ஹோட்டல் கே – சரவணன் சந்திரன்:
இவர் மட்டுமல்ல, தமிழில் பல எழுத்தாளர்கள், Wikipedia தகவல்களைக் கொண்டு, கதையில் பிரம்மாண்டத்தைக் கொண்டு வர முயற்சிக்கிறார்கள். Heroin என்ன கஞ்சாவா, overdoseல் Hallucinations வருவதற்கு? கதையே அதைச்சுற்றிப் பின்னப்பட்டிருப்பதால் இதைச் சொல்ல வேண்டியதாகிறது. சமகால நல்ல எழுத்தாளர்களின் உலகச் சிறுகதைகளைப் படியுங்கள். யாராவது தெரியாத ஊரில் நடக்கும் தெரியாத விசயங்களைக் குறித்து கதை எழுதுகிறார்களா? நாம் மட்டும் ஏன் அப்படி செய்கிறோம்?
துடி – பா.திருச்செந்தாழை:
கவிஞர்கள் கதை எழுத வரும்பொழுது மொழிநடையில் அவர்களை அறியாது கவிதைத்துளிகளைச் சிதறவிடுவது ரசிக்கத்தக்கதாகவே இருக்கிறது. திருச்செந்தாழையின் கதைகள் தொடர்ந்து மண்ணின் மணத்தை சுமந்து வருகின்றன. இந்தக்கதையில் கதைச்சுருக்கம் என்று எதுவும் சொல்வது கடினம். ஆனால் ஒரு நல்ல கதையாய் வந்திருக்கிறது. சிறுவன் சோலையின் பார்வையில் முழுக்க இந்தக் கதை சொல்லப்படவில்லை, ஆனால் எங்கெங்கே அவனது பார்வை கதையின் அழுத்தத்தைத் தரவேண்டுமோ அங்கே சோலை வருகிறான். Consciousஆக செய்ததா இல்லையா தெரியவில்லை, இருந்தும் சிறப்பு. பாராட்டுகள்.
https://tamizhini.in/2021/06/24/%e0%ae%a4%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf/
மழைக்கண் – செந்தில் ஜெகன்நாதன்:
நிறையப்பேர் எழுதினால், சாதாரண சென்டிமென்டல் கதையாகி இருக்க வேண்டியது, செந்தில் ஜெகன்நாதனின் மொழி அழகிலும், கதை சொல்லும் யுத்தியிலும் அழகான கதையாகி இருக்கிறது. உடல் எரிச்சல் தாங்காமல் கணவனை சபிப்பது, Cash cropன் மேல் இருக்கும் மோகம், விவசாயி உடல்நிலை சரியில்லை என்றாலும் வயல் கூப்பிடுவது, உதவி இல்லாவிட்டாலும் ஊரார் வாய் என்று எல்லாமே வெகு இயல்பாக வந்துள்ளன. தொடர்ந்து எழுதுங்கள் செந்தில்.
கடல் கசந்தது- லோகேஷ் ரகுராமன்:
Sick Child பற்றிய கதைகள் இப்போது அதிகம் வருவதில்லை. இந்தக் கதை நன்றாக வந்திருக்கிறது. மகனது நோய்மையும், மனைவியின் மர்மப்புன்னகையும் இருவேறுதிசைகளில் கதையை நகர்த்துவது நன்றாக உள்ளது. துணையின் Levelheadednessஐப் பார்ப்பதில் தோன்றும் எரிச்சல் சரியாகப் பதிவாகி இருக்கிறது. சரளமாக நகர்ந்து முடியும் கதை.
தூளி- பாலாஜி பிருத்விராஜ்:
டாக்டரிடம் எதற்கு இவ்வளவு நீளக் கதையை சொல்லவேண்டும்? நடுவில் இந்தக் கதையை டாக்டர் உபயோகித்துவிடுவாரோ என்ற பயம் வேறு. முதலில் கதை சொல்பவர் முத்தையாவா இல்லை தங்கையாவா? நாம் என்ன அறுபது, எழுபதுகளிலா இருக்கிறோம், பையன் பிறந்தால் என்ன? பெண் பிறந்தால் என்ன? எவ்வளவு பெரிய வர்த்தக சாம்ராஜ்ஜியங்களின் வாரிசுகள் பெண்கள்? சுஜி எதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்?
https://tamizhini.in/2021/06/24/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b3%e0%ae%bf/
மரணவிளையாட்டு – குமாரநந்தன்:
சம்பத்தின் இடைவெளியின் சிறிய பாதிப்பு. சிலநேரங்களில் எதிரே நடப்பவற்றைப் புரிந்து கொள்ளவே முடிவதில்லை. மூன்று மாதம் பேசாதவள் இவனுக்குத் தோன்றியதும் ஏன் வந்து நிற்க வேண்டும்? நிஜவாழ்க்கையில் நடப்பது தான். இன்னொன்று லோகேஷ் பேச்சிலும் நீலாவிற்கு என்ன நடந்தது என்பதிலும் உள்ள மர்மம். வெளியே சென்ற நீலாவை Pickup பண்ணச் செல்லும் லோகேஷ், மனோகருடன் விளையாடிய Mindgame இந்தக்கதை என்றும் சொல்லலாம். பாராட்டுகள் குமாரநந்தன்.
அரசியின் கழுத்தணி- இடாலோ கால்வினோ- தமிழில் கமலக்கண்ணன்:
எல்லாப் புகழ்பெற்ற எழுத்தாளர்களுமே மோசமான கதைகள் எழுதியிருப்பார்கள். அதைத் தேடி எடுத்து வந்து தமிழ்ப்படுத்தி என்ன செய்யப்போகிறோம் என்று தெரியவில்லை. சமூகவிமர்சனத்தை நையாண்டியாகச் சொல்லும் கதை இது. கால்வினோவின் Cosmicomics Collection ஒரு நல்ல தொகுப்பு. அடுத்து இந்த வரியைத் தனியாகப் படித்துப் பாருங்கள். “உம்பர்தாவின் கணவர் தம் கடனைக் கட்ட முடியாத நிலைக்கு வருகையில், இந்தச் செயல் இன்னும் அற்புதமானதாகும்”. இது சொல்ல வருவதென்ன? ஆங்கிலத்தை அப்படியே தமிழ்படுத்த முனைகையில் நாம்
மூலக்கதையை இழக்கத் தொடங்குகிறோம்.
ஒன்பது கடிதங்களில் ஒரு புதினம்- ஃபியோதர் தஸ்தாயேவ்ஸ்கி- தமிழில் இல.சுபத்ரா:
தஸ்தாயேவ்ஸ்கியின் சிறுகதைகளில் பலவற்றில் மேஜிக் நிகழ்த்தியிருப்பார். இரண்டு நண்பர்களின் கடிதங்கள் தான் மொத்தக்கதையே. ஏழாவது கடிதம் வரை இருவருக்கும் நடக்கும் வாதவிவாதங்கள், பரஸ்பரக் குற்றச்சாட்டுகள் தான் கதை. எட்டாவது, ஒன்பதாவது கடிதத்துடன் இணைந்த கடிதங்கள் கதையின் போக்கையே மாற்றிவிடுகிறது. கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய். கதைக்குள் கதையாக கணவர்களுக்கு எப்படி அந்தக் கடிதங்கள் கிடைத்தன யோசித்துப் பாருங்கள். நல்ல மொழிபெயர்ப்பில் அமைந்த கதை. பொதுவாக தஸ்தாயேவ்ஸ்கியின் கதைகளை மொழிபெயர்த்தல் கடினம்.
தீ மூட்டுதல் – வில்லியம் ஃபாக்னர்- தமிழில் கயல்:
Symbols அதிகம் உள்ள கதை இது. நெருப்பு, இரத்தம், தரைவிரிப்பு எல்லாமே. குடும்பம் பெரியதா இல்லை நேர்மை பெரியதா என்ற சிறுவனின் குழப்பம். நீதி எப்போதும் எப்படி ஒருதலைப்பட்சமாய் இயங்குகிறது போன்ற பலவிசயங்களைப் பேசும் கதை. கயலின் நல்ல மொழிபெயர்ப்பு.
வழமை போல் கட்டுரைகள், மதிப்புரைகள், குறிப்பாக எம்.கோபாலகிருஷ்ணனின் மயிலன் ஜி சின்னப்பன் சிறுகதைகள் குறித்தான மதிப்புரை என்று பல்வகை அம்சங்களுடன் வந்த தமிழினி இதழ். ஒருமாதம் வரவில்லை என்றாலும், நாம் Miss பண்ணுகிறோம் என்பது இதழின் வெற்றிக்கு சான்று. நன்றியும் பாராட்டுகளும் கோகுல்.