தமிழ் நவீன இலக்கியத்தைப் படிக்கும் போது நானும், தோழர் R P ராஜநாயஹமும் ஒரு எழுத்தாளரை எடுத்துக் கொண்டால், அவருடைய படைப்புகள் முழுவதும் தேடிப் படித்துவிடுவது வழக்கம். உதாரணத்திற்கு அமிர்தம் நாவலை தி.ஜா எழுதியிருக்க வேண்டாம் என்று யாரேனும் கூறியிருந்தாலும் நாங்களே அதைப் படித்துத்தான் முடிவுக்கு வருவோம். நவீன இலக்கியத்தைத் தொடர்ந்து படிக்கும் போது, ஜனரஞ்சக எழுத்தை வாசிப்பது கடினம். அதனால் பெரும்பான்மையான புத்தகங்களை ஒதுக்க நேரிடும். தோழர் வாசிப்பது மிக மெதுவாக, அத்துடன் அவர் படித்த புத்தகங்களை இடைவெளிவிட்டுத் திரும்பப் படிப்பார். புதிதாக வந்த சுந்தரராமசாமியின் நூலை வாங்கி வைத்துவிட்டு, புதுமைப்பித்தனைப் படிக்க ஆசையாக இருக்கு என்று படித்துக் கொண்டிருப்பார். எனக்கு சூடு ஆறுமுன் படிக்க வேண்டும், அத்துடன் வேகமான வாசிப்பு. அப்போது தமிழில் வெளிவரும் புத்தகங்கள் குறைவு என்பதால், புத்தகக் கடைகளுக்குப் போய் புதிதாக ஏதுமில்லாது, எதுவும் வாங்காமல் வந்த நிகழ்வுகளும் இருக்கின்றன.

வாசிக்கும் வேகத்தில், தமிழில் வாசிக்கப் போதுமான புத்தகங்கள் அப்போது இருந்திருக்கவில்லை என்று சொல்ல முடிவதைப் போல் ஆங்கிலத்தில் வாசிப்பவர்களால் ஒருநாளும் சொல்ல முடியாது. தமிழ் நவீன இலக்கியத்தில் எந்த ஆசிரியரைப் பற்றிப் பேசினாலும், அவர் புத்தகங்கள் படித்திருப்பதாக நாங்கள் சொல்லும் போது, கண்டிப்பாக இருவரும் பேசிவைத்துப் பொய் சொல்கிறார்கள் என்றே பலர் நினைத்திருக்கக்கூடும். சிலர் தாங்களும் படித்ததாகச் சொல்லி, நாங்கள் அது குறித்துப் பேச ஆரம்பித்தபின் தப்பித்துக் கொள்வதுண்டு.

ஆங்கில வாசிப்பு கர்வத்தைப் போக்கிவிடும். மாபெரும் சமுத்திரத்தில் ஒரு துளி தான் நம் வாசிப்பு என்று நமக்கே தெரிகையில், கர்வம் காணாமல் போய்விடும். ஆரம்பத் தயக்கத்தைத் தாண்டி விட்டால் யார் வேண்டுமானாலும் ஆங்கிலத்தில் வாசிக்க முடியும். திரில்லர் பிடித்தவர்கள் James Hadley Chase, Sydney Sheldon போல ஆரம்பியுங்கள். கதையின் சுவாரசியம் உங்களை உள்ளிழுக்கையில், வேறு ஆசிரியர்களைப் படிக்க ஆரம்பிக்கலாம். Romance பிடித்தவர்கள் Nicholas Sparks, Mills and Boonல் ஆரம்பிக்கலாம். தேவதைக் கதைகள் பிடித்தவர்கள் Adrienne Young படிக்கலாம்.
Horror பிடித்தவர்கள் Stephen Kingல் ஆரம்பிக்கலாம். சிறுகதைகள் வாசிக்க விரும்புபவர்கள் Alice Munroவில் ஆரம்பியுங்கள். இன்று எழுதிக் கொண்டிருக்கும் எழுத்தாளர்களில் சிறந்த சிறுகதை எழுத்தாளர் யார் என்றால் நான் யோசிக்காமல் சொல்லும் பெயர் இவருடையது. மூன்று குழந்தைகளுடன் வீட்டுவேலைகள் நடுவே, சிறுகதை என்றால் கிடைக்கும் நேரத்தில் எழுதி முடித்துவிடலாம் என்று தொடர்ந்த எழுத்து நோபல் பரிசிற்குக் கூட்டிச்சென்றது.

ஆங்கிலத்தில் புதிதாக வாசிக்க விரும்புபவர்கள் Classicsஐ ஆரம்பத்தில் தொடவே செய்யாதீர்கள். இது கண்டிப்பாக படிக்கவேண்டிய நூல் என்று எத்தனைபேர் சொன்னாலும், உங்கள் நீண்ட ஆயுளில் நம்பிக்கை கொண்டு ஒத்தி வையுங்கள். தெரியாத வார்த்தைகளுக்கு உடனடியாக அகராதியைத் தேட வேண்டியதில்லை. கதை புரிகிறது என்றால் விட்டு விடுங்கள். மெல்ல மெல்ல ஆங்கிலவாசிப்பு முகம்காட்டாப் பெண்ணின் வளையல்களின் சிணுங்கல் போல/ புல்லட் பைக்கை விட்டு இறங்காமலேயே ஸ்டாண்ட் போட்டு உங்களைக் கவனிக்காமலேயே நகரும் வாலிபன் போல வசீகரிக்க ஆரம்பிக்கும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s