ஆசிரியர் குறிப்பு:
யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டியில் பிறந்து, பாரிஸுக்குப் புலம் பெயர்ந்தவர். ஏற்கனவே இவரது ‘சாவுகளால் பிரபலமான ஊர்’, ‘இருள் மிதக்கும் பொய்கை’ ஆகிய கவிதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. இது சமீபத்தில் வெளிவந்த கவிதைத்தொகுப்பு.
மண்ணில் இன்னும் ‘அ’ எழுதுகிறார்களா இலங்கையில்? தெரியவில்லை. ஆனால் கனவுகளின் மொழி எல்லோருக்கும் பொதுவானது.
“என் கனவுகளின் மொழி வேறொன்று
இம்மொழி ஒலிகளற்றது
பலநிறங்களாலானது
ஒவ்வொரு கனவின் மொழிபெயர்ப்பும்
அடுத்தொரு உறக்கம் வரை தொடர்கின்றது
நாவும் மனமும்
அந்நியத்தின் அலைவும்
மொழியின் சுழலில் உழல்வு”
வாழ்க்கை பயமுறுத்தாமல் இருந்தால் நிலவை, சுடரை, மலரை, பறவைகளை வரிசையாக ரசிக்கலாம். சிறுவயதில் பறவைக்கு யார் சாப்பாடு போடுவார்கள் என்ற கவலையும், வயதான பின் வாழ்வாதாரக் கவலையும் சத்தமில்லாமல் ஒன்று சேரும் கவிதை.
” எல்லாநேரமும் மென்னுணர்வோடு
வானம்
பறவை
பனி
பாசம்
வெள்ளிநிலவு உருகும் இரவு
எனக் கதைக்கவா முடியும்?
கற்பனைகளைத் தாண்டி
வாழ்வு மூச்சுவாங்கப்
போய்க்கொண்டிருக்கிறது”
மணங்கள் நினைவுகளை அள்ளி வருகின்றன. மூக்குக்கும் மூளைக்கும் அப்படி ஒரு சம்பந்தம். ஸ்நானப்பவுடர் வாசம் காலத்தைக் கடந்து சுமந்து வருகின்ற முகம் விழியோரம் துளிநீரைக்கூடக் கொண்டு வரலாம்.
” மறதிக்கு காலங்கள்
ஆண்டுகளா/மாதங்களா/நாட்களா?
மனங்கசிந்த வாசம் சொற்களாகும்
தின்று கொண்டிருக்கிறது மூளை
துப்பமுடியாத விதை மரமாகிறது
இனிப்பாக,புளிப்பாக, கசப்பாகவும் காய்க்கலாம்.”
அடுக்களை எனும் ஆள்விழுங்கி பூதத்திற்கு,
கவிஞர், கலைஞர் என்று பேதமில்லை. அதற்கு வேண்டியதெல்லாம் எப்போதும் உங்கள் நேரம்…. மீண்டும் நேரம்.
” சட்டி எரிந்து கொண்டிருக்கிறது
எண்ணெய் சூடாகிவிட்டது
கடுகுப்போதல் கைதவறி உடைந்துபோனது
வெங்காயம் வெட்டிக்கொண்டிருந்த போது
தோன்றிய வரிகளை
என்ன செய்வது?
அடுப்புக்குள் போட்டு எரித்துவிட்டு
கொதித்த குழம்பை இறக்கினேன்
கறி நல்ல ருசி”
Nostalgia தர்மினியின் கவிதைகளில் பெரும்பங்கு வகிக்கிறது. ஒரே நாட்டில் வேறு ஊர் வந்தவர்களுக்கே Nostalgia தவிர்க்க முடியாது போகையில், புலம்பெயர்ந்தவருக்கு அது இல்லையென்றால் தான் ஆச்சரியம். பச்சை தோடங்காய் மணம், அம்மா சொன்ன கதை,ஊரிகள்,சிப்பிகள், உறைந்த நட்சத்திர மீன்கள் என்று ஒரே நினைவுச்சுவை. துப்பாக்கிகள் உடலில் நடப்பது போல் பயங்கரக்காட்சிகள் இடையிடை வருகின்றன. ” எல்லைகளை மீட்க எங்களைப் புதைத்தனர்” என்ற வரியைத் தாண்ட நேரமானது.
கனவுகளும் தர்மினியின் இந்தத் தொகுப்பில் அடிக்கடி வருகின்றன. “விரையும் காலத்தைத் தாண்டிச்செல்ல கனவுத்திறப்பில் ஒருவழி”. கண்ணை மூடினால் வரும் கொடுங்கனவுகள்- “படிகளற்ற கட்டிட உச்சியில் கால்கள்”
“தப்பிக்க முடியாத காலம் மூச்சு திணறுகிறது” – கனவுகள்.
மெல்லிய பகடியும் சில கவிதைகளில் கலந்து வருகின்றன. புலம்பெயர்ந்தவர் கவிதை அதற்கு நல்ல உதாரணம். (மகளின் சாமத்தியச் சடங்கின் நேர்முகவர்ணணை), தப்பிப்போகும் குடைக்காரர், அறிவில்லைதான்…., உட்பெட்டியில் செல்ஃபி
கேட்பது கூட வருகிறது.
“மன மூலையில் உறைந்த நேசக்கதை காலப்பெண்டுலத்தின் நுனியிலசைய அன்று நட்சத்திரம் மின்னியது” அன்றைக்குப் போவதும் இன்றைக்கு இழுத்துவரப்படுவதுமான இடைவிடாப் பயணமே தர்மினியின் கவிதைகள்.
பிரதிக்கு:
கருப்புப்பிரதிகள் 9444272500
முதல்பதிப்பு அக்டோபர் 2020
விலை ரு.75.