ஜேன் ஆஸ்டன் அவரது பெற்றோருக்கு ஏழாவது குழந்தை. பெற்றோருடன், அண்ணனுடன் அவரது வாழ்க்கை கழிந்தது, நோயுற்று தன் நாற்பத்து இரண்டாவது வயதில் இறந்தார். ஏழுநாவல்களை எழுதிய ஜேன் ஆஸ்டனுக்கு அவருடைய இலக்கிய மேதைமை தெரிந்திருக்கவில்லை. நான்கு நாவல்கள் அவர் உயிருடன் இருக்கும் போது வெளிவந்திருந்தாலும், அவரது காலத்திற்குப் பின்னரே உலகமெங்கும் பரவலாக வாசிக்கப்பட்டார். அவருடைய முதல்நாவல் Northanger Abbey லண்டனைச் சேர்ந்த பதிப்பகம் ஒன்றால் £10க்கு வாங்கப்பட்டு, பதிப்பகத்துடன் அவருடைய பல போராட்டங்களுக்குப் பின்னரும் வெளியிடப்படாமல் அவர் இறந்த பின்னரே வெளியிடப்பட்டது. முதலில் பதிப்பைக் கண்ட நாவல் Sense and Sensibility பதிப்பகத்தாருக்கு வரும் இழப்பை இவர் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற உடன்படிக்கையின் பெயரில் இவரது பெயரிடப்படாது வெளிவந்தது. அந்த நாவல் விற்பனையைப் பொறுத்தவரை வெற்றிகரமான நூலானது.
இவரது நாவல்களில் திரும்பத்திரும்ப வரும் சில சம்பவங்கள் இவரது வாழ்வில் நடந்தவை. படித்த குடும்பத்தில், கடைசி மகளாக, செல்லமாக வளர்ந்த, ஜேன் ஆஸ்டன் மட்டுமல்ல அவரது சகோதரியும் மணம் செய்து கொள்ளவில்லை. இருவரும் பொருளாதார அளவில் குடும்பத்தின் ஆண்களை நம்பியே இருந்தனர்.
ஆஸ்டனின் கதையுலகம் அவர் வாழ்ந்த உலகம். அதை யதார்த்தத்துடன், கலைத்தன்மையுடன் எழுதியதால் அவர் எழுத்துக்கள் நம்மை அந்த உலகத்திற்குக் கூட்டிச்செல்பவை. ஆண்கள் ஏமாற்றுதல், பெண்கள் அபலையாகுதல் இவர் நாவல்களில் அடிக்கடி நடப்பது. Sense and Sensibility, தூண்டிவிடப்பட்டு பின் கைவிடப்பட்ட ஒருபெண் மற்றும் அவளது மகள் குறித்த கதை. Pride and Prejuduceல் Darcyயின் சகோதரி கடைசி நேரத்தில் தப்பித்துக் கொள்வது போல் Lydia வால் தப்பமுடிவதில்லை. Persuasionல் Mrs.Smith இன்னொரு நயவஞ்சகனால் அழிவிற்குத் தள்ளப்படுவாள். Northanger Abbeyல் General Tilney மிக மோசமான மனிதன். ஆஸ்டனின் உலகில் ஆண்கள் Predator ஆக வருவது அடிக்கடி நடக்கிறது. Lady Susanல் மட்டுமே ஒரு பெண் Sexual predatorஆக வருவது.
பணமும், சமூகப்படிநிலையும் ஆஸ்டனின் நாவலில் அடிக்கடி காதலின், மணத்தின் குறுக்கே வருபவை. அயர்லாந்தின் தலைமை நீதிபதியாக பின்னாளில் பதவியேற்ற Tom Lefroy (அப்போதைய வழக்கப்படி ஆண் தான் Propose செய்ய வேண்டும்) காதலிக்கிறேன் என்று சொல்வதை ஆஸ்டன் எதிர்பார்த்து காத்திருக்கையில், அவன் செல்வாக்கும் பணமும் நிறைந்த குடும்பம் என்பதால் அவனது குடும்பத்தினர் ஒத்துக் கொள்ளவில்லை. ஆஸ்டன் இறந்து பலகாலம் கழிந்து, தலைமை நீதிபதியாகப் பதவிவகித்து முடிந்து, ஆமாம் ஆஸ்டன் மேல் எனக்கு பிள்ளைக்காதல் இருந்தது என்று Tom எழுதியிருக்கிறார்.
ஆஸ்டன் ஆங்கில இலக்கியத்தில் கதாபாத்திரங்களிடையே ஆசிரியர் குறுக்கீடு இல்லாத, Ironic omniscientம் கொண்ட புதிய, சீரிய மொழிநடையை ஆரம்பித்து வைத்தவர். என்ன சொல்லப்பட்டிருக்கிறது, எப்படிப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கிடையேயான Deliberate discrepancy இவருடைய பாணி எழுத்து. அந்த வகையில் ஜேன் ஆஸ்டனும் தி.ஜாவும் ஒரு புள்ளியில் இணைகிறார்கள். Pride and Prejudice, Sense and Sensibility மற்றும் Emma இவை மூன்றில் ஒன்றே அவருடைய எல்லா நாவல்களையும் படித்தவர்கள் அவரது சிறந்த நாவல் எனக் குறிப்பிடப்போவது. எனக்குத் தெரிந்த பெண்கள் எல்லோருமே ஒருமனதாகத் தேர்ந்தெடுத்தது Pride and Prejudice. இரு சகோதரிகளின் உறவை விவரிக்கும் Sense and Sensibilityஐ அவர்கள் ஏன் தேர்ந்தெடுக்கவில்லை என்பது எப்போதும் எனக்கு ஆச்சரியம். Emmaவைப் பார்க்கையில் எல்லாம் எனக்குத் தோன்றும் ஒரு நெருக்கம், அணைத்து ஆறுதல்படுத்த வேண்டுமென்ற உணர்வு காரணமாகவே நான் Emmaவைத் தேர்ந்தெடுக்கிறேன் போலிருக்கிறது.
Emma இருபத்தோரு வயது நிரம்பிய, பணக்கார, புத்திசாலியான, அழகான பெண். அப்பாவின் செல்லப்பெண். எல்லா வகையிலும் மணமுடிக்கத் தகுதி வாய்ந்த எம்மா ஏன் இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை? திருமணஉறவை வெறுப்பதாக எம்மா நாவலில் எங்குமே சொல்வதில்லை. இன்னும் சொல்லப் போனால் அவளுக்கு திருமணஜோடிகளைச் சேர்த்து வைக்கும் தனித்திறமை இருப்பதாக நம்புகிறாள்.
நாவலின் இந்த வரிகள் முக்கியமானவை. எம்மாவின் மனநிலையை இன்றும் பிரதிபலிக்கும் பெண்கள் எத்தனை பேர்?
“…never could I expect to be so truly beloved and important; so always first and always right in any man’s eyes as I am in my father’s”
வேலை எதுவும் பார்க்க வேண்டியிராத, ஒரு நாளின் மிக நீண்ட பொழுதுகளைக் கொண்ட இளம்பெண் எம்மா, மற்றவர் வாழ்க்கையில் அத்துமீறிப் புகுந்து விளையாடும் முயற்சிகளே எம்மா நாவல். அவள் நோக்கத்தில் பொறாமை, தவறு எதுவுமில்லை. ஆனால் அவள் பலமாக நம்பும் நம்பிக்கைகள் தவறானவை. எம்மாவின் பார்வையில் நகரும் நாவலில் அவள் கருத்து எங்கெல்லாம் தவறு என்று வாசகர்களுக்குத் தெரியும் ஆனால் ஆஸ்டன் அவள் கோணத்திலேயே கொண்டு செல்வார்.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆங்கிலக்கிராமத்தின் வாழ்க்கை தெளிவாகப் பதிவாகி இருக்கும். எம்மாவிற்கும் மற்ற பெண் கதாபாத்திரங்களுக்குமான உறவும், உறவுச்சிக்கல்களும் இந்த நாவலை வேறு தளத்திற்கு எடுத்துச் செல்பவை. வேறொரு பெண் தான் காதலிப்பவனைக் காதலிக்கிறாள் என்றதும் எம்மாவின் மனமாற்றம் இன்றைய வாழ்க்கைக்கும் கூடப் பொருந்தக்கூடியது. இன்னொரு கோணத்தில், எம்மா மற்றவர்களுக்கு செய்ய நினைக்கும் உருமாற்றம் கடைசியில் அவளுக்கு ஆவதே இந்த நாவல் சொல்ல வருவது.
Class ஆஸ்டனின் எல்லா நாவல்களிலும் மீண்டும் மீண்டும் வருவது. அப்போதைய ஆங்கிலேய வாழ்க்கையில் அழகை விட அதற்கே முக்கியத்துவம் இருந்தது. எம்மா இந்த நாவலில் தன் தோழியின் தேர்வு சமூகப்படிநிலையில் கீழாக இருப்பதால் அவளது எண்ணத்தை மாற்றி அவளை படிநிலையில் உயர்வாக இருக்கும் ஒருவனை நோக்கி செலுத்துவாள்.
எம்மாவின் குடும்பசூழலும் அவளுடைய தந்தையின் இவள்மீதான சார்புநிலையும், எம்மாவின் ஆண்பெண் சமம் என்ற கருத்தும், உறுதியான மனநிலையின்றி அடிக்கடி ஏற்படும் மனமாற்றமும், அவளுடைய Snobberyயும் அவளைக் காதலில் விழாமல் செய்ய வைத்த காரணங்கள்.
எம்மாவில் நான் என்னை அதிகமாகக் காண்கிறேன் என்று ஜேன் ஆஸ்டன் ஒருமுறை சொல்லியிருப்பார். எம்மா ஏராளமான குறைகளும் நிறைகளும் கொண்ட கதாபாத்திரம்.
எம்மாவின் குரல் கதைசொல்லியின் குரலாக ஒலித்துக்கொண்டு போகையில் திடீரென்று சமுகக்குரல் இடைவருவது, பின்னால் நடக்கப்போவதற்கான சாடைக்குறிப்பை கவனமாகப் படிக்கும் வாசகர் கண்டுகொள்ளும்படி ஒருவரியை Passing remark போல் சொல்லிச் செல்வது( இதுவும் தி.ஜா அடிக்கடி செய்தது) ஆஸ்டனின் கதை சொல்லும் யுத்தி. இருநூறு வருடங்களுக்கு மேலாகிறது இவர் மறைந்து. அதற்கும் முன்னர் அவர் எழுதிய மொழிநடை சிக்கலானது, ஆனால் சிரமப்பட்டு உள்நுழைந்து விட்டால் வேறு உலகத்திற்குத் தூக்கிச்செல்வது.
எமிலி போல் Indepth காதல்கதையோ, Mary Shelly, Charlotte போல் Gothic classic என்று வித்தியாசமான முயற்சிகள் எதுவுமே ஆஸ்டன் எடுக்கவில்லை. அவருடைய கதைகள் திருமணம் என்ற ஒற்றைப்புள்ளியில் சுழலும் பல வடிவங்கள் என்ற விமர்சனம் இவர் மீது உண்டு. ஆனால்
சர் வால்டர் ஸ்காட் இவர் குறித்துக் கூறிய இந்த வரிகளே என்னைப் பொறுத்தவரை ஆஸ்டனைப் பற்றிய ஆழமான உண்மையான கருத்து:
“We, therefore, bestow no mean compliment upon the author of Emma, when we say that, keeping close to common incidents, and to such characters as occupy the ordinary walks of life, she has produced sketches of such spirit and originality, that we never miss the excitation which depends upon a narrative of uncommon events, arising from the consideration of minds, manners and sentiments, greatly above our own. In this class she stands almost alone”
Penguin Classics Deluxe Edition கொண்டு வந்திருக்கும், ஆஸ்டனின் மொத்த நாவல்களின் தொகுப்பு மற்ற பதிப்புகளை விட சிறந்தது.