சாம்பெயின் – சித்துராஜ் பொன்ராஜ்:
கிட்டத்தட்ட Mantoவின் Black Salwar தான் இந்தக் கதையும். ஆனால் சித்துராஜின் மொழி புதிதாக இருக்கிறது. காமம் எப்போதும் சர்ப்பம் தான். இந்தக் கதையில் முக்கியமான விசயமே யமுனாவை அவன் எப்படி நினைவுகூர்கிறான் என்பது தான். துளிக்கூடக் குற்ற உணர்வு இல்லாத பாசாங்குக்காரர்களை சித்துராஜின் கதைகளில் அடிக்கடி பார்க்கமுடியும். அதே போல் சமகால நிகழ்வுகளும், வீடடங்கு காலம், விடாத இலக்கிய உரைகள் என்று காலம் தெளிவாகக் குறிப்பிடப்படுகிறது. ரகுவின் அருவருப்பு கூட வெகு நுட்பமாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது. மீன் விற்ற காசு நாறப்போவதில்லை.
சொர்க்கத்தின் பாவிகள் – நிரூபா நாகலிங்கம்:
அகதிகளின் அலைக்கழிப்பைக் கதை சொல்கிறது. ஏஜன்டுகள் ஏமாற்றுவதும் பெண்களின் சூழ்நிலையை சாதகமாக்கி மிரட்டுவதும் பலமுறை நாம் படித்ததே. ஆனால் நிரூபாவின் மொழியில் ஒரு Melancholy toneல் அலட்டிக்கொள்ளாத மொழியில் இந்தக்கதை வந்திருக்கிறது. அகதிகளுக்கு எந்த நாடும் நாடில்லை. அந்த நாடு சொர்க்கம் என்ற நம்பிக்கையும் அதை அடையும்வரை. துளிகூட மனிதம் இல்லாது எப்படி மனிதர்கள் நடந்து கொள்கிறார்கள் என்பதை இங்கேயே பாட்டி காலத்தில் கட்டிய திண்ணை வீட்டில், திண்ணையை அடைத்து அறையாக்கியதைப் பார்த்திருக்கிறோம். சொந்த நாட்டில் சொந்த மக்களுக்கு இது நடக்கையில் அயல்நாட்டில் என்ன கருணையை எதிர்பார்க்கமுடியும்?
ஜெயலலிதாவைக் கொன்றவன் – இராகவன்:
வ.ராவின் நடைச்சித்திரம் பாணிக்கதை. இது போன்ற கதைகளில் வசதி என்னவென்றால் எங்கிருந்தும் தொடங்கலாம் அல்லது முடிக்கலாம். ஒரு கதாபாத்திரத்தின் குணாதிசயம், பேச்சு என்று வருகையில் அருவியில் இருந்து கொட்டுவது போல் கதை வளரும். ஈழத்தமிழில் இருக்கும் எல்லா கெட்ட வார்த்தைகளும் இந்தக்கதையில் வருகிறது. சரோஜாதேவி கதையின் வர்ணனைகளும் இடையிடையே. இணைய இதழ்களில் கூட வயது வந்தவருக்கு மட்டும் என்று கதைக்கு முன் எச்சரிக்கை செய்யும் தருணம் வந்துவிட்டது.
இருட்டில் ஒளிரும் ஆயிரம் கண்கள் – ஐ.கிருத்திகா:
இதே கதையை மகளுக்குப் பதில் மகன் சொல்லி இருந்தால் எப்படி இருக்கும் என்ற சிந்தனை வந்தது. பிரபஞ்சனின் அம்மா, சு.வேணுகோபாலின் சொல்ல முடிந்தது கதைகளில் மகன்கள் வருவார்கள். வண்ணதாசனின் ஒரு கதை மகள் இறந்த அம்மாவின் மணவினை தாண்டிய உறவை (இன்னொரு அர்த்தம்?) நினைவுகூருதல். ஒரு மோசமான அனுபவம் (பல!) ஆண்களைக் கண்டு பயந்து ஒதுங்க வைக்கிறது. அம்மாவும் மகளும் மட்டுமிருக்கும் வீட்டில் அந்தரங்கக்கோடுகள் இல்லாததும் கதையில் நன்றாக வந்திருக்கிறது. கிருத்திகாவிற்கு அடுத்த கட்டத்திற்கு நகர்வதற்கு ஏற்ற மொழிநடை மற்றும் வித்தியாசமான கதைக்களங்கள் இருக்கின்றன. கதைகளைக் கொஞ்சம் மாற்றினால் போதும்.
மன்னிப்புக் கேட்பவன் – Milan Kundera- தமிழில் கயல்:
காதலித்த பெண் விட்டுவிட்டு சென்று விட்டால், அவள் ஏன் சென்றாள், நான் என்ன செய்திருக்க வேண்டும் என்ற சிந்தனையோட்டம் வருவது இயல்பு. ஆனால் குந்த்ரா இதில் ஒருவன் அம்மாவிடம் இருக்கும் Obsession பற்றி சொல்கிறார். அவனுடைய ஏன்களுக்குப் பதில் கிடைப்பதில்லை. பலமைல்கள் இவர்கள் இருவரைப் பிரித்திருந்தாலும் அவளுடனே இருக்கிறான், அவளுடன் பேசுகிறான், வேறு பெண்களில் அவளைப் பார்க்கிறான். சொல்லிய யுத்தியிலும் கூட சிறந்த கதை இது. கயல் அது சிதையாமல் அழகாக மொழிபெயர்த்திருக்கிறார்.
நீலி – பிரமிளா பிரதீபன்:
பழையனூர் நீலி கதை காலங்காலமாகப் பலரைக் கவர்ந்து இழுக்கிறது. சுஜாதாவும் கரையெல்லாம் செண்பகப்பூவில் கொண்டு வந்திருப்பார். பிரமிளாவின் மொழியில் இது புதிதாக காட்சியளிக்கிறது. நீலியின் ஆசை என்று பிரமிளா சொல்லும் அதே வரிகளை அமெரிக்காவில் ஜீன்ஸ்அணிந்திருக்கும் நவநாகரீக மங்கையும் கூடச் சொல்லக்கூடும். பழைய கதைகளை மீட்டுருவாக்கம் செய்தல், நல்ல மொழிநடை என்பதெல்லாம் தாண்டி அதற்குள் பெண் எதற்கு ஏங்குகிறாள் என்பதை பிரமிளா இந்தக்கதையில் புகுத்தியதனாலேயே இந்தக்கதை நல்ல கதையாகி இருக்கிறது. பாராட்டுகள்.
பிறந்தநாள் பரிசு – மலேசியா ஸ்ரீகாந்தன்:
ஸ்ரீகாந்தனின் பிரதான கதாபாத்திரங்கள் சுவாரசியமானவர்கள். இந்தக் கதையில் ஜானகி எனும் மூதாட்டி. காலம்போன காலத்தில் திடீரென பிள்ளைகள் பிறந்தநாளைக் கொண்டாட ஆசைப்படுவது தான் கதை. அதில் அவள் நினைவுகள் பின்னோக்கிப் பாய்ந்து, ஒரு கன்னிப்பெண்ணின் ஏக்கம், மலேசியாவில் எழுபதுகளில் நடந்த நிகழ்வுகள் என்று எல்லாவற்றையும் கிளறிவிட்டு கடைசியில் ஒரு Gothic touchஉடன் முடிப்பது நன்றாக இருக்கிறது.
சைநீஸ் Food – இமாம் அத்னான்:
இந்தக்கதை நன்றாக வந்திருக்கிறது. மாஜிக்கல் ரியலிசத்தை சாமர்த்தியமாக உபயோகிப்பவர்கள் தமிழில் குறைவு. இந்தக் கதையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தால் ஆங்கிலக்கதை போலவே இருக்கும். கண்களால் பேசும் நஸ்ஹத். நல்லவேளை கதையில் சம்பந்தப்பட்ட யாருக்கும் விபரீதப் பழக்கவழக்கங்கள் இல்லை. ஜீஸூ Pattern கூட ஒரு ஆளுக்கு மட்டும் தாவி அத்துடன் முடிந்துவிடுவது. பிரதமர் கண்ணால் பேசவில்லை. அப்புறம் இனிமேல் வடை, சமோசா சுற்றிவரும் பேப்பரை ஒருநாளும் படிக்கமாட்டேன்.
வனம் மாத இணையஇதழ் அதற்குள் தன் Hallmarkஐப் பதித்துவிட்டதாகத் தோன்றுகிறது. நல்ல கவிதைகள், கட்டுரைகள், நேர்காணல் இவற்றுடன் தரமான கதைகள். Kudos to Vanam Team.