மரப்பசு எழுபதுகளின் தொடக்கத்தில் கணையாழியில் தொடராக வெளிவந்தது. ஐம்பது வருடங்கள் முடிந்து விட்டது. ஒரு நூலைப் பற்றி நாம் புரிந்து கொள்ள, அந்தக்கால கட்டத்திற்கு பயணம் செய்வது ஒன்று மட்டுமே சரியான வழியாய் இருக்கக் கூடும். புதுமைப்பித்தன், தி.ஜா உள்ளிட்ட பலர், அவர்கள் காலத்திற்கு முன்னான கதைகளை அழகியலுடன் எழுதியதால், அவர்களை சிறந்த இலக்கியவாதிகள் என்கிறோம், 2020ல் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி எல்லாவற்றையும் பார்த்தபிறகு, சமூகம், நாகரீகம் சகல மாற்றங்களையும் அடைந்த பிறகு இன்றைய காலத்துலாக்கோலைத் தூக்கி, அன்றைய படைப்பை எடைபோடுவது எவ்வளவு சரி!
ஐம்பது வருடம் முன்னர் பெண்களின்
சமூகஉறவு எவ்வாறு இருந்தது? தனிப்பட்ட பாலியல் உறவு எப்படி இருந்தது? நம் அன்னையர்களில் அநேகம்பேர் விட்டத்தைப் பார்த்துக் கொண்டே அந்தப்பொழுதைக் கழித்தவர்கள். நாற்பது வருடம் முன்னர், முதன்முதலாகப் பழகும் போது, மனதின் சந்தேகம் வார்த்தையில் தெரியாது கவனமாகப் பார்த்துக்கொள்ளாத பெண்ணையே நான் பார்க்கவில்லை. சிறிது, என் இஷ்டப்படிதான் நடப்பேன் என்று கிளம்பிய பெண்கள், தாசி என்பதற்கு நேரிடைச் சொல்லில் அழைக்கப்பட்டார்கள். ஒருவரை விட்டு ஒருவரைத் தேடிய பெண் என்பவள், யார் அழைத்தாலும் வருவாள் என்று சமூகத்தில் பொதுவான கருத்து இருந்தது. ( எல்லாமே சரியாக, முறையாக நடந்தது என்று சொல்ல வரவில்லை, எல்லாமே மூன்றாம் பேருக்குத் தெரியாமல் ரகசியமாக நடந்தது.)
மரப்பசு அம்மணி, உயிர்த்தேன் அனுசூயாவின் மறுவடிவம். சுதந்திர சிந்தனை கொண்டவள். எந்த சமூக நியதிகளுக்கும், கட்டுப்பாடுகளுக்கும் கட்டுப்படாதவள். என் உடல் என்னுரிமை என்பதை ஐம்பது வருடங்களுக்கு முன் கூகுளில் தேடாது சொன்னவள்.
அவள் ஒவ்வொருவராக, பெரியப்பா, பெரியம்மா என்று ஆரம்பித்துக் கடந்து செல்கிறாள். கோபாலியைக் கடந்து செல்ல அவள் மனதில் ஒரு தடை. ஒவ்வொருவருக்கும் காரணமேயின்றி, இன்னொருவரின் மேல் இருக்கும் பிடிப்பை மற்றவர்களால் அறிதல் இயலாது. லண்டனில் ஏற்பட்ட அனுபவம், அவள் மனமாற்றத்திற்குக் காரணமாகிறது. வயதாகிறது என்பதை உணரத் தொடங்குகிறாள்.
கோபாலியை நிரந்தரமாகக் கடக்க, பட்டாபியுடன் சேர்தல் மட்டுமே ஒரே வழி. ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.
பட்டாபியும் கூட ஆள்பவன் இல்லை, ஆட்டுவிக்கப்படுபவன்.
அம்மணியின் முடிவு பட்டாபியுடன் சேர்வது. நான் பொறுமையாக இருக்கிறேன் என்று போகும் முன்கோபிகள் எத்தனை முறை பொறுமையாக இருந்திருக்கிறார்கள்.
இனி மாமியாருடன் சண்டை வேண்டாம் என்று எத்தனைபேர் அந்தமுடிவைக் காப்பாற்றி இருக்கிறார்கள்? இனி அவன் முகத்தில் விழிக்கக்கூடாது என்ற உறுதி எத்தனை தரம் கைகூடியிருக்கிறது? இத்தனை காலம் வெகு சுதந்திரமாய் இருந்த அம்மணி( யோசித்துப் பாருங்கள், அவள் stray sexக்கு கூட முயன்றுவிட்டாள்) வெள்ளிக்கிழமைகளில் தலைக்குக் குளித்து, சமையல் செய்து, பட்டாபி வரவை எதிர்நோக்கி, சாயங்காலங்களில் காத்திருக்கப் போகிறாளா? கதைகள், பக்க அளவில், ஏதோ ஒரு இடத்தில் முடிகின்றன. அம்மணி அதன்பிறகு முப்பது வருடம் பட்டாபி காலை அமுக்கிக் கொண்டு வாழ்ந்து முடித்தாள், சுபம் என்று எழுதியிருந்தாரா தி.ஜா! உருவாக்கிய Frankenstin உயிர்குடிக்க வந்தது போல் தானா அம்மணி தி.ஜாவிற்கு?
தி.ஜாவின் நாவல்களிலேயே எந்த பயமுறுத்தும் டெர்மினாலஜி இல்லாமலேயே நவீனத்துவம் வாய்ந்த நாவல் இது. நாவல் முழுதும் அம்மணி மொத்த ஆண்களையும் சவுக்கடி விளாசுகிறாள். புரிந்ததோ புரியவில்லையோ மரகதம் கருப்பு ஒட்டிக்கொள்ளும் என்று பயமுறுத்தியது போல் அம்மணி பக்கம் நிற்க இன்றும் பயப்படுகிறார்கள்.
விவாதங்கள், எதிர்வினைகள் இவற்றில் நம்பிக்கை இழந்து பல வருடங்கள் ஆனது. எல்லோருக்கும் அவரவர் அரசியல், வாழ்வாதாரத்தைக் காப்பாற்றிக் கொள்ளும் யத்தனங்கள்.
இதில் கலந்து கொண்ட யாருக்கும் எந்த உள்நோக்கமும் இல்லை என்பதாலேயே, இந்த விளக்கம். இந்த விளக்கம் கூட சரியில்லாது இருக்கலாம். கடைசியில் அவரவர் கைமணல் அவரவர்க்கு.