நளபாகம் – தி.ஜானகிராமன் :
தி.ஜாவின் மற்ற நாவல்களைப் போலவே இதுவும் சாத்வீகமாக, வடக்கே யாத்ரா ஸ்பெஷல் ரயில் பயணம், ரயில் சிநேகிதம், வெண்பொங்கல், இட்லி, பஜ்ஜி போன்ற பண்டங்களைப் பிரமாதமாக சமைக்கும் காமேச்வரன் என்ற தலைமை பரிசாரகன் என்றே ஆரம்பிக்கிறது.
தி.ஜா நாவல்களில் பலவிதத்தில் இந்த நாவல் தனித்துவமானது. இந்தியத் தொன்மத்தில் இருபாதங்களும் மூழ்கிப்போகும்படி அழுந்தக் கால்பதித்த நாவல் இது. சமையல் கலை விஸ்தாரமாகப் பேசப்படுவது இந்த நாவலில். குழந்தையின்மையின் மனக்கிலேசங்கள் மட்டுமன்றி ஏதோ ஒரு வகையில் குழந்தைகளைச் சுற்றியே இந்த நாவல் முழுதும் வளைய வருகிறது.
ரங்கமணியின் விசனம், நோயாளிக் கணவன், நிறையாத தாம்பத்யம், குறுகிய மணவாழ்வு தாண்டி குழந்தை வயிற்றில் பிறக்கவில்லை என்பதையே சுற்றி வருகிறது. வழிவழியாய் வாரிசு பிறக்காத குடும்பத்தில் வழியில்லாது தள்ளப்பட்டது போல் ஒரு வாழ்க்கை ரங்கமணிக்கு.
சோதிடம் என்பது விஞ்ஞானமா? கணிதமா? இல்லை நம்பிக்கையா என்பதற்குச் சரியான பதில் எப்போதும் கிடைக்காது. இளங்கோவடிகள் சோதிடத்தைப் பொய்யாக்கத் துறவியானார் என்று படித்து வளர்ந்தும், நம்பிக்கைக்குப் பஞ்சமின்றி நரபலிகள் இன்றும் தொடர்கின்றன.
ரங்கமணிக்கு சோதிட பலனில் ஒரு வெளிச்சக்கீற்று மட்டும் தெரிகிறது. காமேச்வரன் தியானத்தில் இருந்த கோலம் அவளுக்கு முழு வெளிச்சத்தைக் கொண்டு வந்து விடுகிறது. அதனாலேயே அவள் கண்ணுக்கு காமேச்வரன் பிள்ளையாகத் தெரிய ஆரம்பிக்கிறான். அவனும் அம்மா இல்லாது, அவள் நினைவில் ஏங்குகிறவன். அவனுக்கும் அம்மா கிடைத்துவிடுகிறாள்.
தி.ஜாவின் நாவல்கள் அநேகமாக சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்தைக் களமாகக் கொண்டிருக்கும். கிராமங்களில் கூட்டுக்குடும்பங்களில் அந்த காலகட்டங்களில் காப்பாற்றப்பட்ட ஒரு ரகசியமே இந்தக் கதையின் கரு. நேரடியாகச் சொன்னால் சங்கடம் என்று இவர் ரிஷி காலத்திய கதையைச் சொல்லி இருக்கலாம். இன்றைய காலத்தில் கழுதைப்பாதை நாவலில் செந்தில் குமார் நேரடியாகவே சொல்கிறார்.
எண்பதுகளின் ஆரம்பத்தில் வெளிவந்த நாவல் இது. அப்போது செயற்கை கருத்தரிப்பு முறையின் Success rateக்காக செய்யும் திரை மறைவு வேலைகள் பற்றிய செய்திகள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. யீண்டும் ஒரு கரணம் தப்பினால் மரணம் என்ற கதையமைப்பு. பங்கஜத்தை குறிப்பிடுகையில் அவள் எந்த ஜாதி என்ற குறைந்தபட்ச சந்தேகத்திற்கும் வழிவகுக்காத வகையில் அவளது உடையைப் பற்றி சொல்கிறார். பெரிய எதிர்ப்பு எதுவும் இந்த நாவலுக்கு வந்ததாக நினைவில் இல்லை. வரம் தருபவனை அற்ப வேலைக்கு அழைத்தது ரங்கமணியின் அறியாமை அதற்கு ஒத்துக் கொண்டது பங்கஜத்தின் அறியாமை, காமேச்வரன் கூடுவிட்டு துரைக்குள் புகுந்ததைத் தெரிந்து கொள்ளாதது ஊரின் அறியாமை. சிறிது பயிற்சியில் இவரது மொழிநடையைக் காப்பி அடிக்கலாம். கற்பனையும் யதார்த்தமும் எங்கே கலக்கின்றன என்று வாசகனைத் திணற வைக்கும் எழுத்தில், அழகியலும், கலைநுட்பமும், பூடகமான உரையாடலும் கலந்து எப்படி எழுதமுடியும்? இனிமேல் யார் இதைப்போல எழுதமுடியும்?