ஆன்டன் செகாவ் மற்ற எல்லா காலங்களையும் விட கடந்த இருபது வருடங்களில் உலகமெங்கும் பரவலாகப் படிக்கப்படுவதில் ஒரு முரண்நகை இருக்கிறது. செகாவ் தன் எழுத்துக்கள் அதிகபட்சம் ஏழுவருடங்கள் படிக்கப்படும் என்று ஒருசமயம் கருத்திட்டிருந்தார். அவர் மறைந்தே நூறு வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. சிறுகதைகளை மட்டும் எடுத்துக் கொண்டால் அதிகம் உலகமெங்கும் வாசிக்கப்பட்ட ருஷ்ய எழுத்தாளர்களில் செகாவ்விற்கு முதலிடம்.
தமிழில் பலவருடங்களாக செகாவ்வின் கதைகள் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. இருபது சிறுகதைகள் கொண்ட தொகுப்பு இது. சூ.ம. ஜெயசீலன் அவர் தேர்ந்தெடுத்த கதைகளை இந்தத் தொகுப்பில் மொழிபெயர்த்துள்ளார்.
செகாவ் கதைகளின் முடிவில் பெரிய திருப்பம் நிகழ்வதில்லை. பெரும்பான்மையான அவரது கதைகள் சாமானிய மனிதர்களைச் சுற்றியே வருவன. தான் பார்த்த வாழ்க்கையில் இருந்தே இவரது பெரும்பான்மையான கதைகள் உருவாகின்றன. ஜப்பானின் கவபட்டாவிற்கு பலப்பல வருடங்கள் முன்னரே உரைநடையில் கவிதையைக் கலந்தது இவர் என்று இன்று பலரும் சொல்கிறார்கள். ருஷ்யா இதுவரை ஐந்துமுறை இலக்கியத்திற்காக நோபல் விருதை வென்றிருக்கிறது. செகாவ் உட்பட உலகில் மீண்டும் மீண்டும் அதிகம் வாசிக்கப்பட்ட மூவரில் ஒருவரும் நோபல் பரிசை வெல்லவில்லை.
செகாவ்வின் கதைகள் நிதர்சன உலகைப் பிரதிபலிப்பவை. இவரது கதாபாத்திரத்தின் மீதான விமர்சனமோ, கிண்டலோ இவரது எழுத்துக்களில் இருக்காது. கருணை நிறைந்த கதாபாத்திரங்கள், இறந்த குழந்தையை வீட்டுக்குச் சுமந்து செல்லும் பெண்ணிடம் கனிவாகப் பேசும் முதியவர் போன்ற கதாபாத்திரங்கள் இவர் கதைகளில் ஏராளம். ரோமின் மியூசியம் புகழ்பெற்றது. செகாவ் மியூசியத்திற்குப் போகவில்லை, விபச்சார விடுதியைப் பார்வையிட்டார். உயிரற்ற பொருட்களைப் பார்த்து வியப்பதை விட, ரத்தமும் சதையுமான மனிதர்கள் செகாவ்வை கவர்ந்தார்கள். அதனால் தான் அந்த கதாபாத்திரங்களுக்கு இன்றும் உயிர்ப்பு இருக்கிறது.
செகாவ்விடம் கவர்ந்த மற்றுமொரு விசயம், அடிப்படையில் இவர் மருத்துவர். முறையான மருத்துவக்கல்வி பயின்றவர். மருத்துவர்கள் கதை எழுதுகையில் வாதை குறித்து பெரும்பாலும் எழுதுவதில்லை. சார்வாகன் தொழுநோய் மருத்துவ சிகிச்சையில் பணியாற்றிய போதும் ஒருகதை கூட அந்தப் பின்னணியில் எழுதியதாகத் தெரியவில்லை. இவரது வார்டு எண் 6 போன்ற பலசிறுகதைகளில் மனிதர்களின் வாதை பதிவாகி இருக்கும்.
குறுங்கதைகள் புதிதாக வந்தது போல் பலரும் பரிசோதனை முயற்சிகள் இப்போது தமிழில் செய்து கொண்டிருக்கிறார்கள். பத்தொன்பதாம் நூற்றாண்டில் செகாவ் எழுதிய The Death of a Government Clerk போல பல கதைகள் குறுங்கதை வடிவத்தில் கச்சிதமாக அடங்குபவை.
இப்போது தொகுப்பின் முதல்கதையை எடுத்துக் கொள்வோம். முதல் மூன்று பத்திகளில் மாக்கரின் கடின உழைப்பு மற்றும் பொருளாதாரம் தெரிந்து விடுகிறது. அத்துடன் ஒரு செய்தி போல் சொல்வதில் அவன் அனாதை என்றும் தெரிகிறது. அவனது ஞானத்தந்தை படு சந்தர்ப்பவாதி என்பது அடுத்து வரும் வரிகளில் தெரிந்து விடுகிறது. எந்த நாடு எந்த பேதமின்றி வசதியான மாப்பிள்ளை வந்ததும் எளியவரைக் கழட்டிவிடுவதும் யதார்த்தமான விசயம்.திருமணத்தில் நடனம் என்பதில் கதை ஒரு தீர்க்கமான முடிவையும் சொல்லி விடுகிறது. இந்தக் கதையில் செகாவ்வின் கலைநுட்பம் சம்பந்தமில்லாதது போல்வரும் கண்ணாடி குறித்த விவரிப்பில் இருக்கிறது. எண்ணற்ற திசைகளில் முகத்தோற்றத்தைக் காட்டும் சாயம் போன கண்ணாடியில் யாகோடாவ்வால் எப்படி பெருமிதமாக தன் முகத்தைப் பார்க்க முடிகிறது? காரியவாதிகளுக்கு முகக்கோணல் பிம்பம் பெரிதில்லை, அவர்களால் அந்தக் கணத்தை ரசிக்கமுடிகிறது என்பதன் குறியீடே கண்ணாடி. குதிரை தொடர்பான பெயர் கதையை ஒரு மருத்துவர் எழுதிய கதை என்ற நோக்கில் பார்த்தால், புதிய விளக்கங்கள் கிடைக்கக்கூடும். மூடநம்பிக்கைக்கும் பகுத்தறிவிற்கும் இடையில் பிரயாணிக்கும் கதை.
சூ.ம. ஜெயசீலனின் மொழிபெயர்ப்பு வாசிப்பதற்கு மிக எளிதாக தங்கு தடையின்றி படிக்கும் வகையில் உள்ளது. இவரது இன்னொரு மொழிபெயர்ப்பு என் பெயர் நுஜூத் சமீபத்தில் படித்தேன். இந்த நூலிலும், அதிலும் நான் கவனித்த வரையில் சொல்வது, இவர் கூடுமான வரை வார்த்தைக்கு வார்த்தை நேரடி மொழிபெயர்ப்பைத் தவிர்த்து கதைக்குள் உள்நுழைந்து மூலஆசிரியரின் நோக்கத்தைப் புரிந்து அதற்கேற்ப வார்த்தைகளை உபயோகிப்பது நல்லது. உதாரணத்திற்கு முதல் கதையில் Bug என்ற வார்த்தைக்கு வண்டு என்ற வார்த்தையை விடப் பூச்சி என்ற வார்த்தை பொருத்தம். அவனால் வேலை செய்யாமல் இருக்க முடிவில்லை, அவனே வேலையை உருவாக்கிக் கொள்கிறான் என்பதே கதாசிரியர் சொல்லவருவது. இவையாவும் சிறுவிசயங்கள், வாசிக்கும் வேகத்தில் எளிதில் கடந்துவிடுபவை. மொழிபெயர்ப்பைத் தொடர்ந்து செய்வது, நல்ல படைப்புகளைத் தேடியெடுத்து தமிழுக்குக் கொண்டு வருவது என்பதே மிகமுக்கியம். நூலை எனக்கு அனுப்பி இரண்டு நாட்களில் சில மாறுதல்கள் செய்துள்ளேன் அதனால் புதிதாக அனுப்பியதைப் பார்க்கவும் என்று எழுதியிருந்தார். மொழிபெயர்ப்பாளருக்கு வேண்டிய மிக முக்கியமான குணாதிசயம் இது. எளிதில் திருப்தி அடையாது மீண்டும் மீண்டும் எடிட் செய்வது.
சொன்னதையே திரும்பச் சொல்வதைப் பொருட்படுத்தாவிட்டால் மீண்டும் சொல்கிறேன். தமிழில் மட்டும் படிக்கும் வாய்ப்புள்ள வாசகர்களுக்கு மொழிபெயர்ப்பாளர்கள் வழங்கும் கொடை இதுபோன்ற நூல்கள். சூ.ம. ஜெயசீலன் தொடர்ந்து மொழிபெயர்ப்பில் இயங்கிவர வாழ்த்துகள்.
பிரதிக்கு:
பாரதி புத்தகாலயம்
விலை ரூ.120.