எல்லையற்ற தேசம் – பேட்ரிஷியா ஏங்கில்.
பேட்ரிஷியா கொலம்பியப் பெற்றோருக்குப் பிறந்தவர். மியாமி பல்கலைக்கழகத்தில் ஆசிரியை. இதற்கு முன் இருநாவல்களும், பல பரிசுகளும் வென்றவர். 2021 மார்ச் மாதம் வெளியாகியுள்ள இந்த நாவல் 2021ல் வெளிவந்த சிறந்த படைப்புகளில் ஒன்றாக விளங்கப்போகிறது.
ஊடகச்செய்திகள் குற்றவாளியைப் பலியாளாக, பலியாட்களை குற்றவாளிகளாக சித்தரிப்பதைப் பார்த்ததுண்டா? தலியா அவளது தோழி, வேலை முடிந்து வந்தால் அவளுடன் சினிமாவிற்குச் செல்வதற்காகக் காத்திருக்கையில் தான் அது நடந்தது.
ஒரு உணவுவிடுதியின் பின்னால் சமையல் செய்பவர்கள் ஒய்வில் நிற்கையில், இவள் அவர்களுடன் பேச்சுக் கொடுக்கும் போது ஆரஞ்சு வண்ணத்தில் பூனைக்குட்டி நகர்கிறது. யாரும் எதிர்பாராத வேளையில் சமையல்காரன் ஒருவன் கொதிக்கும் எண்ணெயை அதன் மேல் வீச சதை வெந்து அந்த இடத்திலேயே
அது இறக்கிறது. தலியா அதே சிகிச்சையை அவனுக்கு அளிக்கிறாள். உயிர் போகவில்லை என்றாலும் அவனுக்கு உடல், முகம் வெந்து விடுகின்றது. பூனைக்குட்டிக்கு நடந்தது பற்றி எதுவும் வராமல், தலியா ஏன் இப்படி செய்தாள் என்பதும் வராமல் சிறுமியின் கொடூரச்செயல் என்று ஊடகங்களில் வருகிறது. கொலை முயற்சி. தலியாவிற்குப் பதினைந்து வயது என்பதால் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் சேர்க்கப்படுகிறாள். அவள் சிலநாட்களில் அமெரிக்கா செல்ல அவளது அம்மா அவளுக்கு விமானப்பயணச்சீட்டு அனுப்பியிருக்கிறாள். ஆகவே அங்கிருந்த கன்னியாஸ்திரியை, சில சிறுமிகளின் உதவியோடு நாற்காலியில் கட்டிப்போட்டு, அங்கிருந்து தப்பிக்கையில் தான் இந்தக் கதையே ஆரம்பிக்கிறது. கதை அவளையும் அவள் குடும்பத்தையும் தொடர்கிறது.
கொலம்பியா, ஒரு காலத்தில், காடுகள், பனி மூடிய மலைத்தொடர்கள், கருப்பு வெள்ளை மணல் நிறைந்த கடற்கரைகள், அமேசான் காடுகளை வளமாக்கப் பெருக்கெடுத்து ஓடும் நதிகள், கரீபியன் கடலை முத்தமிடும் பாலைவனம் என்று கடவுளின் பிரதேசமாக கருதப்பட்டதில் இருந்து, உள்நாட்டுக்குழப்பங்களும், போரும், லஞ்சலாவண்யங்களும், கண்ணீரும், மரணங்களுமாக சபிக்கப்பட்ட பிரதேசமாகிறது. கொலம்பியாவின் அரசியல், சமூக நாகரீகம் பற்றிய குறிப்புகள் நாவலின் பின்னணியில் சேர்ந்து வருகின்றன.
அமெரிக்கா, அபரிதமான வாய்ப்புகளுக்கான நிலம். சொந்த நாட்டில் பத்து, பதினைந்து வருடம் சம்பாதிப்பதை அங்கே ஒருவருடத்தில் சம்பாதித்து விடலாம். ஆனால் முறையான ஆவணங்கள் இல்லையெனில் எந்த நேரமும் கைதுசெய்யப்பட்டு சொந்த நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்படலாம். நிறவேறுபாடு காரணமாக எப்போது வேண்டுமானாலும் தெருவில் தாக்கப்படலாம். ஆனால் இதை எழுதுபவர் அமெரிக்காவில் இருந்து கொண்டு எழுதினாலும், புனைவாகவே இருப்பினும், அதை மறுப்பதோ, அவர் மேல் பொய்வழக்குப் போட்டு மனஉளைச்சலுக்குள்ளாக்குவதோ அங்கே கிடையாது. அமெரிக்கா கருத்து சுதந்திரத்தில் அதிக நம்பிக்கை வைத்திருக்கும் தேசம். அது அடுத்தவர் கருத்தாய் இருப்பினும்.
அமெரிக்காவின் இருண்மையான பக்கங்களுக்கு வெளிச்சம் காட்டுகிறார் பேட்ரிஷியா. ஆவணம் இல்லாதவர்களுக்கு ஊதியம் தராமல் ஏமாற்றுவது, பெண்களை பாலியல் வன்முறை செய்வது போல பல குற்றங்கள் நடக்கின்றன. குற்றவாளிகளுக்கு நன்றாகத் தெரியும் இவர்களால் யாரிடமும் புகார் செய்ய முடியாது என்று. இந்தியாவில் பிறந்த குழந்தையை பெற்றோரை நாடு கடத்தும் போது சேர்த்து அனுப்புவது போன்ற வழக்கம் அமெரிக்காவில் கிடையாது. அமெரிக்காவில் பிறந்த குழந்தைகளை அரசாங்கக் கட்டுப்பாட்டில் விட்டுவிட்டு பெற்றோர் தன்நாடு செல்ல வேண்டும். ஆவணம் இல்லாதவருக்கு உதவிசெய்கிறேன் என்று அவர்கள் சம்பாதிக்கும் சொற்பத்தையும் ஏமாற்றி வாங்கிக்கொண்டு காணாமல் போகும் வக்கீல்கள் என்று அங்கேயும் இருண்டபக்கங்கள் நிறையவே இருக்கிறது.
இந்தியாவில் மேற்கு, வடக்கிலிருந்து தென்னகத்துக்கு வருகையில் அவர்கள் குழந்தைகள் பள்ளியில் அதிக கொடுமைகளுக்கு ஆளாவதில்லை. ஆனால் தெற்கிலிருந்து போகையில் நிறம், பேசும் முறை என்று பல காரணங்களினால் Bullying க்கு ஆளாகிறார்கள். அமெரிக்கா போன்ற நாடுகளில் வேற்றுநாட்டுக் குழந்தைகள் கொடுமைகளுக்கு ஆளாகி, வீட்டில் சொல்ல முடியாமல், சொன்னாலும் பெற்றோரால் ஒன்றும் செய்ய முடியாமல்
காலம் கழிகிறது.
கொலம்பியாவின் வாய்மொழிக் கதையாகச் சொல்லப்படுவது இந்தக்கதை. அந்த நாட்டை ஆண்ட பழைய அரசனின் மகள் ஒரு கன்னிப்பெண். அவள் சூரியனின் கதிர்களால் கர்ப்பமாகி ஒருமகனைப் பெற்றெடுக்கிறாள். அவன் பெயர் கோரன்சாச்சா. சூரியனின் மகன். பின்னாளில் அரசனாகிறான்.
அமெரிக்கக்கனவு என்பது அநேகமாக உலகம் முழுவதும் இருப்பதே. இந்த நாவல், அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையில் பிளவுபட்ட குடும்பம் குறித்தும், அதன் உறுப்பினர்கள் ஒல்லொருவரும் எதிர்கொள்ளும் சிக்கல்கள் குறித்தும் விவரிக்கிறது. வரைபடங்களால் பிரிக்கப்பட்ட நாடுகள், அதன் சட்டங்களாலும் மனிதர்களைப் பிரிக்கின்றன. எல்லாக் கனவுகளும் இலவசமாக நனவாகுவதில்லை. ஒவ்வொரு கனவும் நனவாக ஒரு விலை கொடுத்தாக வேண்டியிருக்கிறது. பொருட்களை வாங்குகையில் சரியான விலை கொடுத்து வாங்குகிறோமா என்று சரிபார்ப்பது போல் கனவுகளுக்கான விலையை நாம் முதலில் யோசிப்பதேயில்லை.
பேட்ரிஷியா இயல்பான திறமை பெற்ற எழுத்தாளர். அவரது மொழிநடை ஒரு பாய்ச்சலுடன் தாவிச்செல்கிறது. இவர் முதுகலைப்பட்டம் புனைவில் பெற்றிருப்பதும், மியாமி பல்கலையில் இவர் கலைநுட்பமான எழுத்துமுறையைக் கற்பிப்பதும் இவரது மொழிநடையை மேலும் மெருகேற்றியிருக்கக்கூடும். அமெரிக்காவில் பிறந்து அங்கேயே படித்து வேலைபார்க்கும் பெண், தன்னுடைய தாய்நாட்டை நினைவு வைத்திருப்பது மட்டுமல்ல இத்தனை நாட்டுப்புறக்கதைதளை நாவலில் இணைத்திருப்பது ஆச்சரியம். இருநூறு பக்கங்களுக்குக் குறைவான நாவலில் இவ்வளவு உணர்வுகளை வாசகருக்குக் கடத்துவது மற்றொரு ஆச்சரியம்.
நூல் பெயர் – Infinite Country
ஆசிரியர் பெயர்- பேட்ரிஷியா ஏங்கில்
பதிப்பகம்- ஸ்கிரைஃப்னர் இங்கிலாந்து
பக்கங்கள்- 208
வகை- ஆங்கிலநாவல்
விலை, ரூ 339.84
நூல் பெற தொடர்பு- Amazon.in
முதல்பதிப்பு மார்ச் 2021