மரப்பசு- தி.ஜானகிராமன்:
தமிழ் சினிமாவிற்குப் பொறிகள் எங்கெல்லாமோ இருந்து கிடைக்கும். உலகத்தின் மொத்த அவலத்தையும் பார்த்து அரங்கேற்றம் பிரமிளா வாய்விட்டுச் சிரிப்பது அம்மணியிடமிருந்து கற்றுக் கொண்டதாகத் தான் இருக்கும்.
பெரும்பாலான ஆண்களுக்கு எதிர்ப்படும் எல்லாப்பெண்களையும் தொடவேண்டும் என்று மனதிற்குள் அடித்துக் கொள்ளும். தொடுதலில் என்ன உணர்வைக் கடத்த முடியும்? ஆயிரக்கணக்கான பெண்களின் கைகுலுக்கிய பின் அது ஒரு கடமை போல், யானை தும்பிக்கையை நீட்டுவது போல் ஆகிப்போனது. பெரும்பான்மையான இந்தியப்பெண்கள் உடல் கலக்கும் முன் உணர்வில் கலக்க விரும்புகிறார்கள். அதனாலேயே அம்மணி வித்தியாசமான பெண் ஆகிறாள். பள்ளியில் உடன்படிக்கும் பையனைத் தொட்டுத் தலையில் தைலம் தேய்த்தால் அது சர்வஜீவிகளின் மேலான பிரியம் என்று யார் புரிந்து கொள்வார்கள்!
தி.ஜாவின் நாவல்களில் அதிக தத்துவார்த்தமும், சமூகத்தை விட்டு முற்றிலும் விலகிநிற்கும் முதிர்ச்சியும் கொண்ட எழுத்து இந்த நாவல். லோகம் மொத்தமும் அன்பைப்பேணக் கட்டிக்கொள்ளச் சொல்பவன் தன் மனைவியின் கையைத் தொட்டால் கோபித்துக் கத்துகிறான். உலகத்தில் இருக்கும் எல்லோரையும் கட்டித் தழுவ வேண்டுமென்றால், அழுகிச் சொட்டுகிற நோயாளியிடம் அதே பிரியம் இருக்குமா? இல்லை என்றால் அது உண்மையில் பிரியமா? ஒட்டிக்கொள்ளும் நோயைக் கொண்ட கைக்குழந்தையை வாரி மடியில் போட்டுக்கொள்ளும் தாயின் பிரியம் எத்தகையது? கேள்விகள்… கேள்விகள்….. கேள்விகள்.
சிறுபெண்ணாக இருந்ததிலிருந்து அம்மணியின் பயணம் இது. அவளால் நிலையாக, நிம்மதியாக ஒன்றில் அமர்ந்து ஆசுவாசம் கொள்ள முடியவில்லை. உலகின் எத்தனையோ நாடுகளில் ஆடிய பின் எதற்காக ஆடுகிறோம், எதற்காக இப்படி எல்லோரும் விழுந்துவிழுந்து ரசிக்கிறார்கள் என்ற கேள்வி எழுகிறது. ஆட்டத்திற்கு மட்டுமில்லை இது. ஐம்பது வயதில் தான் ஆடுவது புரிபட ஆரம்பித்தது ஆனால் ஆடமுடியவில்லை என்ற கூற்றை வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும் பொருத்திப் பார்க்கலாம்.
ஸ்ராட்ஃபோர்டில் ப்ரூஸ்ஸூக்கும் அம்மணிக்கும், நடப்பதும் அவர்கள் பேசுவதும், லண்டனில் பிக்கால்டி சதுக்கத்தில் நடப்பதும், கோபாலி மீது மரகதம் காட்டும் பரிதாபமும், இன்றைய காலகட்டத்தில் கூட நிறையப்பேருக்கு ஜீரணித்தல் சிரமமாய் இருக்கலாம். எச்சில் என்னை இனி விரட்டாது என்று ப்ரூஸ் எளிதாகச் சொல்லி விடுகிறான்.
இது அம்மணியின் பயணம். ஏதோ ஒரு நிலையில் அவள் பயணம் முடிந்ததாய் நினைத்துக் கொள்கிறாள். அவளைக் கூர்ந்து கவனிக்கையில் என்னுடைய அனுமானத்தில் அவள் பயணம் நிற்கப்போவதாகத் தோன்றவில்லை. உலகத்தை எல்லாம் அணைத்துக் கொள்ளும் லோகமாதா போல் பிரியம் அவளுடையது. பிரியத்தின் பெருவாகத்தில் சரீர சம்பந்தம் சாதாரண விஷயமாகிப் போகிறது அவளுக்கு. சமூகம் வகுத்த நெறிமுறைகளைப் பார்த்தால் அவளுக்கு சிரிப்பு வருகிறது. நூல் வெளியாகையில் அவளைப் பார்த்தும், தி.ஜாவைப் பார்த்தும் பலர் சிரித்தார்கள். தி.ஜாவின் நாவல்களிலேயே எந்த பயமுறுத்தும் டெர்மினாலஜி இல்லாமலேயே நவீனத்துவம் வாய்ந்த நாவல் இது. நாவல் முழுதும் அம்மணி மொத்த ஆண்களையும் சவுக்கடி விளாசுகிறாள். புரிந்ததோ புரியவில்லையோ மரகதம் கருப்பு ஒட்டிக்கொள்ளும் என்று பயமுறுத்தியது போல் அம்மணி பக்கம் நிற்க இன்றும் பயப்படுகிறார்கள்.