“வேலை என்னும் ஒரு பூதம் திங்கள் விடிந்தால் காதைத் திருகி இழுத்துக் கொண்டு போகிறது” என்பது ஞானக்கூத்தன் எழுதிய கவிதையின் வரிகள். வாழ்வாதாரத்திற்காக அவமானங்களைப் பொருட்படுத்தாமல்,
நம் வாழ்வின் பெரும்பகுதியைக் கழிக்கும் வாழ்க்கையே பெரும்பாலும் அமைகிறது, உதரநிமித்தம் பஹுக்ருதவேஷம். மனம் விரும்பிச்செல்லும் வேலைகள் அத்திபூத்தாற் போல் யாருக்கேனும் கிடைக்கலாம்.
சொந்தத்தொழில் செய்தால் யாருக்கும் கைகட்டி நிற்கவேண்டியதில்லை என்பது ஒரு மாயை. அலுவலகத்தில் வேலை செய்பவர் இரண்டு மூன்று பேருக்குக் கைகட்டி நின்றால் இவர்கள் இருபது பேருக்காவது கைகட்டி நிற்கிறார்கள். எல்லா வியாபாரங்களும் அரசாங்கங்களுக்கு ஆணையிடும் சக்தியைக் கொண்டிருப்பதில்லை. எனக்குத் தெரிந்த கோடீஸ்வரர் ஐம்பதாயிரம் ரூபாய்க்காக அரசு அலுவலரிடம் அரைமணிநேரம் கெஞ்சிக் கொண்டிருந்தார். பொறுக்க முடியாது, முதலிலேயே அதைத் தூக்கி எறிந்திருக்கலாம் அல்லவா என்றதும், புன்முறுவலுடன் வாருங்கள் புகைபிடிக்கலாம் என்றார்.
ஆண்களை விட பெண்களுக்கு வேலைக்குச் செல்வதில் கூடுதல் தொல்லைகள் இருக்கின்றன. வெளிநாடுகளில் நடப்பது போல் இங்கே எந்தப்பெண்ணும் ஒரு இளவயது ஆணைத் தன் பதவியை உபயோகித்து மிரட்டிவளைத்துப்போட முயற்சித்ததை என்வரையில் நான் பார்க்கவில்லை, கேட்டதுமில்லை. அடிப்படையில் மறுதலிப்பை பெண்கள் எப்போதும் பெரிய அவமானமாகக் கருதுவதும் இதன் காரணமாக இருக்கக்கூடும். குடும்பவாழ்க்கையில் கூட ஆண் இன்று மூடு இல்லை என்று சொன்னபின்னும் பெண் கெஞ்சினாள் என்று கதை எழுதினால், லாஜிக் இல்லாத கதை என்ற விமர்சனம் வரும்.
ஓய்வுகாலத்திற்கு என்று சேமித்து வைக்காமல் எல்லாவற்றையும் செலவு செய்து பின் ஓய்விற்குப்பின் நான்கில் ஒரு பங்கு ஊதியத்திற்கு வேலை செய்பவர்களைப் பார்த்தால் உண்மையில் பரிதாபம் எழுகிறது. ஒரு முதலாளி, வாங்கும் சம்பளம் செரிக்க வேண்டாமா என்று ஒரு முதியவரிடம் கத்திக்கொண்டிருக்கையில், நான் அதைக் கவனிக்காதது போல் அலைபேசியை நோண்டிக் கொண்டிருந்தாலும் Peripheral visionல் பார்த்த அந்தமுகம் பலநாட்களுக்குத் தொந்தரவு செய்து கொண்டிருந்தது.