ஆசிரியர் குறிப்பு:
சிவஷங்கர் ஜெகதீசன், ஓர் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் சீனியர் திட்ட மேலாளராகவும்(Senior Project Manager) மற்றும் தகவெளிமைபயிற்சியாளராகவும் (Agile Coach) பணிபுரிகிறார். ரப்பர்வளையல்கள் என்ற இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு ஏற்கனவே வெளிவந்தது. இது சமீபத்தில் வந்த இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு.
Intuitionஐ உபயோகித்து, புத்தகத்தின் நடுவில் சிலவரிகள் படித்து வாங்கும் புத்தகங்களிலேயே சில வாசிக்க முடியாதவையாகின்றன. வாசிக்க ஏராளமான நல்ல புத்தகங்கள் வரிசையில் நிற்கையில், வாசிக்க முடியாத புத்தகங்களுக்கு நேரமளிப்பது உசிதமான காரியமில்லை. சிவஷங்கர் ஜெகதீசன் அவரது இரண்டு நூல்களையுமே எனக்கு அனுப்பினார், WSP குரூப்களில் இருக்கும் பலருக்கு அவர் செலவில் புத்தகங்கள் அனுப்புகிறார். இடையில் என்னிடமும் பலமுறை உங்கள் அபிப்ராயத்தைச் சொல்லுங்கள், Negative remark ஆக இருந்தாலும் பரவாயில்லை என்றார். அவரது உற்சாகமான செயல்பாடுகளே இந்தப் புத்தகத்தை முடிக்க வைத்தது.
பதினோரு கதைகள் கொண்ட இந்தத் தொகுப்பில் சராசரி உயரத்தை எட்டும் ஒரு கதை கூட இல்லை. இவருக்கு மொழிநடை கைகூடி வரவில்லை. செய்திகள் வாசிப்பது போல, யாரோ ஒருவர் தெருவில் பார்த்த சம்பவங்களைச் சொல்வது போல கதைகள் நகர்கின்றன.
“சின்ன நட்சத்திரமே நீ சினிமா நட்சத்திரம் ஆவதற்குள் உன்னுள் எத்தனை கால்நிலா அரைநிலா பூத்து சிதைந்தனவோ ” என்ற கவிதை வந்து எத்தனை ஆண்டுகள் ஆயின? இவரது நாயகி ஸ்வேதாவிற்கு இன்றும் புரியவில்லை. அதே போலவே விபரீத ராஜயோகம் சஜிதா.
அடம்பிடித்து KTM பைக் வாங்கும் இளைஞன், பெட்ரோல் பங்கில் திருடும் இளைஞன், videogame Vignesh, நிராசை ராகுல், ஏளனம்
தனபால், சிம்னி வைஷ்ணவி, ஸ்டைரீன் மாதவராவ் என்று நிறையப்பேர் வருகிறார்கள், வந்த சுவடு இல்லாமல் மறைகிறார்கள்.
இந்தத் தொகுப்பில் கவனித்த பாசிட்டிவான விசயம், தகவல் பிழைகள் இல்லை. கவனமாக தகவல்களைச் சேர்த்திருக்கிறார். உதாரணத்திற்கு JFC கதையை எடுத்துக் கொள்வோம். இந்தத் தகவல்களை ஜெயமோகனிடம் யாரேனும் கொடுத்திருந்தால், ஐம்பது வருடங்களாக இவை எல்லாமே தனக்குத் தெரியும் என்ற தன்னம்பிக்கையோடு, நல்ல மொழிநடையில் எழுதியிருப்பார். அவரது ஆப்த வாசகர்கள் உலகின் அருமையான கோழிக்கதை இது என்று புகழ்ந்திருப்பார்கள். கதைகள் நமக்கு தெரிவதைச் சொல்வதை விட, எப்படி சொல்கிறோம் என்பதில் தான் வாசகர்களை ஈர்க்க ஆரம்பிக்கின்றன.
சிவஷங்கர் ஜெகதீசனுக்கு சொல்லும் ஆலோசனைகள் இவை. பாதிக்கும் விசயங்களை மட்டும் கதைகளாக எழுதுங்கள். ஆரம்பநிலையில் அப்படித்தான் எழுதமுடியும். ஒரே கதையில் வேறு என்னவெல்லாம் முடிவுகள் வரலாம் என்று யோசித்துப் பாருங்கள். அதே போல் மாதம் ஆறாயிரம் சம்பாதிப்பவன் அரும்பாடுபட்டு பலநாள் திருடிய 30,000 ரூபாயை வைத்துவிட்டு தண்ணீர் வாங்கப்போவானா?
ஒரு Online game 360 என்றால் 277 Game விளையாடினால் மட்டுமே 1,00,000 ஆக முடியும், சூப்பர் மார்க்கெட் நடத்துபவர் யாரேனும் அறுபது நாட்கள் வங்கி இருப்புத்தொகையை கவனிக்காமல் இருப்பார்களா? 1,25,000 ரூபாயை வங்கியில் Across the counterல் third party draw பண்ணமுடியுமா? கேள்விகள், கேள்விகள் கதை எழுதுபவர்கள் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும். எழுதிய கதையை இடைவெளி விட்டு மீண்டும் மீண்டும் எடிட் செய்யுங்கள்.சிறுகதைகள் சீரியஸ் விசயம், நாவலில் அங்கங்கே சறுக்கி சமாளித்துக் கொள்ளலாம். மொழிநடை அவசரமாகக் கவனிக்க வேண்டிய விசயம்.
எல்லாவற்றையும் விட நீங்கள் சூப்பராக எழுதுகிறீர்கள், அபாரம், வாழ்த்துகள் போன்ற எதிர்வினைகள் எல்லாமே காப்பி ஒருநாளும் வாங்கித்தர விருப்பம் இல்லாத, காப்பி வேணா சாப்பிடுறீங்களா என்று நம்மைப் பார்த்துக் கேட்கும் சம்பிரதாய வார்த்தைகள். கதை எழுதுபவர்கள் அனுமார் அல்ல, அவர்கள் பலம் முதலில் அவர்களுக்குத் தான் தெரிய வேண்டும்.
சிறுகதைகள்
பிரதிக்கு:
சிவஷங்கர் ஜெகதீசன் 95000 10353
முதல்பதிப்பு ஏப்ரல் 2021
விலை ரூ. 160.