அரசாங்க அதிகாரியின் மகளாகப் பிறந்தவர் சூடாமணி. இவரது பாட்டியும் எழுத்தாளர். இவரது அம்மா சிற்பக்கலைஞர். இவர் ஓவியர். எனவே கலை என்பது இவரது குடும்பத்தில் வழிவழியாக வந்திருக்கிறது. சிறுவயதில் நோய்வாய்ப்பட்ட சூடாமணி திருமணம் செய்து கொள்ளாமல் கடைசிவரை தனியாகவே வாழ்ந்தார். இவர் இறந்தபின் வீட்டையும் பிறசொத்துக்களையும் தொண்டு நிறுவனங்களுக்கு விட்டுச்சென்றார். 2010ல் அதன் மதிப்பு பதினோரு கோடிகளுக்கும் மேல். இவரது அலமாரியில் நூற்றுக்கணக்கான புத்தகங்கள், ஜே.கிருஷ்ணமூர்த்தி, காந்தி, தாகூர் குறித்த கட்டுரைகளை பத்திரப்படுத்தி வைத்திருந்தது இவரது பரந்த வாசிப்புக்கு சான்று. புனைவின் எல்லா வடிவங்களிலும் இவர் முயற்சித்திருந்தாலும் சூடாமணி தன் சிறுகதைகளுக்காகவே இன்றும் மரியாதையுடன் நினைவு கூறப்படுகிறார். 1954ல் இருந்து 2004 வரை ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக எழுதியிருக்கிறார். ஆங்கிலத்திலும் சிறுகதைகள் எழுதியிருக்கிறார். இவரது 574 சிறுகதைகள் இலக்கிய மற்றும் ஜனரஞ்சக இதழ்களில் பிரசுரமாகி இருக்கின்றன. கு.அழகிரிசாமி போலவே உளவியல் இவர் கதைகளில் முக்கியபங்கு வகிக்கும். 2010ல் மறைந்தார்.

‘நோன்பின் பலன்’ சிறுகதை 1954ல் கலைமகளில் வந்திருக்கிறது. தி.ஜாவின் தீர்மானம் கதையைப் போலவே விளையாடிக் கொண்டிருந்த சிறுபெண் எடுக்கும் தீர்மானம், மற்றபடி இரண்டும் முற்றிலும் வேறு கதைகள். சிறுவர் நேசஉலகத்தில் மீறல்கள் எதுவும் கிடையாது. அப்படியே அன்றைய பிராமணக்குடும்பத்தின் காட்சி சித்தரிப்பு, சின்ன அத்திம்பேரின் யமுனா மீதான ஆதிக்கம் உட்பட.

யோகம் சிறுகதை குடும்பவாழ்க்கையில் கர்மஞானி ஒருவர் குறித்தது. அவன் வடிவம், மகனின் இன்னொரு வடிவம்.
ஓவியனும் ஓவியமும் இரண்டு தளங்களில் நகரும் கதை. உடல் ஊனத்துடன் கலந்த தன்மானம். அடுத்தது சுயநலத்தில் தோல்வி அடைந்த வாழ்க்கை. முக்கியமான விசயம் ஒன்றைச் சொல்கிறார் சூடாமணி இந்தக் கதையில். கலையில் ஈடுபடுபவருக்கு அந்தக்கலையே மகிழ்ச்சி. வெற்றி தோல்வி எனும் விளைவுகள் கலைஞனுக்குப் பொருட்டல்ல.

‘இரண்டின் இடையில்’ சிறுகதை பள்ளிச்சிறுவனின் டீச்சர் மீதான Infatuation. அழியாத கோலங்கள் படக்கதை. இந்தக்கதை வந்த வருடம் 1966. சூடாமணி பெண்ணெழுத்து, ஒரு வட்டத்தைத் தாண்டி வரவில்லை என்கிறார்களே, அறுபதுகளில் இந்தக்கரு எவ்வளவு தாக்கம் ஏற்படுத்தியிருக்கும். வாசகர்கள் முடிவு செய்யட்டும்.

உளவியல் கதைகளே அதிகம் எழுதியிருக்கிறார். தன் குழந்தை மீது யாரும் உரிமை செலுத்தக்கூடாது என்று நினைக்கும் பெண், ஏழை என்றால் யாசகத்திற்குத்தான் வருவார்கள் என்று முடிவுசெய்யும் மனம், பிராமணப்பெண் தீண்டத்தகாதவன் என்று சொல்லப்படும் சிறுவனுக்குத் தாயாவது, கதையின் முடிவில் டிவிஸ்ட் வைக்கும் அன்னையின் புன்னகை, கல்லூரி மாணவன் மனைவியைக் காதலிப்பதை அவளிடம் இயல்பாகச் சொல்லும் கணவன், இளம்மனைவியின் மனம் இளைஞனிடம் சாய்ந்து மீள்வதை இயல்பாக எடுத்துக்கொள்ளும் கணவர், பிம்பம் போல் பெண் சுதந்திரம் பேசும் கதைகள் என்று வித்தியாசமான கதைக்களங்கள்.

1972ல் கணையாழியில் வெளியான நான்காம் ஆசிரமம் இவரது முக்கியமான கதைகளில் ஒன்று. மனைவி இறந்ததும் அவளது முன்னாள் கணவரும் இன்னாள் கணவரும் நடத்தும் உரையாடல் தான் கதை. விதவையானவளை முன்னாள் கணவர் மணந்ததால் மொத்தத்தில் அவளுக்கு மூன்று திருமணங்கள். பெண் என்பவள் அவளாக வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் முடிவெடுப்பது பற்றிய கதை. அதிகம் படித்தவர், அதிகம் வயதானவர் கூடுதல் முதிர்ச்சியோடு நடந்து கொள்வார் என்பதை எப்போதும் எதிர்பார்க்கமுடியாது இல்லையா? கதை முடிவில் ஓ.ஹென்றி கதைகளைப் போல் ஒரு திருப்பம்.

மேதையின் மனைவி கதை 1973ல் வந்தது. மேதையின் துரோகங்களை அவர் மனைவி கடைசிவரை வெளியே சொல்லாமல் இருப்பது பற்றியது. காம்யு அறுபதில் கார் விபத்தில் இறக்கிறார். அப்போது முற்றுப்பெறாத கையெழுத்துப்பிரதி First Man என்ற பெயரில் தொண்ணூறுகளில் வெளியாகிறது. அந்த நூலில் இளம்வயதில் இறந்த தந்தையின் கல்லறையின் முன் நிற்கையில் அவரை என்னிலும் இளையவராய் உணர்ந்தேன் என்றிருப்பார். இந்தக்கதையில் வளர்ந்த பேத்தியுடைய பாட்டி, முப்பது வயதில் இறந்த கணவனின் புகைப்படம் முன்பு நின்று கொண்டு சொல்கிறார் “எனக்குப் பிள்ளையாக இருக்கக்கூடிய சிறுபையனப்பா நீ’

சுவரொட்டி, கதை முழுக்க ஆபாச சுவரொட்டியைப் பார்த்துப் பல ஆண்கள் ஜொல்லு விடுவதைப் பற்றிப்பேசும் கதை, கடைசியில் மேலாடை இல்லாச்சிறுமி அந்த சுவரொட்டியைப் பார்த்து அவள் இரண்டு சொக்காய் போட்டிருக்கிறாள் என்று சொல்வதாக முடிகிறது. காட்சி ஒன்று, பார்வைகள் வேறு.

கதவை யாரோ தட்டும் போது இவருடைய முக்கிய சிறுகதைகளில் ஒன்று. கணையாழியில் 1985ல் வெளிவந்தது. சிறுவர் உலகம். ஆனால் வழக்கமான சிறுவர் உலகமல்ல. Bullying சிறுவர்கள். ஒரு காட்சியை ஆசிரியர் பரிதாபம் எதுவும் இல்லாத Flat toneல் சொல்லி கதையை முடித்திருக்கிறார்.

அறுநூறு கதைகள் எழுதியவரது ஆறில் ஒரு பங்கு கதைகளைப் படித்துக் கட்டுரை எழுதுவது சரியா என்று தெரியவில்லை. ஆனால் இப்போது கிடைக்கும் கதைகள் இவ்வளவு தான். இரண்டு தொகுப்புகள் மற்றும் இணையத்தில் இருக்கும் கதைகள் தேர்ந்தெடுத்த கதைகள் என்பதால் இவரது முக்கியமான கதைகள் விடுபடவில்லை என்ற நம்பிக்கைகொள்ள வேண்டியதாகிறது.

சூடாமணியைக் கலைமகள் எழுத்தாளர் என்று வரையறுத்தல் எவ்வளவு பொருந்தும்! கணையாழி உயர்ந்த இலக்கியத்தரத்தைப் பேணிவந்த எழுபதுகளில், எண்பதுகளில் அதில் இவரது கதைகள் பிரசுரமாகியிருக்கின்றன. மகளைப் பெண்பார்க்க வந்தவன் அம்மாவின் துடுக்குப் பேச்சில் அவளிடம் மயங்குவது, கல்லூரிச் சிறுவன் தன் மனைவியின் மேல் மையல் கொள்வதை கேலியாய் கணவன் மனைவியிடம் சொல்லி சாதாரணமாக இரு என அறிவுறுத்துதல், இளம் பெண்ணை மணந்த வயதானவர் வீட்டுக்கு விருந்தாளியாக வந்த இளைஞனிடம் சிறிதுநேரம் மோகம் கொண்ட குற்றஉணர்வில் மனைவி அழுகையில் அது சகஜம் எனத் தேற்றுவது, முதிர்கன்னி மகள் யாருடனோ லாட்ஜூக்குப் போன செய்தி கேட்ட தந்தை முதலில் கடுங்கோபம் கொண்டு, பின் அவள் என்ன செய்வாள் என்று சமாதானம் அடைவது எல்லாம் கலைமகள் பிராண்ட் கதைகள் என்றால் இவர் கலைமகள் எழுத்தாளர். கிடைக்கும் கதைகளையேனும் முழுதும் படித்துப்பின் தன்முடிவைச் சொல்லும் பொறுமை யாருக்குமில்லை. ஒரு பேட்டியில் சூடாமணி நான் ஜனரஞ்சக எழுத்தாளர் இல்லை என்று சொல்லியிருந்தார்.

சூடாமணியின் கதைகளில் அன்பான உறவுகள் நிறையவே வருகின்றன. இளம் வயதில் விதவையானவர்கள் கதை நெடுக வருகிறார்கள். அம்மா- மகன் உறவு மிகமிக ஆழமாக எல்லாக் கதைகளிலும் வருகிறது. அம்மாவை வெறுக்கும் மகன் கதாபாத்திரமே இவரது கதைகளில் இல்லை. தீண்டாமை கூடாது என்கிறார் (காந்தியைத் தொடர்ந்து படித்தவர்). மறுமணம் செய்யும் கதைகள் பெண்ணின் கோணத்தில் நிறைய வருகின்றன. ஒரே ஒரு கதையில் மட்டும் ஏழுவயது சிறுவனிடம் மறுமணம் செய்யக்கூடாது என்ற பதில் வந்ததனால் அம்மா செய்துகொள்ள மாட்டாள். சுவரொட்டி போல ஆண்களின் கோணத்தில் சொல்லப்படும் கதைகள் சில இருக்கின்றன.

அன்பு, நேசம், வாஞ்சை இந்தப் பதங்களின் அருஞ்சொற்பொருட்கள் எவையெல்லாம் இருக்கின்றனவோ அவை எல்லாமே இவர் கதைகளில் எதிரொலித்துக் கொண்டே இருக்கின்றன. பெண்ணியம், பெண் சுதந்திரம் போன்றவற்றையும் எழுதியிருக்கிறார். பெண்களின் அகஉணர்வுகளை விவரிக்கும் கதைகளையும் எழுதியிருக்கிறார். சூடாமணியின் கதைகளில் இருக்கும் குழந்தைகள் உலகமும் முக்கியமானது. தான் பார்த்த, பழகிய வாழ்க்கையை கதைகளில் கொண்டு வந்திருக்கிறார். இலக்கியம் என்ற அளவுகோட்டின் கீழேயும், மேலேயும் கதைகள் எழுதியிருக்கிறார். தமிழ் சிறுகதைகள் பற்றிப்பேசுகையில் சூடாமணியின் பெயரும் தவிர்க்க இயலாது கண்டிப்பாக இடைபெறும்.

உதவிய நூல்கள்:

1.தனிமைத்தளிர், தேர்ந்தெடுத்த 63 சிறுகதைகள்- காலச்சுவடு பதிப்பகம்.

  1. ஆர். சூடாமணி கதைகள் – கலைஞன் பதிப்பகம்.

3.http://www.sirukathaigal.com/tag/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF/

  1. https://azhiyasudargal.wordpress.com/2010/12/09/%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF/

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s