Mizumura அவருடைய பன்னிரண்டு வயதில் அமெரிக்கா சென்றவர். இருபது வருடங்களுக்கு மேல் அங்கிருந்து ஜப்பானின் மேல் அந்த மொழியின் மேல் உள்ள காதலால் திரும்பி வந்தவர். ஆங்கிலக்கல்வியே படித்த இவருக்கு ஜப்பானிய மொழின் மேல் இருந்த Obsession மட்டுமே தொடர்ந்து எழுத வைத்திருக்கக் கூடும். ஜப்பானிய மாஸ்டர்களில் ஒருவரான Sosekiயின் முற்றுப்பெறாத நாவலின் தொடர்ச்சியே இவரது முதல் நாவல். அதன் பின் புனைவும் அல்புனைவுகளுமாய் நிறையவே ஜப்பானிய மொழியில் எழுதி விட்டார். 1995ல் எழுதப்பட்ட இந்த நூல் 2021ல் ஆங்கிலத்தில் வெளியாகியது.
சுயசரிதைக்கூறுகள் நிறைந்த நாவல் இது. கதாசிரியரின் சாயலில் பிரதான கதாபாத்திரம், தன்மையில் சொல்லும் கதை இது. போருக்குப்பின் ஜப்பானில் இருந்து அமெரிக்கா செல்லும் குடும்பத்தில் அப்பா, அம்மா இருவரும் அமெரிக்கா வாழ்வை ஏற்றுக்கொள்வது, மகள்கள் இருபது ஆண்டு அமெரிக்க வாழ்க்கைக்கும் பிறகு ஜப்பான் திரும்பத்துடிப்பது என நகரும் கதை.
அமெரிக்க வாழ்க்கையில் முழுகினாலும், பெரும்பாலான இந்தியப்பெற்றோர் போலவே ஜப்பானிலும் தன் மகளுக்கு முழுஜப்பானியனைத் தேடுவதும், மகன் யாரைத் திருமணம் செய்தாலும் அதிகம் கவலைப்படாமல் இருப்பதிலும் ஒருஉளவியல் இருக்கிறது. அதுபோலவே புகைபிடிக்கும் மருமகள் வேண்டாம் என்று Conservative ஜப்பானியத் தம்பதியர் சொல்வதும்.
அமெரிக்கக்கனவு என்பது உலகம் முழுவதும் இருந்தாலும் வெகுசிலருக்கே கைகூடுகிறது. வெகுகாலம் முன்பு அங்கு சென்று தங்கியவர் தவிர்த்துப் புதியவர்கள் திறமை இல்லாது அங்கே காலூன்றுதல் கடினம். கதையில் அமெரிக்காவில் யாரும் கவனிக்காது இருந்த பெண் ஜப்பானில் புகழ்பெற்ற பியானோ டீச்சராக உருவெடுப்பது போல் தான் எல்லாத்துறையும். அதீதம் தரத்தைக் கொண்டு வருவது அமெரிக்க வாழ்க்கையில் முக்கியமான அம்சம்.
இரண்டு சகோதரிகளின் கதை இது. புலம்பெயர்ந்த ஜப்பானியப் பெண்கள் இருவரின், பாலினம், அடையாளம், racism, xenophobia முதலியவற்றை சொல்லிக் கொண்டு செல்லும் கதை. குணத்தால் இருவேறுபட்ட சகோதரிகளின் அமெரிக்க வாழ்க்கை, அவர்கள் எடுக்கும் முயற்சிகள், தோல்விகள், இழப்புகள் எல்லாவற்றையும் அமெரிக்காவில் குடிபுகுந்த ஆசியப் பார்வையில் சொல்கிறது.
மொழிபெயர்ப்பாளர் முன்னுரையில் இது ஜப்பானின் முதல் Bilingual novel என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆங்கிலமும் ஜப்பானிய மொழியும் கலந்து, வழக்கமான ஜப்பானிய Vertical முறைக்குப் பதிலாக, இடம்வலமாய் Horizondalல் எழுதப்பட்ட நாவல். நாவலின் இடையில் நாவல் எழுதப்போவதாகச் சொல்லும் கதாபாத்திரம் சொல்லும் ” ஜப்பானிய மக்கள் எதை விரும்பிப் படிப்பார்கள் என்று தெரியும், இளம்வயதினரைக் கவர்ந்தால் வெற்றிகரமான நாவலாசிரியராக முடியும்” என்று. Mizumura தான் கையாண்டதையே கதாபாத்திரத்தின் மூலம் சொல்லி இருப்பதாகத் தோன்றுகிறது.