பாசமலரில் முதலிரவு அறையில் தங்கை சாவித்திரியின் புகைப்படத்தைக் கவிழ்த்து வைப்பார் சிவாஜி. அது ஒரு நுட்பமான விசயம். உறைந்த முகம் சட்டகத்துக்குள் இருந்து ஒன்றும் செய்யப் போவதில்லை. ஆனால் நமக்கு உள்மனதில் அது பார்த்துக் கொண்டிருக்கிறது என்பதே ஒரு சங்கடமான உணர்வை அளிக்கும்.
வாடிக்கையாளர் ஒருவரின் மொத்தக்குடும்பமும் வேன் விபத்தில் மரித்து, இவரும் இவர் கணவரும் எஞ்சினர். வங்கிவர அவர் யோசித்தார் என்று நானே அவர் வீட்டுக்குச் சென்றேன். வரவேற்பரையில் வரிசையாகப் புகைப்படங்கள், மாலையிட்டு, பொட்டுவைத்து, ஒரு பன்னிரண்டு வயதுக்குழந்தை உட்பட பத்துக்கும் மேல். மாதமானதால் அந்தப்பெண் சாதாரணமாகப் பேசினார். என்னால் பேசமுடியாது, யாரோ கழுத்தை இறுக்கிப் பிடித்தாற்போல். என் சொந்த வாழ்க்கை குறித்த கேள்விகள் கேட்டு என்னை நிதானத்திற்குக் கொண்டுவந்தார் அந்த இருபத்திரண்டு வயதுப்பெண்.
போட்டோ பிடித்தால் ஆயுள் குறையும் என்ற நம்பிக்கை பரவலாக உலகம் முழுதுமே இருந்தது. தாண்டவராயன் கதை ஆரம்பத்தில் புகைப்படம் என்று தெரியாது மாயச்சைத்ரீகன் வரைந்த ஓவியம் என்பார்கள். புகைப்படம் எடுத்த குடும்பம் சாபத்தில் சிக்கிக்கொள்ளும்.
வங்கி வளர்ந்து சிலவருடங்களில் வேலைவாய்ப்புக்காக மனு செய்தவர்களில் பலர் பெண்கள். அவர்களது புகைப்படங்கள் நூற்றுக்கணக்கில் நான் ஏதோ மனிதவளத்துறை பைல்களைத் தேடுகையில் கிடைத்தன. எல்லோருக்கும் என் அம்மாவின் வயது இருக்கக்கூடும். இது கண்துடைப்பு என்று தெரியாமல் நம்பிக்கையுடன் அனுப்பிய அப்பாவிப்பெண்களின் முகங்கள் காரணமானவர் எல்லோரையும் விட்டுவிட்டு என்னை ஏன் ஏன் என்று கேட்டு காலமயக்கத்தில் ஆழ்த்தின.
புகைப்படத்தைக் கையில் எடுத்துக்கொண்டு வேடிக்கை செய்வதாக அந்தப்பெண் முன்னே இதோ முத்தம் கொடுக்கப்போகிறேன் என்ற பயமுறுத்தலும் பதற்றமும் சிந்தித்துப் பாராமலே நடந்தவை. என்னை மட்டும் ஏன் நினைவுகள் விடாது துரத்துகின்றன!