ஆசிரியர் குறிப்பு:

யாழ்ப்பாணத்திலுள்ள அச்சுவேலி வடக்கில் பிறந்தவர். முதுகலை அறிவியல் பட்டம் பெற்றவர். 1996ல் தமிழ்நாட்டுக்குப் புலம் பெயர்ந்தவர். அலைகளின் மீதலைதல் இவரது முதல் கவிதைத் தொகுப்பு. இது இரண்டாவதாக சமீபத்தில் வெளிவந்த கவிதைத்தொகுப்பு.

அடுத்த தலைமுறைக்கு எமது வாழ்வியலைக் கடத்துவது எமது படைப்புகள் என்றிருக்கிறார் முன்னுரையில். எப்போதும் வெற்றி பெற்றவர்கள் எழுதுவதே வரலாறு, தோற்றவர்களால் இலக்கியத்தில் மட்டுமே அதை சொல்ல முடியும். Shirani Rajapakse போன்றவர்கள் இலக்கியத்திலும் அதை மாற்றுகிறார்கள்.(Scattered -short story)

பொங்கல் என்றால் அரைகுறை தூக்கத்தில் குளித்து வாசலில் பொங்கல் பானையில் பொங்கி வடிவதைப் பார்த்து கத்திய சிறுவயதுப் பருவத்தின் நினைவுகள் மேல் வந்து படிகின்றன இந்த வரிகள்:

” இப்போது கரம் பற்றியிருந்த
பொங்கல் பானையருகே
மண்ணை முத்தமிட்டபடியிருந்தது
துண்டாக்கியவளின் தலை”

ஏதிலிகள் எந்த நாட்டுக்கும் வேண்டாதவர்கள். பங்களாதேஷில் இருந்து வந்த அகதிகளை வைத்துக்கொள்ள Secular nation என்ற லேபிள் இருந்தது போல நமக்கு இலங்கையில் இருந்து வந்தவர்களை வைத்துக்கொள்ள எந்த நிர்பந்தமும் இருந்திருக்கவில்லை.

” கால்நூற்றாண்டு அகதி வாழ்வில்
ஆஸ்பெட்டாஷ் சீற்றுக்கு மாறியிருக்கிறது
பத்துக்குப் பத்து என்பதொரு
கணித சூத்திரம்
இன்னும் மாற்றாமல் இருக்கிறார்கள்
கல்லறையின் அளவை
அந்திக்கருக்கலில் விடைபெற்றுச்செல்லும்
சூரியனைப் போல் மெல்ல விடைபெறுகிறோம் மரங்களை விட்டு
வீடுகளுக்குள் வெளிச்சம் பரவுகிறது
மண்ணெண்ணெய் குப்பி விளக்கிலிருந்து
குண்டு பல்புக்கு மாறிவிட்டோம்”

” எண்திசைகள் குறித்து
யாரும் அலட்டிக்கொள்வதில்லை
இடதுபக்கம் கருவேலங்காடும்
வலதுபக்கம் தைலமரக்காடும்
ஆண்களுக்கும் பெண்களுக்குமான
வெளித்திசை என்பது
முகாம்வாசிகளின் ஒன்பதாவது திசை”

“வீட்டின் விறாந்தைகளில் துணையின்றி
வாசல் பார்த்துத் தனித்திருக்கும்
மூப்பின் நரையேறிய மூதாயின் விழிகளில்
படரும் ஏக்கம்
நாடிலிகளின் மனமொத்திருக்கிறது”

சுகன்யா ஞானசூரியின் கவிதைகள் பெரும்பாலும் அகதி வாழ்வைச் சுற்றியே வருகின்றன. பாரீஸில், ஆஸ்திரேலியாவில், லண்டனில் அகதி என்று அழைக்கப்படுவதில் ஒரு அர்த்தம் இருக்கிறது, தாய்த்தமிழகத்தில் எப்படி அகதியாக முடியும்! மொழி ஒன்றே எனில் நிலம் வேறு.

வாசிப்பதற்கே மிகுந்த வலியை ஏற்படுத்தும் இந்தத் தொகுப்பில் காணும் வாழ்க்கையைத் தான் இன்னும் பலர் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். சொந்த நாட்டிலேயே வசதி இல்லாதவர்களுடன் காவல்துறையும், மற்ற அதிகாரிகளும் நடந்து கொள்வதைப் பார்த்தவர்களுக்கு, அகதிகளிடம் அவர்கள் எப்படி நடந்து கொள்வார்கள் என்று யூகிக்க கற்பனாசக்தி எதுவும் தேவையில்லை.

தான் வாழ்ந்த, பார்த்த வாழ்க்கையை சுகன்யா ஞானசூரி ஆவணமாக்கும் முயற்சியே இந்தக் கவிதைத் தொகுப்பு. விடுதலைப்புலிகள் மட்டுமல்ல, புலம்பெயர்ந்தவர்களும் கூட போர்க்களத்தில் கௌரவமாக இறந்திருக்கலாம் என்று மருகும் ஒரு அவலவாழ்வு. பிள்ளைகளிடம் தான் பிறந்த ஊரின் பெருமையை சொல்லாதவர்கள் யார்? மகள் தாய்நாடு பற்றிக்கேட்டதும் “பிரபஞ்சத்தின் மேலிருந்து ஒற்றைச் சுருக்கில் தொங்குகிறேன்” என்பதைத் தாண்டிச் சொல்லவோ, விளக்கவோ என்ன இருக்கிறது?

தமிழ்கவிதைநூல்கள்

பிரதிக்கு:

கடற்காகம் வெளியீடு 78716 78748
முதல்பதிப்பு ஜூன் 2021
விலை ரூ.110.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s