ஆசிரியர் குறிப்பு:
கவிஞர். அமெரிக்காவிலுள்ள ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் தெற்காசிய மதங்கள், பண்பாட்டு மானுடவியல், இந்திய மருத்துவ வரலாறு, பெண்ணியம் ஆகிய துறைகளூடே ஆராய்ந்து முனைவர் பட்டம் பெற்றவர். தற்போது அமெரிக்காவில் சியனா கல்லூரியில் இணைப் பேராசிரியராகப் பணிபுரிகிறார். தன் துறைகள் சார்ந்து கட்டுரைகளை ஆய்வு இதழ்களில் வெளியிட்டிருக்கிறார். காலச்சுவடு, கல்குதிரை, மணல்வீடு, கூடு ஆய்விதழ் முதலிய தமிழ் இதழ்களிலும் கட்டுரைகள் வெளிவந்துள்ளன. கவிதை தவிர மொழிபெயர்ப்பு, இலக்கியத் திறனாய்வு, புனைகதை ஆகியவற்றிலும் ஈடுபாடு கொண்டிருப்பவர்.
மாதொருபாகன் நாவலை முன்வைத்து எழுதிய கட்டுரையில் மனுஸ்மிருதி, நாரதஸ்மிருதி, சத்யவதி கதை மூலம் நியோகம் என்ற வழிமுறையை விளக்குகிறார். நான் சிறுவனாய் இருக்கையில் தாம்பத்யம் என்பது சந்ததி வளர்ச்சிக்காக மட்டுமே, இன்பம் துய்ப்பதற்கல்ல என்று தீராநம்பிக்கை கொண்டிருந்த சிலரைப் பார்த்திருக்கிறேன். கூட்டுக் குடும்பங்களின் இருட்டுசுவர்களுக்குள் பல இரகசியங்கள் மறைந்து இறந்தும் போயின. தி.ஜாவின் நளபாகம் வாரிசு எனும் மையக்கருத்தைக் கொண்டது.
பெருமாள்முருகன், மாதொருபாகனில் இந்த சந்ததிப் பிரச்சினையை விடத் திருவிழா மையப்படுத்தப்பட்டதன் காரணம் சத்தியை நினைவு கூர்வதும், இருவரைப் புறக்கணித்து மூன்றாமவரைத் தேர்ந்தெடுத்தபின் வரும் விவரணைகள் கூட காரணமாய் இருக்கக்கூடும். தலைவன் தலைவி என்று பெயர் சொல்லா மரபில் வந்தவர் நாம். வாய்மொழி வரலாறு இவர்கள் தான் என அடையாளம் காட்டியதும் இன்னொரு காரணம். சந்ததியே முக்கியம், முதலில் வந்தவன் தான் சாமி என்பதற்கும் இந்தக்கதையில் வருவதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன.
பரியேறும் பெருமாள் படத்தில் இரண்டு வன்முறைகள் நிகழ்கின்றன. ஒன்று சாதிய ரீதியிலான வன்முறை. அடுத்தது மூன்றாம் பாலினம் மீது தொடுக்கும் வன்முறை. இதில் தந்தை பெண்வேடம் இடுபவர் மட்டுமே, அதன் சாயலைத் தக்க வைத்துக்கொண்டவர்,மூன்றாம் பாலினம் இல்லை, இருந்தும் அதே வன்முறைத் தாக்குதல் நிகழ்கிறது.
சாதியும் நானும் என்ற பெருமாள் முருகனின் அனுபவக்கட்டுரைகளின் மீதான கட்டுரை, சாதி மறுப்பில் ஒளிந்திருக்கும் பாசாங்குகளைப் பேசுகிறது.
கௌரவக்கொலை மாற்றுச்சொல்லாடலை விட அதன் பின்ணணியை ஆராய்கிறது. ஒரு சமூகத்தை மட்டும் தனிமைப்படுத்தி நான் நிழலில் ஒதுங்க தயாராக இல்லை. நீங்கள் அத்தனைபேரும் உத்தமர் தானா சொல்லுங்கள்! ஒரு ஆணும் பெண்ணும் உளமுவந்து சேர்ந்து வாழ நினைக்கையில் இன்னொருவர் அங்கே இடையில் வர இடமில்லை. ஆணோ பெண்ணோ முட்டாள்தனமாக செய்திருந்தாலும் அவர்கள் பட்டுத் திருந்தப் போகிறார்கள். பெண்ணுடல் ஒன்றும் பித்தளைப்பாத்திரத்தில் வைத்த புளி இல்லையே! சொத்துரிமையில் பெண்களுக்கு சரிபங்கு என்பதும் இதில் முக்கியமான இன்னொரு காரணி. அடுத்து ஒரு ஆண் தாழ்ந்தசாதி எனச் சொல்லப்படும் பெண்ணை மணப்பதற்கும், ஒரு பெண் அதையே செய்வதற்கும் எதிர்வினைகள் வேறு. எனவே சாதி என்பது மட்டும் இங்கே ஒரே Criteria இல்லை.
தாயகம் கடந்த எழுத்து ஒரு முக்கியமான கட்டுரை. சில எழுத்தாளர்களின் சில கதைகள் மட்டும் வைத்துக் கண்ணாமூச்சி போல் ஒரு கட்டுரை என்று இவரே சொல்வதால் மேலும் அதுபற்றி பேசுவதற்கில்லை. எதிர்பால் வன்முறை, குடும்ப அமைப்பில் பெண்கள் மீதான சுரண்டல் தாண்டி பல கதைகள் வந்துள்ளன. நிரூபாவின் சில கதைகள், சுஜா செல்லப்பனின் சிங்கப்பூர் மெட்ரோ நிலையம் ஒன்றில் காத்திருப்பவளின் கதை, சுசித்ராவின் ஒளி போன்ற கதைகள் வழக்கமான வட்டத்தைத் தாண்டி எழுதிய கதைகள். பொறுப்பது இல்லை பொங்கி எழுவது என்பதைத் தாண்டிப் பெண் எழுத்தாளர்கள் பலரின் கதைகள் ஆண்பெண் இடையில் வரைந்த கற்பனைக்கோட்டை அழித்துவிடுகின்றன. இன்றைய பெண் எழுத்தாளர்களின் கதைகளை முன்னிறுத்தி ஏன் பெண்ணெழுத்து என்பது ஒரு Onsolete item என்று கட்டுரை எழுத வேண்டும். அதிகநேரம், உழைப்பைக் கோருவது, பார்க்கலாம்.
பசு தாய்மை இந்து தேசியம் என்ற கட்டுரை ஆதியில் இருந்தே பசு-இரை என்ற Conflict இருந்து வருவதைச் சொல்கிறது. நமக்குப் பிடித்த உணவை நாம் சாப்பிட (அருகிவரும் உயிரினங்கள் தவிர்த்து) யாரும் தடைவிதிக்க நியாயமில்லை. அதே நேரத்தில் சில அரசாங்கங்கள் சில உணவுகளுக்கு இறக்குமதிக் கொள்கையிலேயே தடை விதித்திருப்பதையும் நாம் ஒரு Academic interestக்காகவாவது தெரிந்து கொண்டிருக்க லேண்டும்.
எட்டு கட்டுரைகள் கொண்ட தொகுப்பு இது. பெருந்தேவி கல்வித்துறையையும் தமிழ் நவீன இலக்கியம் இரண்டையும் Represent செய்கிறார். புகோவ்ஸ்கி, பர்ரா போன்ற உலக இலக்கியப் பரிட்சயமும் இவருக்கு உள்ளது. அதனால் இவரது எழுத்துக்கள் எப்போதும் அகண்ட பார்வையைக்கொண்டிருப்பதில் ஆச்சரியமில்லை. உரைநடையோ, கவிதையோ மொழியில் விடாது பரிசோதனைகள் செய்பவராதலால் படிக்கவும் சுவாரசியமான கட்டுரைகள்.
இவரே ஓரிடத்தில் சொல்லி இருப்பது போல, அக்கிரஹாரத்தில், பழமையில் ஊறிய மனிதர்கள் நடுவே மாதத்தில் மூன்று நாட்கள் தனியாகக் காட்சிப்பொருளாக உட்கார்ந்த அனுபவமும் இருக்கிறது. எத்தனை ஆண்டுகள் அமெரிக்காவில் கழித்தாலும் அந்த அனுபவத்தின் நிழல்கள் இன்னும் இவரது நினைவில் இருக்கும். அந்த அடையாளத்தை அழிக்கும் யத்தனமாக இவரது தராசு எதிர்திசையில் வேகமாக சாய்வது போல் தோன்றுகிறது. எல்லாமே Case to case basis ஆக எந்த முன்முடிவும் அடையாளமும் இல்லாமல் அணுக வேண்டியவை. தெருவில் சைக்கிளில் வந்து விழுந்துபட்டவன் தவறு செய்திருக்கவே மாட்டான் என்று வரும் பொழுதே வாயில் நீதியுடன் வந்தால் அடுத்து பேசுவதற்கு எதுவுமில்லை.
இவரது கட்டுரைகளில் அதிகம் உடன்படலாம் இல்லை முரண்படலாம் ஆனால் மேலே சொன்னது போல் இவர் போல் எதிரெதிர் உலகங்களைக் கடந்து வந்தவரின் குரலை ஒரு அனுபவத்திற்காகவாவது கேட்க வேண்டும். கேட்டுப் பாருங்கள்.
பிரதிக்கு:
Amazon.in
காலச்சுவடு பதிப்பகம் சென்னை
9677778863 -91-4652-278525
முதல்பதிப்பு பிப்ரவரி 2021
விலை ரூ 160 Kindle ரூ 126.