.