Laura இத்தாலியைச் சேர்ந்தவர். இலக்கியத்தில் முதுகலை மற்றும் முனைவர் பட்டத்தை Tokyo பல்கலையில் பெற்றவர். கடந்த பதினைந்து வருடங்களாக ஜப்பானை உறைவிடமாகக் கொண்டவர். ( Jhumpa Lahiri அமெரிக்காவில் இருந்து இத்தாலிக்குக் குடிபுகுந்தவர்.) ஜப்பானில் இத்தாலிய மொழியைக் கற்பிப்பவர். தன்னுடைய Blog மூலம் பல பிரபல ஜப்பானிய எழுத்தாளர்களை இத்தாலியில் பிரபலமாக்கி, அவர்களது நூல்களை இத்தாலியில் தேடிப்படிக்கச் செய்தவர். இத்தாலியும் ஜப்பானும் கலந்த கலவைக் கலாச்சாரத்தைத் தன் படைப்புகளில் கொண்டுவருபவர். 2021ல் வெளிவந்த நாவல் இது.
Jhumpa Lahiriஐ இத்தாலியர்கள் தங்களில் ஒருவராகக் கொண்டாடுவது போலவே, Lauraவை ஜப்பானியர்கள் தங்களில் ஒருவராகப் பார்க்கிறார்கள். வடகிழக்கு ஜப்பானில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எழுதிய இந்த நாவல், மூலத்தில் இத்தாலியில் எழுதப்பட்டிருந்தாலும் ஜப்பானியப் பத்திரிகைகள் இதை ஜப்பானிய நாவல் என்றே கூறுகின்றன.
ஜப்பானின் குன்று ஒன்றில் அமைந்த தோட்டத்தின் நடுவே யாரும் உபயோகிக்காத
பழைய தொலைபேசி கூண்டு ஒன்று இருக்கிறது. அதன் ரீஸிவரை எடுத்துப் பேசுகையில் காற்றில் மிதக்கும் வார்த்தைகள் இறந்த சொந்தங்களைப் போய்ச்சேரும் என்பது வழிவழியாய் ஜப்பானில் இருக்கும் நம்பிக்கை. மறுமொழி கிடைக்கப்போவதில்லை, அதனால் என்ன நாம் சொல்ல வேண்டியதைச் சொல்லலாம் அல்லவா! கண்ணே நீ இல்லாது வாழப் பிடிக்கவில்லை என்ற செய்தி போல் சொல்ல வேண்டியவை எத்தனை இருக்கின்றன!
2011 ஆம் வருடத்திய சுனாமி ஜப்பானிலும் பேரிழப்பைக் கொண்டு வந்தது. Yui தன் மகளையும் தாயாரையும் அந்த சுனாமியில் இழந்தாள். Takeshi அவன் மனைவியை இழந்ததால் ஒரே மகள் பேசும்சக்தியை இழக்கிறாள். இருவரும் Phone Booth அருகே தற்செயலாக சந்திக்கிறார்கள். பின் மாதம் ஒருமுறை திட்டமிட்டு சந்திக்கிறார்கள். இழந்தவர் இருவர் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருக்க இயலுமா!
எல்லாவற்றையும் இழந்த பிறகு நம்பிக்கைக்கு ஏதும் வழி இருக்கிறதா? துயரத்தின் ஆழத்திற்கு அடிக்கடி செல்லும் நாவல். Yui தன் மகளுக்கு சொல்லும் மீன் வயிற்றில் மோதிரம் செல்லும் தேவதைக் கதையும், அவளது மகள் ஒவ்வொரு வரிக்கும் அப்புறம் அப்புறம் என்று கேட்பதும், அவள் இறந்தபின் அதே புத்தகத்தைப் பிரித்து Yui படித்து மகளின் குரலை காற்றுவெளியின் இடுக்குகள் நடுவே தேடுவது, தன் மூன்று குழந்தைகளையும் சுனாமியில் பறிகொடுத்த தாய் நிசப்தத்தைச் சகிக்கமுடியாது தொடர்ந்து பேசிக் கொண்டே இருப்பது போல, பல
இடங்களில் துயரத்தின் வலியைச் சொல்லிச் செல்லும்.
ஜப்பானியக் கலாச்சாரத்தில் சில நம்பிக்கைகள் ஆச்சரியமாக இருக்கிறது. தொப்புள் கொடியைப் பத்திரப்படுத்தி வைத்திருந்து, போருக்கு செல்லும் போது மகனுக்கு, திருமணம்முடிந்து செல்லும் பெண்ணுக்கு துணையிருக்கும் என்று தருகிறார்கள். நோயுற்ற குழந்தைக்குப் பொடி செய்து கொடுக்கிறார்கள். இதே நம்பிக்கை முன்னர் இந்தியாவிலும் இருந்தது.
நல்ல எழுத்தாளர் என்பது வார்த்தைப் பஞ்சம் இல்லாமலிருப்பது மட்டுமல்ல, அதையும் தாண்டி ஒரு captivating proseஐயும் கொண்டிருப்பது. ஆங்கிலத்திலேயே இவ்வளவு Rich ஆக இருக்குமென்றால் இத்தாலியில் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்! நீண்ட அத்தியாயத்தின் பின் அடுத்த அத்தியாயம், தொடர்புடைய விசயங்களை Fun modeல் ஒரு பக்கத்துக்கும் குறைவான சிறு அத்தியாயம் என்று மாறிமாறி வருவது ஒரு நல்ல யுத்தி. இந்த நாவல் griefஐப் பற்றிப் பேசுகிறதா இல்லை Hopeஐ பேசுகிறதா?புயலுக்குப் பின்னே அமைதி வரும் துயருக்குப் பின் சுகம் ஒரு பாதி.