மோகமுள்- தி. ஜானகிராமன்;
தமிழில் பூரணத்துவம் கொண்ட நாவல்கள் வெகுகுறைவு. முழுமையான நாவல் என்கையில் எனக்கு முதலில் வரும் பெயர் மோகமுள். சிறுவயதில் இருந்து தொடர்கதையே நான் படித்ததில்லை. தொடர்கதை ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும் ஒரு செயற்கைத்தனம் இருக்கும். நான் பிறப்பதற்கு வெகுகாலம் முன்பு தொடர்கதையாக வந்த ஒரு நாவலை சராசரியாக ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை கடந்த நாற்பது வருடங்களாகப் படித்துக் கொண்டிருக்கிறேன்.
மோகமுள் பலஅடுக்குகள் கொண்ட நாவல். ஒரு பக்கத்தில் ஆண்பிள்ளைகளின் உளவியலைச் சொல்கிறது. தீர நெஞ்சில் கைவைத்து என் வாழ்வில் யமுனா இல்லை என்று எத்தனை பேரால் சொல்ல முடியும். வயது முதிர்ந்த பெண்களின் வாத்ஸல்யத்தை வாங்கிக் கொண்டு கொஞ்சம் போல் காமம் கலந்த அன்பைத் திருப்பித்தரும் விடலைப்பயல்களின் விடாத குற்றஉணர்வு காலங்காலமாய் விலகாமல் இருந்து கொண்டிருக்கிறது. யமுனாவை பின்னால் பார்க்கலாம்.
இசையே கருப்பு வெள்ளை எழுத்துகளின் ஊடே பிரவாகமாய் வரும் நாவல் மோகமுள். சொட்டும் மழைத்துளி, கத்தும் குருவி என்று நாவல் முழுதும் இசை ஏதோ ரூபத்தில் கேட்டுக்கொண்டே இருக்கிறது. ரங்கண்ணா, பாபு, கந்தர்வன் போல் அந்த மராட்டிய இளைஞன் என்று பலரும் பாடுகிறார்கள். யாரும் பாடாத போதும் மனதிற்குள் சாதகம் செய்யும் இசை காதில் வந்து மோதுகிறது. சிறுவயது முதல் சுற்றிலும் சுத்தமான இசையைப் பாடக்கேட்டு, மனம் கசிந்து, இசை இரத்தத்தில் கலந்த ஒருவரால் எழுதப்பட்டது இந்தநாவல். நான்கு ராகங்கள் ஏழு சங்கீதச் சொற்கள் என்று புதிதாய் கற்று எழுதும் நாவலல்ல இது.
நாற்பதுகளின் கும்பகோண நிலஅமைப்பு, சமூகம், பேச்சுவழக்கு, பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள் என்று கண்முன் ஒரு திரைப்படம் போல் காட்சி விரிகிறது. நாராயணனின் மால்குடி போன்ற கற்பனை கிராமம் அல்ல கும்பகோணம். நேரில் பலமுறை பார்க்குமுன் முதலில் கும்பகோணத்தை இந்த நாவலில் தான் பார்த்தேன். பலகாலம் வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு வந்து பாவாடைசட்டை போட்ட பெண்ணின் பழையவீட்டைக் கடப்பது போல் உடல் முழுதும் புதுரத்தம் பாய்ந்தது முதல் தடவை.
பாபுவிற்கும் அப்பாவிற்கும் உள்ள உறவு. நல்லமனம் படைத்தவர்களுக்குப் பின் வருவது தெரியும் என்பார்கள். இருந்திருந்தாற்போல் அவர் ஏன் பாபுவிடம் உறுதி வாங்கவேண்டும்? பாபுவிற்கு அக்காவும் சேர்த்து இரண்டு அம்மாக்கள்.
பாபுவிற்கும் ராஜத்திற்கும் இருக்கும் பிசிறேயில்லாத நட்பு. பாபு வேண்டுவதைப் பேசுவதில்லை ராஜம், பாபுவிற்கு வேண்டியதையே எப்போதும் பேசுகிறான். பாபுவிற்கு நேரெதிர் நிதானம், அமைதி. இதுபோன்ற நட்பின் நிழலில் இளைப்பாற முடிந்தவர்கள் பாக்கியவான்கள்.
ரங்கண்ணா. சிம்மம் நடந்து வருவது போல… நல்ல ஆகிருதி கொண்டவர்களைப் பார்க்கையில் சிம்மம் தான் நினைவுக்கு வருகிறது. பாபுவின் பெருந்தவம் ரங்கண்ணா. வித்தை எல்லாரிடமும் தான் இருக்கிறது. நல்லகுருவிடமிருந்து தோள்மாறும் வித்தை புதுமெருகு கொள்ளும். நல்ல வித்தைக்கு கர்வம் என்ற வார்த்தையே கிடையாது. இன்னும் இன்னும் என்று சதா பிச்சைப்பாத்திரத்தை ஏந்திக் கொண்டிருக்கும்.
தங்கம்மாள். காமரூபிணி. கிளியைக் கூண்டில் அடைத்துவிட்டு பறக்கப் பார்க்கிறது என்று குற்றம் சொல்வது போல் இருக்கிறது அவளை காமரூபிணி என்றால். மறுதலிப்பின் பாரத்தைத் தாங்க முடியாது மரணத்தைத் தழுவும் தங்கம்மாள். சிதையிட்ட அவள் மயிர் கருகிய துர்கந்தம் பாபுவின் நாசியை விட்டு சாகும்வரை விலகப்போவது இல்லை.
மொழிநடை. வெகுவெகு சில தமிழ் நாவல்களிலேயே அழுத்தமான கதைக்கு இசைந்த மொழிநடை அமைந்து போகிறது. (கன்னி சமீபத்திய உதாரணம்.) தி.ஜாவின் மொத்த அனுபவம், கும்பகோணம் அரட்டை, ஆழ்ந்த சங்கீதஞானம், தத்துவவிசாரம் எல்லாம் சேர்ந்து, கல்யாணவீட்டில் உதட்டைக் குவித்து, மந்தகாஸத்துடன், தேர்க்கோலம் போடும் பெண்ணின் முகத்தைப் போல பத்திரமாய், என்றென்றைக்குமாய் மனஅடுக்கில் வந்து அமர்ந்து கொள்ளும் மொழிநடை.
வாழ்ந்தவர் கெடுதல். அடிக்கடி நாம் பார்த்தது. கண்ணிலும், பேச்சிலும் குறும்பு தொனிக்க இளவரசி போல் நடமாடிய யமுனா, சாப்பாட்டிற்காக யார் யாரையோ பஞ்சாயத்துக்கு அழைத்து முப்பதுகலம் நெல்லில் திருப்தியாகிப் போன பார்வதி. வாழ்க்கை தன் குரூர விளையாட்டை முகத்தில் பழுக்கக்காய்ச்சிய சூட்டுக்கோலால் இட்ட தழும்பு போல விட்டுச் செல்கிறது.
யமுனா….. யமுனாவின் பாதம் தான் வளர்ந்தபின் பாபு முதலில் சொல்வது. எப்போதும் சொல்வது. ஆழ்ந்து தியானத்தில் இருக்கையில் அவள் முகத்தை முந்திக்கொண்டு மனக்கண்ணில் தோன்றும் பாதங்கள். யமுனா பேரழகி. சென்னையில் பாபு அலுவலகத்திற்கு வரும் யமுனா….. பொன்னிறம் மறைந்து வதங்கிய கருப்பு நிறமாய், சுட்டெரிக்கும் வெயிலில் செருப்பில்லாமல் நடந்து வந்து, நாற்பது வயது முடியாமல் ஐம்பது வயதுக்கு தோற்றம்….. கல்யாண்ஜி சொல்வார், நான் பழுத்திருந்த போது பழங்கடிக்க வராமல்
உளுத்து விட்டதும் புழுப் பொறுக்கஓடி வரும்
மனம் கொத்தி என்று. அந்தப் பெண்ணுடனான கலவிக்கா அறுநூறு சொச்சப் பக்கங்கள்? தி.ஜா என்ன சாண்டில்யனா! போகிற போக்கில் ஒரே வரியில் மோகமுள் கதையைச் சொல்லிப் போவோரிடம் பேசுவதற்கு எப்போதும் ஒருவார்த்தை கூட என்னிடம் இருந்ததில்லை.
யமுனா தூக்கி சுமந்த குழந்தை பாபு. கடைசியில் பசி பொறுக்கவில்லை என்று தேடி வருகிறாள் யமுனா. எனக்கென்று ஒன்றுமில்லை, உன் விருப்பத்தை நிறைவேற்றுவது என் கடமை என்கிறாள். வழியில்லாதவளை உபயோகிக்கிறேனா என்று சுயபரிசோதனை செய்கிறான் பாபு. இதைக் காமம் என்றால் சுற்றுமுற்றும் பார்க்காது தறிகெட்டு நாம் பதினெட்டு வயதில் உணர்ந்ததை என்னவென்று சொல்வது.
சிலவிசயங்கள், அனுபவங்கள் வார்த்தைக்குள் அடங்காதவை. நாம் சாமர்த்தியமாய் எழுதுவதாய் நினைத்துக்கொண்டு என்ன எழுதினாலும் இரண்டு உள்ளங்கை நடுவில் காணாது போகும் நீர் போல மறைந்துவிடுகிறது. மோகமுள்ளுக்கு முழுமையான விமர்சனம் என்று யாராலும் எழுத முடியாது. நிறையப்பேர் கேட்டுவிட்டார்கள், எதுவெல்லாமோ படித்து மறுபடியும் தி.ஜாவா என்று. என்ன செய்வது! வனத்தில் மேய்ந்தாலும் இனத்தில் தானே அடையவேண்டியதாகிறது.