பிரகாசுக்கு என்ன நினைத்து அந்தப்பெயர் வைத்தார்களோ, அவருக்கும் அந்த பெயருக்கும் ஸ்நானபிராப்தி கூட இல்லை.
வங்கியில் இருந்த அவரது அப்பா இறந்து கருணை அடிப்படையில் கடைநிலை ஊழியராக வேலை கிடைத்தது. பத்து வருடங்கள் கழித்து காசாளரானார். சொந்தத்தில் பெண் கொடுத்தார்கள். அழகான பெண். பிரகாசுக்கு பேசுகையில் கடைவாயிலிருந்து எச்சில் வடியும். இரண்டு மூன்று நாள் தாடி. தொடர்ந்து பேசுகையில் குரல் தடுமாறி பேச்சு நிற்கும். அவர் மேல் இனம்புரியாத ஒரு துர்நாற்றம் எப்போதும் நிரந்தரமாய். காசியபனின் அசடு படித்திருக்கிறீர்களா? பிரகாசையும் யாரும் நண்பன் என்று சொல்ல யோசிப்பார்கள்.
அஜய் பிறந்தது பணக்கார வீட்டில். நல்ல நிறம். உயரம். சிரிக்கும் போது பல்வரிசை பளீர். வங்கி வேலை அவருக்கு பொழுது போக்கு தான். அப்பா அடிக்கடி கேள்வி கேட்காமல் பணம் அனுப்புவார். கான்வென்ட் ஆங்கிலத்தில் அஜய் எந்த விசயத்தையும் சரளமாக அலசுவார். பெண்கள் அஜயை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என நினைத்து அடிக்கடி வீழ்ந்தார்கள்.
பிரகாசுக்கும் அஜய்க்குமான நட்பு எங்கள் எல்லோருக்கும் ஆச்சரியம். மதிய உணவை வீட்டில் இருந்து எடுத்து வந்தாலும் அஜயுடன் வெளியே சாப்பிட செல்வார். சினிமாவிற்கும் அடிக்கடி போனார்களாம்.
அஜயை, அவ்வளவு வேதனையுடன் நான் பார்த்ததே இல்லை. குடித்திருந்தார். மாறுதலுக்கு அப்பாவிடம் சொல்லி RBIல் சொல்ல சொல்லி இருக்கிறேன் என்றார். நான் மௌனமாக இருந்தேன். என்ன நினைத்தாரோ அஜய் Holy Shit! “உன்னைப் பார்க்கவே அருவருப்பாக இருக்கிறது” என்றால் என்ன அர்த்தம் என்றார். அவரும் என்னிடம் பதில் எதிர்பார்க்கவில்லை, நானும் சொல்லவில்லை.