ஆசிரியர் குறிப்பு:
திருநெல்வேலியில் பிறந்தவர். பெங்களூரில் வசிக்கிறார். தமிழில் இளம்முனைவர் பட்டம் பெற்றவர். இவளுக்கு இவள் என்றும் பேர் என்ற கவிதைத்தொகுப்பு ஏற்கனவே வெளிவந்துள்ளது. கல்கி ஆசிரியர் குழுவில் பணியாற்றியவர். இது இவரது சமீபத்திய கவிதைத் தொகுப்பு.
பால்யத்தின் வெளிச்சம் வயதாக ஆக, குறைந்து தேவைகளின் இருள் படிய ஆரம்பிக்கிறது. பகல் இரவு என்ற வித்தியாசம் நித்திரையினால் மட்டுமே அறியப்படுகிறது.
” இன்றைய பகலின்
இருட்டை உரித்துக்கொண்டு
என் மகளின் பகலுக்குள்
மெல்ல நுழைகிறேன்
கதகதப்பாகப் பளீரிடும்
அவளுடைய வெயில்
அணைத்துக்கொள்கிறது
என்னை மெதுவாக”
நீயில்லா கனமான இரவுகள், கண்ணீர் இரவுகள், விடியா இரவுகள் என்று பலவற்றைக் கடந்து வந்தோம். ஆனால் இந்த உவமைகள் அடடா என்று சொல்ல வைக்கிறது. திருவையில் உளுந்து அரைக்கத் திணறிய சின்னப் பெண்ணுக்கு உதவி செய்து பின் மணிக்கட்டு வலித்ததும் நினைவுக்கு வருகிறது.
” வாழைக்குருத்தில் ஒழுகும்
நுண்மழைத் துளியாகும் எளிய இரவு
கனத்துக் கிடக்கிறது இன்று சிறு மரக்குச்சியிழுக்கும் திருவைக்கல்லென”
முபீன் சாதிகா பாணி மொழிவிளையாட்டு இந்தக்கவிதை.. தலை காய வைக்கும் நடுத்தரப்பெண்ணை லா.ச.ரா நினைவிற்குக் கூட்டி வருகிறார். அவள் அடர்ந்த தலைமுடிக்குள் சிணுக்கோலியை உள்நுழைத்து நெம்பி வெளியெடுக்கிறாள்.
” சிணுக்கோலி
சிணுக்கோரி
சிக்குநீக்கி
சிணுக்கோதி
மயிர்க்கோதி
சிடுக்குருவி
தலைகோதி……….”
தாலி பெருக்கும் சடங்கு கவிதை, பழைய நாள் நிகழ்வுகள், கைராசி, சொந்தபந்தம் எல்லாம் சொல்லி முற்றிலும் தனிப்பட்ட அனுபவமாய் முடியும் இந்தஇடம் ஏதேதோ உணர்வுகளைக்கூட்டுகிறது.
” கயிறு மங்கின போதும்
அக்கணத்தின் நிறம் மாறவில்லை
கனவுகளின் நதிகளில்
கரை மோதும் நீர் வற்றுவதில்லை
காலம் நகர்கையில்
கண்ணிகள் நெகிழ்கின்றன
இழைபிரிந்து நின்றால் நான்
கயிற்றின் பாகமில்லையா என்
காந்திமதித்தாயே!”
நான் ஏதோ சமையல் நடுவில் வேடிக்கை பார்க்கும் பெண் என்று பார்த்தால்……..
காலனை பருத்திவிதை அள்ளவைத்து, வெத்திலைச் சருகைத் தள்ள வைத்து கிழவி அத்தனை செய்கையில் காந்திமதி அம்மன் எண்ணெய் சட்டியைக் கொஞ்சம் நேரம் பார்த்துக் கொண்டால் தான் என்னவாம்!
” பதம் பார்க்க இட்ட ஒரு துளி மாவு
மெதுமெதுவாக மேலே வருகிறது
வெளிப்பிரகாரப் பலகணிவந்து
ரதவீதி வினோதங்களைப் பார்க்கிறேன்
காற்று எங்கிருந்தோ இழுத்துவந்த நீர்த்துளி காயும் எண்ணெயில்
பட்டுத் தெறிக்கும் ஒருவரி
கர்ப்பகிருஹத்துக்குத்
திரும்பும் நேரம் வந்துவிட்டது”
காற்றுக்கென்ன வேலி கடலுக்கென்ன மூடி என குதித்து விளையாடும் ஒரு பெண் இந்தக்கவிதைகளில் பவனி வருகிறார். அன்பின் மொழி, நேசத்தின் பாஷை பேசும் கவிதைகள் என்பதாலேயே இன்னொரு பெண்ணிற்கு அன்னையின் சாயல் அதன்பின் பிள்ளையின் சாயலும். அன்பால் தேடும் போது அத்தனையும் உறவுகளே.
வெய்யில்,மழை, பறவை, பூக்கள், ஆட்டுக்குட்டி, நதி எனப்பல இயற்கைக் காட்சிகள் கவிதையாகி இருக்கின்றன. தனிமையும், காத்திருப்பும் சில கவிதைகளில். விலங்குகள், மரங்களிடம் விடாது பேசுபவர்கள் இருக்கிறார்கள். இவர் கட்டிடங்களிடம். இவர்களுக்கு தனிமைத்துயர் என்பதே கிடையாது.
ஆட்டுக்குட்டியை விரட்டியவர் செல்ல மகளின் கண்களில் ஆட்டுக்குட்டியைக் காண்பது, என் தாய்க்கும் தாய்க்கும், தாயாக வந்தவர்களின், என் மகளுக்கும் மகளுக்கும் மகளாகப் போகிறவர்களின் சிசுமுகமே என்று குழந்தைமையின் நித்தியத்தைச் சொல்வது போலச் சின்னச்சின்ன கணங்களின் அற்புதங்கள் கவிதையாகி இருக்கின்றன. அற்புதங்களைத் தேடுபவர்களுக்கு அவை அவர்கள் வீட்டு சாளரம் வழியாகக்கூட உள்நுழைந்து கண்முன் வந்து விடுகின்றன. தொடர்ந்து எழுதுங்கள் கார்த்திகா. பாராட்டுகள்.
பிரதிக்கு:
எழுத்துப்பிரசுரம் 98400 65000
முதல்பதிப்பு பிப்ரவரி 2021
விலை ரூ 80/-