கதக்- சுஷில் குமார்:
LGBT fiction என்பது தமிழில் மட்டுமல்ல இந்தியாவிலேயே குறைவு. இந்தக்கதை ஆணுடலை வெறுத்துப் பெண்ணுடலைக் கொண்டாடுவதைச் சொல்கிறது. இடையில் வழக்கமாக நேர்வது போல் சில பாலியல் அத்துமீறல்கள். சமீபத்தில் வந்த தனுஜா நூலும் ஆணுடலை வெறுக்கும் பெண் பற்றிய கதை தான். சுயசரிதையை சிறுகதையுடன் ஒப்பிட முடியாது. மூக்குத்தி காசி என்ற நாவலில் ஆணுடலில் பெண்மனம் படும்பாட்டை புலியூர் முருகேசன் விவரித்திருப்பார். சிறுகதைகளில் எல்லாவற்றையும் கொண்டு வருதல் யாருக்கும் சாத்தியமல்ல. அம்மாவின் சேலை, அம்மனின் பட்டை முகர்வது, அணிவது என்பது சரி. ஆனால் மனதளவில் பெண்ணுக்கு அம்மனின் நிர்வாணம் என்ன பாதிப்பை ஏற்படுத்தும்? லாவண்யா சுந்தரராஜன் ஒரு சிறுகதையில் அம்மனை மோகிப்பதை மெல்லச் சொல்லி நகர்ந்திருப்பார். ஆனால் அது ஆண். இன்னொன்று அம்மனின் நிர்வாணத்தை ஆராதனை செய்பவனுக்கு Love letters, Sanitary napkin என்றால் தெரியாதா? வழமை போல் சுஷில் மொழிநடை அருமை.
வாழ்வின் பெருமகிழ்வு – நந்தா குமாரன்:
நந்தாகுமாரன் கவிதைகளிலும் கதைகளிலும் தொடர்ந்து பரிசோதனை முயற்சிகள் செய்து வருபவர். இந்தக் கதையை முழுதும் கற்பனையாக எழுத முடியாது, பல தகவல்களைச் சேகரித்து எழுத வேண்டியிருக்கும். ஏற்கனவே இருக்கும் ஓவியம் புதிய செய்தியைத் தருவது டான்ப்ரவுன் பாணி. சிகரெட் குடிப்பதை நிறுத்தியவனை Tempt செய்வது, மது அடுத்தடுத்து அருந்த வைப்பது, மதுவுக்குப்பின் லியோனலுக்கும், கதைசொல்லிக்கும் நடப்பது என்று இவர் பாணியில் பளிச்சிடும் இடங்கள் நிறைய. மொழிநடையும் செறிவுடன் இருக்கிறது.
” ஆமாம். நேரம் மட்டும் தான் எல்லோருக்கும் பிரச்சனை- இருக்கிறவனுக்கும் இல்லாதவனுக்கும் கூட”.
நைனாரியும் பதின் கரைகளும்- சித்ரன்:
இதே போல் தான் எழுபதுகளின் பிற்பகுதி, எண்பதுகளின் முற்பகுதியில் மதுரை A A roadல் யாராவது பெண்ணைப் பெற்றவன் போலீஸுக்குப் போன் செய்து நண்பர்கள் குழாமைச் சிதறடிப்பான். எழுத்தில் நல்ல Flow இருக்கிறது இவருக்கு. காலமயக்கம் இருக்கிறது இந்தக்கதையில். BJP எப்போதுமே பதிமூன்று மாதங்கள் ஆட்சியில் இருந்ததில்லை. பதின் வயது சேட்டைகளையும், வாழ்க்கையையும் சுவாரசியமாகச் சொல்லும் கதை.
புகை -வைரவன் லெ.ரா:
புகைபிடித்தல் ஒரு பெரிய Addicrion. குடியில் இருந்து வெளிவருபவர் கூட புகைபிடித்தலில் இருந்து தப்பிவருதல் கடினம். சிகரெட் வாழ்வின் வெவ்வேறு பருவங்களில் எப்படி அத்தியாவசியமாய்ப் போனது என்று சொல்லும் கதை அப்படியே முடிந்திருந்தால் சாதாரண கதை. ஆனால் நேசிப்பவர் பிரிந்தபின் அவர் இருப்பை மீளுருவாக்கம் செய்யும் எத்தனம் இந்தக் கதையை அழகாக்குகிறது.
நெலோகம் – இ. ஹேமபிரபா:
நெலோகம் விபரீத உலகம். எதிர்காலத்தில் நிகழும் ஆபத்தைக் கூறும் அறிவியல் புனைவுக்கதை. நெகிழி உபயோகம் எந்த அளவிற்குப் போகும் என்பதன் கற்பனை.
உணவுப்பழக்கத்தில், Junk foods எவ்வளவு உடல்நலத்தைப் பாதிக்கிறது (குறிப்பாகப் பெண்குழந்தைகளுக்கு) என்பதை நன்கு தெரிந்தே அதை உண்கிறோம். அதைப் பார்க்கையில் இந்தக்கதையில் இருப்பதோ கூட சிலநூறு வருடங்கள் கழித்து நிதர்சனமாகலாம். நல்ல கற்பனை, சற்றும் சொல்ல வேண்டியதில் இருந்து விலகாது கதை நகர்த்தும் யுத்தி. பாராட்டுகள்.
அந்நியன் – குமாரநந்தன்:
அந்நியன் யார் என்று தெரிந்து கொள்வதில் தான் கதையின் சுவாரசியம். நான்கு கதைகள் இதில். ஒன்று மகள், மகன் இருவரது சரிவைப் பார்த்து முதுமையைக் கழிக்கும் ஜோதி-கமலம். அடுத்து அந்த வெகுளிப்பெண் செல்லம்மாள் கணவனின் அதீத பாலியல் வேட்கையை எதிர்கொள்ள முடியாது விலகுதல். அடுத்து சிதம்பரம்-மங்கை கதை. கடைசியாக சபாபதியின் கழிவிரக்கம். இப்போது அந்நியன் ஏன் வருகிறான் என்பது தெரிந்துவிடும். நல்ல கதை குமாரநந்தன்.
வரலட்சுமி நோன்பு – நா.ஞானபாரதி:
ஜாதீயம் தலைவிரித்து ஆடுவதைச் சொல்லும் கதை. அப்பா என்ன சொல்லி இருந்தாலும் (எல்லா அப்பாவைப் பற்றியும் போல் இல்லை இவர், பிள்ளைகள் படிப்பிற்கு ஒரு மாதம் ஆபிஸில் லீவ் எடுத்தவர்) போடா வாடா என்று திட்டி அடிக்கும் மகன் யாரிடம் அனுதாபத்தை எதிர்பார்க்கிறான் என்று புரியவில்லை. பிரியாவை வரலட்சுமியாக மட்டுமல்ல, அஷ்டலஷ்மிகளின் மொத்த உருவாகக்கூடப் பார்ப்பது அரவிந்தின் இஷ்டம். அதில் நாம் என்ன சொல்ல இருக்கிறது. ஆனால் கதையில் பிரியா குடும்பத்தினர் பாண்டவர் போல் பொறுமை காட்பதும், ஷேஷாத்திரி தம்பதி கௌரவர் போல் ஆட்டம்ஆடுவதும் இயல்பில் நடப்பதா?
கதைகள் ஆசிரியர் ஆதங்கத்தை ஒருதலைப் பட்சமாக சொல்கையில் அசூயை ஏற்படுவதைத் தவிர்க்க முடிவதில்லை.
தடம் – ஐ.கிருத்திகா:
மரணம் ஈன்ற ஜனனம் தான் கதை. அதை மிக அழகாக, பிரிவின் சோகத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக கூட்டிக்கொண்டே போகிறது கதை. ஒரு பெண்ணின் பார்வையில் என்னவெல்லாம் தனிமையின் பயத்தை அதிகரிக்குமோ அதுவெல்லாம் நடக்கிறது. தேன்சிட்டு வீட்டுக்குள் வந்த தருணத்தை நினைத்துப் பார்ப்பது ஒரு கவிதை. முற்றிலும் மூழ்கி நீருக்குள் மறையப்போகும் உணர்வைக் கொடுத்து கதையின் கடைசிவரியில் கொழுக்கொம்பை கை இறுகப் பற்றிக் கொள்கிறது. நல்ல மொழியில் சொல்லப்பட்ட கதை.
நாற்றம் – ஜி.ராஜேந்திரன்:
ஜனனி எந்த ஒன்றை செய்தேன் என்கிறாள் என்பதற்குக் கதையின் கடைசியில் Clue இருக்கிறது. “பிரிவின் பிரிவை விரும்பாதவள்” என்பது Misleading ஆன வரி. ஆயிரம் பேர் கைப்பேசியை எடுப்பதற்குள் முடிக்கும், ஆயிரம்பேர் எடுக்கவில்லை என்பதை அந்தக் கணத்தில் உறுதிசெய்யும்
ஜனனி நிச்சயம் அபூர்வ சக்தி கொண்டவள் தான்.
பறத்தல்- டெம்சுலா ஆவ்- தமிழில் எம்.ஏ.சுசீலா:
Temsüla Aoவின் மற்றொரு கதை. தன்னிலையில் ஒரு கம்பளிப்பூச்சி சொல்லும் கதை. இந்தக்கதையைப் படித்ததும் “நான் நிலவுபோலத் தேய்ந்து வந்தேன் நீ வளர்ந்ததாலே” என்ற சினிமாப்பாடல் வரி நினைவுக்கு வந்தது. ஒன்று வளர்வதும் மற்றொன்று தேய்வதும் உலகநியதி. கடைசியில் வண்ணத்துப்பூச்சியின் சிறுதயக்கம் கூட அதுவே கதைசொல்லியாவதால் அழகாக வெளிப்படுகிறது. வழமை போல் இவரது வளமான மொழிபெயர்ப்பு கதையின் ஆன்மாவைப் படம்பிடித்துக் காட்டுகிறது.
நான்காவது சுவர் – ஊர்மிளா பவார்- தமிழில் ராம் முரளி:
இது பிரச்சாரக்கதை என்பதைத் தாண்டி எதுவும் சொல்ல முடியவில்லை. ராம் முரளி வார்த்தைக்கு வார்த்தை மொழிபெயர்ப்பதைத் தவிர்க்க வேண்டும். நிறைய வரிகள் கரடுமுரடாக இருக்கின்றன.
கருநீலப் பேரச்சம் – சத்தியஜித்ரே- தமிழில் அனுராதா கிருஷ்ணசாமி:
Indigo stories எல்லாமே Gothic stories தான். Ray இந்தியாவின் Poe போல் முயற்சித்தவை. இந்தக்கதையில் ஒரு எழுத்தாளனுக்கு நேரும் அனுபவம், ஒரு போராட்டமான பயணத்தின் பின் Hallucinationஆக இருக்கலாம் இல்லை உண்மையிலேயே அந்த அறையில் தங்குபவர் நூறு ஆண்டுகள் பின்னே செல்லலாம். இதில் முக்கியமான விசயம் Indigo Farming. வாய்பேசாத, சாப்பாட்டிற்கு வழியில்லாத ஏழை விவசாயிகளின் இரத்தத்தை ஆங்கிலேயர் எப்படி உறிஞ்சினார்கள் என்ற வரலாறும் கலந்திருக்கிறது. Ray தன் கதையில் ஒரு Poetic justiceஐ நிறுவ முனைகிறார். அருமையான மொழிபெயர்ப்பு இது. அனுராதா கிருஷ்ணசாமி மொத்தத் தொகுப்பையும் மொழிபெயர்ப்பு செய்யலாம். நிறைய பர்னிச்சர்கள் உடையக்கூடும்.
கருப்பு ஸல்வார் – ஸத்தத் ஹஸ்ஸன் மண்ட்டோ- தமிழில் பென்னேசன்:
பல Layerகள் கொண்ட கதை இது. விபச்சாரியின் அசைக்க முடியாத மதம் மற்றும் சடங்குகளின் மீதான நம்பிக்கை. பெரிய நகரங்களில் பெரிய வாய்ப்பு என்ற குருட்டு நம்பிக்கை. குதாபக்ஸின் முட்டாள்தனம். விபச்சாரிகளை ஏமாற்றி சுகம் அனுபவிக்கும் ஷங்கர் (இந்தக் கதையில் இவன் மட்டுமே இந்து). விபச்சாரிகள் பற்றி யாரும் எழுதாத காலத்தில் மண்ட்டோ அவர்கள் வாழ்க்கை குறித்து நிறையவே எழுதியிருக்கிறார். அதற்கு இந்தக்கதையைப் போல் கலைவடிவம் கொடுத்தது மண்டோவின் தனிப்பட்ட திறமை. தெளிவான மொழிபெயர்ப்பு.
பொதுவாக சிறுகதைகளை ஒருமூச்சில் படித்துவிட்டு பின் அவ்வப்போது மீதியைப் படிக்கும் வழக்கம் இந்த முறை மாறிவிட்டது. படைப்பாளிகள் குறித்த எல்லாக் கட்டுரைகளும் என்னை முதலில் படி என அடம்பிடித்துக் காரியத்தைச் சாதித்துக் கொண்டன.
இரண்டு தினங்களுக்கு முன்பு தோழியிடம் பேசுகையில் சொன்னேன். ஒரு கட்டுரை எழுத, எல்லாவற்றையும் மீண்டும் படிக்காமல் எழுத முடியவில்லை, மூன்று நாட்கள் இதற்கே போனது, வாசிக்காமல் ஏன் இதைச் செய்கிறேன் என்று எனக்குள் கேள்வி எழுகிறது என்று. அவர், “உங்கள் கட்டுரை இணையவெளியில் எங்காவது நீந்திக்கொண்டிருக்கும், யாராவது என்றாவது படிப்பார்கள், அதுவே நீங்கள் அவருக்குத் தெரிவிக்க விரும்பும் செய்தியாக இருக்கும்” என்றார். அது தான் விக்னேஷை இந்த அளவு அர்ப்பணிப்புடன் இது போன்ற உழைப்பை இதழுக்குத் தரத் தூண்டுகிறது என்று நினைக்கிறேன். மிக நேர்த்தியாக வந்திருக்கிறது இந்த இதழ்.
நன்றியும், பாராட்டுகளும்.