சிலரது பரபரப்பைப் பார்ப்பதற்கே அடிவயிற்றில் கிலி பற்றிக்கொள்கிறது. போனில் பேசுகையில் கூட சீக்கிரம் சீக்கிரம் என்று திருப்பதி பெருமாள் சன்னதியை நினைவுபடுத்துவார்கள்.
அவர்கள் அன்று செய்யவேண்டிய வேலைகளின் பட்டியலைப் பேசாது அவர்களால் உரையாடலை முடிக்க முடியாது.
தனியார் வங்கியின் மேலாளர் என்பது என் அனுபவத்தில் ஒரு மனப்பயிற்சியை அளிக்கிறது. காலை நுழைந்தவுடன் ஒரு புகாரில் ஆரம்பிக்கும் அன்றைய அலுவல் இரவில் எந்நேரம் வேலை முடியுமோ அந்த நேரத்திலும் ஒரு புகாருக்குப் பதில் சொல்லி முடியும். மேலதிகாரிகளை விட்டுவிடுங்கள், அவர்கள் புலிப்பாலைக் கொண்டு வந்தாலும் மேலே ஏடுபடிந்திருக்கிறது பார் என்ற அவர்கள் வருத்தத்தைத் தெரிவிப்பார்கள். என் ஆச்சரியம் எல்லாம் அரசுவங்கிகளில் அவ்வளவு அனுசரித்து நடந்துகொள்ளும் வாடிக்கையாளர்கள் தனியார் வங்கியில் நுழைந்தவுடன் காந்தி வாடிக்கையாளரைப் பற்றி சொல்லிய வரிகளின் ஒவ்வொரு வார்த்தையையும் மறக்காது நினைவுகூர்வது தான். இருமுனைத் தாக்குதல் நாம் அறியாது ஒரு Levelheadednessஐத் தருகிறது போலும்.
மீண்டும் நான் பார்த்தவகையில் சொல்கிறேன். தனியார் பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் மற்றவர்களைவிட எந்நேரமும் ஒரு பரபரப்பில் இருப்பது போல் தோன்றுகிறது. கூழாங்கல்லை சாக்லெட் என்று கொடுத்தால் யோசிக்காமல் வாயில் போட்டுக்கொள்வார்கள். நண்பரிடம் அவர் மனைவி காலையில் சாப்பிட்டேனா என்று அடிக்கடி கேட்பார் என்றார் காதலுடன். டீச்சர் ஏதாவது கேள்வி கேட்டுத்தானே ஆகவேண்டும் என்று சொல்லவந்ததை அவர்கள் காதலின் இடையில் நுழைய விரும்பாது தொண்டையிலேயே நிறுத்திக் கொண்டேன்.