ஜப்பானின் டோக்கியோவில் பிறந்து, வளர்ந்து, வசிப்பவர். பரிசோதனை இலக்கியத்தை எழுதும் வெகுசில ஜப்பானிய எழுத்தாளர்களில் ஒருவர். Dostoevskyன் The Idiotஐ ஜப்பானிய saintly idiotஐ வைத்து இவர் எழுதிய The Kingdom of Zero மிகுந்த வரவேற்பைப் பெற்றது. சிறுவயதில் கிருத்துவமதத்தைத் தழுவியவர். இவர் போன்ற பலர் மதம் மாறுவது புத்தமதம் பிரதானமாக இருக்கும் ஜப்பானில் கிருத்துவம் மெல்ல ஊடுருவதன் சான்று. இந்த நூல் இவரது ஆங்கிலத்தில் வெளிவரும் முதல்நூல், 2021ல் வெளியாகியது.
இரண்டு குறுநாவல்கள் அடங்கிய தொகுப்பு இது. இவருடைய பெயரை இனிவரும் வருடங்களில் இப்போது எழுதிக் கொண்டிருக்கும், நம்பிக்கையூட்டும் ஜப்பானிய நவீன இலக்கியவாதிகளில் ஒருவராக அடிக்கடி கேட்கப் போகிறோம். எளிய விசயங்களை அசாதாரண விசயங்களாக மாற்றும் ரசவாதத்தைப் பலகாலமாக ஜப்பானிய எழுத்தாளர்கள் செய்துவருகிறார்கள், இவர் அந்தக்குழுவில் புதுச்சேர்க்கை. முரகாமியைப் போலவே எளிதான Interpretationsஐ இவர் எழுத்தில் செய்ய முடியாது. நாற்பத்து நான்கு வயதே இவருக்கு ஆவதால் இலக்கியத்தில் இவர் பயணிக்கும் தூரம் இன்னும் அதிகமாகவே இருக்கும்.
காலி பெருங்காய டப்பாவில் மணம் மட்டும் மீதி இருப்பது போல் பழம்பெருமை பேசித்திரியும் அம்மாவுக்கும், தம்பிக்கும் நடுவே பலவிதமான சுரண்டலுக்கு ஆளாகும் பெண், தன்னைக் காதலிக்கிறேன் என்று சொன்ன உயர்அதிகாரியை குடும்பத்தின் பேச்சைக்கேட்டுத் தவறவிட்டு, இரண்டாவது சொல்பவனை குடும்ப எதிர்ப்பை மீறித் திருமணம் செய்து, அவன் சிலநாட்களிலேயே மூளையில் அறுவை சிகிச்சை செய்து, இவள் துணையின்றி நகரக்கூட முடியாது என்ற கதை இங்கே பெண்கள் பத்திரிகையில் உடனே பிரசுரிக்கத் தயாராக இருப்பது. ஆனால் அதை எப்படி இலக்கியமாக்க முடியும் என்பதற்கு இந்தக் கதையைப் படிக்க வேண்டும். Nostalgia, காலமாற்றத்தில் நினைவில் புகைமண்டுவது, உறவுச்சிக்கல்கள், இரண்டு நேரெதிர் குணாதிசயம் கொண்டோர் வழமை போல் மணம் செய்து கொள்ளுதல் என்று பல விசயங்களை ஒரு அலட்டாத தொனியில் சொல்வது கதையை அழகாக்கியிருக்கிறது.
இரண்டாவது குறுநாவல் Ninetynine kisses மேற்பார்வைக்கு சமகாலத்திய டோக்கியோவில் தாயுடன் வசிக்கும் நான்கு மணமாகாத சகோதரிகளின் வாழ்க்கையைப் பற்றி சொல்வது போல் தோன்றினாலும், இந்த நாவல் உண்மையில் தனது மூன்று மூத்த சகோதரிகளின் பெண்மையை ரசித்து, தனக்கு ஆண்தன்மை நிறையவே இருக்கிறது என்று நினக்கும் பெண், தனக்கும் பெண்மை இருக்கிறது என்பதைக் கண்டு கொள்வது. கடைக்குட்டிப் பெண்ணின் பார்வையில் நகரும் நாவல் siblings love and rivalryஐ அழகாகச் சொல்லிச் செல்கிறது.
முதல் குறுநாவல் ஜப்பானின் பெருமைமிகு விருதான Akutagawa பரிசை வென்றிருக்கிறது. ஜப்பானின் பல விருதுகளை இவர் ஏற்கனவே பெற்றிருந்தாலும் இந்த நாவல்களின் ஆங்கில மொழிபெயர்ப்பு மூலம் பரவலாக உலக வாசகர்கள் கவனத்தை ஈர்த்திருக்கிறார். பெண்களின் அகஉணர்வுகளை, உறவுச்சிக்கல்களை Traditionalஆக எழுதுகையில் அது கலைமகள் கதையாக முடிந்து போகிறது. அதையே கலைப்படைப்பாக எப்படி மாற்றுவது என்பதைத் தெரிந்து கொள்ளவேணும் தமிழ் எழுத்தாளர்கள், குறிப்பாகப் பெண்கள் இந்த நூலைப் படிக்க வேண்டும்.