விடுதலை – கணேஷ் பாபு:
இறப்பு, Absurdism, தத்துவார்த்தம் என்று எல்லா இடங்களுக்கும் பயணிக்கும் கதை கடைசியில் மனிதனின் Survival instinctக்கு வந்து முடிகிறது. அப்பாவின் பிம்பம், அவர் பானைபற்றி சொல்லிய தத்துவ விளக்கத்தில், கடைசியில் அந்தப் பானையைத் தரையில் போட்டு உடைத்தது போல் சிதறிப்போகிறது. Pandemicக்கின் Immobility இல்லாவிட்டால் இந்தக் கதையே இல்லை. கச்சிதமாக வந்திருக்கிறது.
http://vallinam.com.my/version2/?p=7701
குதிரை- குமார்.எம்.கே:
நிறையப்பேர் காதலைச் சொல்லத் தயங்குவதே இருக்கும் நட்பையும் பாழ்செய்து கொள்ளக்கூடாது என்று. நெருங்கிய நட்பில் ஆண் சற்று அத்துமீறினால் பெண் அவனைக் கண்டித்து இனி இப்படி செய்யாதே என்று நட்பைத் தொடர்வதும் இயல்பான ஒன்றே. இந்தக் கதையில் நட்புக்கும் காதலுக்குமான மெல்லிய கோட்டின் அதிர்வுகள் படுசத்தமாக ஒலிக்கிறது. குதிரையையும் துணைக்கழைப்பது நன்றாக இருக்கிறது. இந்தக்கதை தெளிவாக முடிந்திருக்கிறது ஆனால் அது ஒரு தொடக்கம் என்று ஏதோ பட்சி சொல்கிறது.Beautifully presented story.
http://vallinam.com.my/version2/?p=7698
அத்தர் – முகம்மது ரியாஸ்:
ரியாஸ்ஸின் அத்தர் நாம் பழக்கப்பட்டு இராத ஒரு உலகத்திற்குக் கூட்டிப்போகிறது. மாற்றம் ஒன்றே மாறாதது, புறமாற்றத்திற்கேற்ப தன்னை மாற்றிக் கொள்ளாதவர்களைக் காலம் புறம் தள்ளி விடுகிறது. இந்தக்கரு எத்தனையோ முறை படித்தது என்றாலும் இந்தக்கதை காட்டும் உலகம் புதியது. அத்துடன் வலிய வரவழைக்காத ஒரு சோககீதம் கதையின் கடைசியில் விடாது ஒலிக்கிறது.
http://vallinam.com.my/version2/?p=7650
இறுதி யாத்திரை – ஹேமா:
மரணத்தைக் கொண்டாடுதல் வாழ்க்கையின் உச்சநிலை என்பார் ஓஷோ. கொண்டாடப்படும் படி வாழ்க்கை அமைந்திருக்க வேண்டுமே என்ற கவலை அவருக்கு இருந்திருக்க வாய்ப்பில்லை. சன்னல் திரைச்சீலைகளைத் துவைக்கப் போடுவது, கோப்பையைக் கழுவி வைப்பது என்று ருக்குமணியின் அசாத்திய ஒழுங்கு குறித்த சித்திரம் மனதில் கவிகிறது. இறப்பிலும் அழகும், நிச்சலனமும் வேண்டும் ஒழுங்கு. கணவர் காலை அமுக்கிவிடுகையில் மெல்லத் தவிர்ப்பது…… எதற்கும் தயாராக இருந்தாலும் அடுத்து என்ன என்ற பதற்றம் கடைசிவரை ருக்குமணிக்கு. அதில் கொஞ்சம் நம்மையும் தொற்றிக் கொள்கிறது. ஹேமாவின் இந்தக் கதையிலும் அநாவசிய வார்த்தை ஒன்று கூட இல்லை. பாராட்டுகள்.
http://vallinam.com.my/version2/?p=7743
த்வந்தம்- பா.திருச்செந்தாழை:
திருச்செந்தாழை தமிழ் சிறுகதை உலகில் ஆடாத இருக்கை ஒன்றை. தயார் செய்து அமர்ந்து விட்டதாகத் தோன்றுகிறது. அனுபவங்களைத் தாண்டி எதுவும் எழுதுவதில்லை இவர் ஆனால் அவற்றில் எழுதவே எத்தனை எத்தனையோ இருக்கின்றன என்று தெரியாமல் தான் பலர் அலைபாய்கிறார்கள். சிம்மக்கல் Tyre retreading, பொள்ளாச்சி, கீழக்கரை சமாச்சாரங்கள் என்று எத்தனை விசயங்கள் மின்னலைப் போல் கடந்து போகின்றன. ஆனால் கதை அது பற்றியதல்ல. கரிசனத்துக்கான முதலீடு பற்றியது. ஆண்களின் சபலமும், பெண்களின் சாமர்த்தியமும் எப்போதும் Level playing field அல்ல. அது ஒரு சமபலமில்லாதவர் விளையாடும் விளையாட்டு. குதிரை முன்னால் கட்டிய கேரட்டைத் துரத்தும் ஓட்டம். மிக அழகாக அதைக் கதையில் கொண்டு வந்திருக்கிறார் திருச்செந்தாழை. பாராட்டுகள்.
http://vallinam.com.my/version2/?p=7681
நீராலானது – விஜயலட்சுமி:
பார்க்கும் கோணத்தில் உண்மை என்பது நேரெதிர் திசையில் பிரயாணிப்பது. யாருடைய உண்மை என்பதை வைத்து அது மாறுபடும். அரசு நம்புவது முழுஉண்மையாக அல்லது பாதி உண்மையாக அல்லது முழுப்பொய்யாக இருக்கலாம். அது போலவே மாலதியுடையதும். கதையின் கடைசிப்பத்திகள் மாலதியின் உண்மையை நோக்கித் தராசைத்தட்டை இறங்க வைக்கின்றன. எந்த விமர்சனத் தொனியும் இல்லாமல் இரண்டு அகப்போராட்டங்களை அப்படியே வர்ணிக்கும் கதை. நன்றாக வந்திருக்கிறது.