காஃப்காவை நினைக்கையில் உடன் நினைவுக்கு வருவது நண்பருடனான அவரது இந்த உரையாடல் ” கடவுளின் மோசமான தினத்தில் மோசமான மனநிலையில் படைக்கப்பட்டவர்கள் தான் நாம்”. அதற்கு நண்பர் கேட்பது ஏதாவது முன்னேற்றத்திற்கு வாய்ப்பிருக்கிறதா?” அதற்கு இவரின் மறுமொழி ” ஆமாம் நிறையவே, கடவுளுக்கு இருக்கிறது, ஆனால் நமக்கில்லை”. இது தான் காஃப்கா. இவரது காதலி Melina Jesenska இவரது இரங்கலில் குறிப்பிட்டது போல ” அவன் தனியன், வாழ்வைக்குறித்து பயப்படும் பார்வையைக் கொண்டிருந்தவன்”. என்பது Capsule வடிவத்தில் காஃப்காவைச் சொல்வது. காஃப்காவின் எல்லாப் படைப்புகளுமே Nihilismத்தைத் தான் பேசுகின்றன. Nihilismமும் Modernismமும் சேர்ந்த கலவை காஃப்கா.

இவரது Trialஆ இல்லை Castleஆ என்றால் வேறுவேறு தருணங்களில் நான் மாற்றிச் சொல்லக்கூடும். காஃப்காவின் சிறுகதைகள்
அதிகம் பேசப்படவில்லை. In the Penal Colony,
The Hunter Gracchus, Hunger Artist, A country Doctor போன்ற பல நல்ல சிறுகதைகள் தமிழில் வந்துள்ளனவா என்பதும் தெரியவில்லை. அது போலவே இவருடைய Letters to Father. பெரும்பாலான காஃப்காவின் படைப்புகளை நான் படித்த போது அதை சரியாக உள்வாங்கும் Bandwidth எனக்கு இருந்ததா தெரியவில்லை. ஒவ்வொரு படைப்பையும் ஒவ்வொரு காலகட்டத்தில் படிப்பதில் அர்த்தமில்லை. ஒரு மாதம் என்றாலும் ஒரு ஆசிரியரின் மொத்த நூல்களையும் படித்தால் மட்டுமே அவரிடம் அதிகநெருக்கத்தை உணர முடியும்.
படிக்க வேண்டாத ஆனால் படிப்பதற்கு நேரம் செலவழித்த நூல்களின் மணித்துளிகளை திரும்பப்பெறும் வசதி மட்டும் இருந்திருந்தால், காஃப்கா, காம்யு, தஸ்தாயேவ்ஸ்கி என்று எத்தனை பேரை மறுவாசிப்பு செய்யலாம்! காஃப்காவின் சுயசரிதைக்கூறுகளைக் கொண்ட Castle மற்றும் Freudian guilt தான் The Trial. ஆனால் Meramorphosis பயம், ஆழ்மனதில் காஃப்காவிற்கு இருந்த அதே பயம்.
தான் எழுதியது எதுவுமே தேறாது என்ற சந்தேகம் நண்பரிடம் கையெழுத்துப் பிரதிகளைக் கொடுத்து, இவர் இறந்தபின் எரிக்கச் சொன்னது. Metamorphosis நாவல் பின்னாளில் Marquez, Murakami போன்ற பல எழுத்தாளர்களுக்கு Inspiration ஆக இருந்த நாவல்.

Metamorphosis நாவலில் Gregorக்கு மட்டுமல்ல, உருமாற்றம் எல்லா கதாபாத்திரங்களுக்குமே நடக்கிறது. Gregorக்கு வெளித்தோற்றத்திலும், மற்றவர்களுக்கு உள்ளேயும். முதல் மாற்றம் அப்பாவிடம். அடுத்து Greteக்கு. பாசமான தங்கை மனமாற்றம் அடைகிறாள். கடைசியாக அம்மா. கடைசிவரை Gregor குடும்பத்தை நேசிப்பதை நிறுத்துவதேயில்லை. அதனால் அவனுக்கு உள் உருமாற்றம் எதுவும் இல்லை.

சமூகமோ, குடும்பமோ உபயோகமில்லாத நபரிடம் அதே உறவை வைத்துக் கொண்டு இருப்பதில்லை. நாவல் வெளிவந்து நூறு ஆண்டுகள் ஆனபின்னரும் இன்றும் சமூக, குடும்ப நோக்கு அதுவே, இன்னும் நூறு ஆண்டுகள் ஆனாலும் அதுவே இருக்கும்.
Gregorன் மேனேஜர், சகஊழியர்களை விட்டு விடுவோம், அவ்வளவு காலம் குடும்பத்திற்கு உழைத்தபின்னும் குடும்பம் அவனை ஏற்றுக் கொள்ளவில்லையே. அவன் இருப்பதே அவமானம் என்றல்லவா நினைத்தார்கள். இப்போது இங்கே எழும் பெரும் கேள்வி நாம் சொந்தங்கள் என்று நம்பிக்கொண்டு வாழும் இந்த வாழ்க்கையில் உறவுகளின் தாத்பர்யம் என்பது என்ன?

முக்கியமான Magical realism நாவல்கள் பட்டியலில் ஒருநாளும் Metamorphosis வந்ததில்லை. ஆனால் லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்களுக்கு முன்பே, Marquez மற்றும் பலருக்கு வெகுகாலம் முன்பே வந்த முழுமையான Magical realism நாவல் Metamorphosis தான்.

வீட்டில் அப்பாவாலும், அலுவலகத்திலும் கடுமையான உழைப்பாளி என்று கருதப்படும் Gregor மனதுக்குள் தான் பார்க்கும் வேலையை வெறுக்கிறான். ஒற்றைப் பரிமாணம் கொண்ட வேலையை மீண்டும் மீண்டும் வாழ்வாரத்திற்காக செய்ய நேருகையில் ஏற்படும் சலிப்பு எந்தக் காலத்திலும் எல்லா நாடுகளிலும் மனிதர்கள் உணரக்கூடிய ஒரு விசயமாகவே இருக்கும்.

இருத்தலின் தேவைகள் மாற்றத்தைக் கொண்டு வருகின்றன. அப்பா ஏன் அதற்குமுன் வேலைக்கு செல்லவில்லை? அம்மா ஏன் தைக்கவில்லை? Grete ஏன் வேலைக்கு செல்லவில்லை? குடும்பம் மொத்தமும் அடுக்களையில் அடைந்து வாடகைக்கு இருப்பவர் சாப்பிட வழி வகுக்கும் போது, அவர்களை மகிழ்விக்க Grete வாத்தியம் வாசிக்கும் போது அறையில் யாருக்கும் தொந்தரவின்றி அடைந்திருக்கும் Gregorஐ ஏன் குடும்பத்தினரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை? இருத்தலின் தேவைகளுக்கு முன் உறவுகள் பெரியவிசயமாகத் தோன்றுவது இல்லை இல்லையா?

குற்ற உணர்வு என்பது ஆரம்பத்தில் இருந்து கடைசிவரை Gregorக்கு இருக்கும். முதலில் வேறு காரணங்களுக்காக பின்னர் குடும்பத்திற்கு பாரமாக இருப்பதற்காக. அதே போல் குடும்பத்தில் ஒருவன் பூச்சி ஆனது குறித்தும் சரி அவனது மறைவுக்குப் பின்னரும் சரி அது குறித்து குடும்பத்தினர் தமக்குள் பேசிக்கொள்வதில்லை. இது சாதாரணமாக நடக்கும் விசயமில்லையே. காஃப்கா தெரிந்தே அந்த மௌனத்தைப் புகுத்தியிருக்க வேண்டும்.

நூற்றாண்டுக்குப் பின்னரும் இந்த நாவல் குறித்துப் புதிய பார்வைகள் வந்து கொண்டே இருக்கின்றன. வாசக அனுபவத்திற்கும் பார்வைக்கும் ஏற்ப தன்னை விரித்தும் சுருக்கியும் கொள்ளும் படைப்பு தான் Metamorphosis. வாழ்வில் ஒருமுறையேனும் படிக்க வேண்டிய நூல்.

One thought on “The Metamorphosis by Franz Kafka:

  1. அருமனை ஃகாப்காவின் நாவல் விமர்சனம்.. நன்றிகள் சார்.

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s