ஆசிரியர் குறிப்பு:
சொந்த ஊர் மதுரை, தற்பொழுது ஒசூரில் வசித்துவருகிறார். மத்திய அரசின் பி.எஸ்.என்.எல் தொலைத்தொடர்பு நிறுவனத்தில் பொறியாளராகப் பணியாற்றுகிறார். மின்னணுவியல் மற்றும் தொடர்பியலில் பொறியியல் பட்டமும், மேலாண்மையில் பட்டமேற்படிப்பும், வாடிக்கையாளர் மனப்பான்மை தொடர்பான புத்தாய்வில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். தொடர்ந்து மொழிபெயர்ப்பு, நாவல், சிறுகதை என பலதளங்களில் இயங்கும் இவரது சமீபத்திய கிண்டில் நாவல் ஆது. Pentopublish4 போட்டியில் இடம்பெறுகிறது.
ஒரு கொலை நடப்பதுடன் நாவல் தொடங்குகிறது. மதுரையில் வளர்ந்தவர்கள், இந்த நாவலில் வரும் மதுரை பாஷையினால் மட்டுமல்ல, நிகழ்வுகள் விவரிக்கப்படும் விதத்தில் எங்கோ நேரில் பார்த்ததை நினைவுகூரும் வரையில் இருப்பதை உணரமுடியும். இறந்த உடலையும் அவமானப்படுத்த வேண்டும் என்ற வெறி மதுரை ரவுடிகளுக்கு உரித்தானது.
ஹோமர் ஒருவகை உயர்இன பந்தயப்புறா. இதன் விலை மட்டுமல்ல, பராமரிப்புச் செலவும் அதிகம். இது குறித்து நிறையத்தகவல்கள் சேகரித்து நாவலில் கலந்திருக்கிறார். ஒரு இடத்தில் மொபைல் நம்பர் எழுதிக் கொடுப்பதாகத் தகவல் வருகிறது. மொபைல் யுகத்தில் GPS activity tractor கூட இருக்கிறதே. அதை ஏன் பந்தயத்தில் உபயோகிக்கவில்லை!
அரசியல் கொலைகளில் உண்மைக் கொலையாளி எந்நாளும் கண்டுபிடிக்கப்படப் போவதில்லை. கண்டுப்பிடிக்க முடியாது என்ற காரணத்தினால் அல்ல, கண்டுபிடிக்க விரும்பாததால் அவை கண்டுபிடிக்கப் படுவதில்லை. ஒரு அரசியல் கொலையை செய்தது யார் எனும் சஸ்பென்ஸைக் கடைசி வரை நகர்த்துவது இந்த நாவல்.
இது போட்டிக்காக அதன் சட்டதிட்டங்கள், பக்க அளவுகளுக்குட்பட்டு எழுதப்படும் நாவல். ஆனால் ஆங்கிலத்தில் சஸ்பென்ஸ் நாவல்கள் இப்படி எழுதப்படுவதில்லை. Whodunit என்ற வகையில் இந்த நாவலின் சஸ்பென்ஸ் நன்று. ஆனால் புறா வளர்ப்பு, நாய் வளர்ப்பு போன்றவை நாவலுடன் ஒட்டாமலேயே நிறைய பக்கங்களை விழுங்கிவிடுகின்றன. எத்தனையோ முறை சொன்னதைத் தான் திரும்ப சொல்ல வேண்டியதாய் இருக்கிறது. ஆங்கிலத் திரில்லர்களில் சிறந்தவை ஐம்பதாவது படித்துவிட்டுப் பின் யாரேனும் தமிழில் திரில்லர் எழுத வருவார்கள் என்ற என் காத்திருப்பு தொடர்கிறது.
பிரதிக்கு:
https://www.amazon.in/dp/B08XMGWYT3/ref=cm_sw_r_wa_apa_8GBVAXP2ME1C3956N1EA
விலை ரூ 99.