மழைதருமோ மேகம் – நாச்சியாள் சுகந்தி:
சென்டிமென்டல் கதை. இதில் தற்செயல் நிகழ்வுகள் வந்தே தீரும். எல்லோரும் கல்லறைக்குத் தூக்கிச் செல்ல இனிமையான நினவுகளை யாரிடமும் பகிராது பதுக்கி வைத்திருப்பார்கள். அது இந்தக் கதையில் நன்றாக வந்திருக்கிறது. அடுத்து குழந்தைகள், மேலைநாடுகளில் போலன்றி இங்கே எதிர்கால வாழ்வைத் தீர்மானிக்கும் முக்கிய காரணியாக இருக்கிறார்கள். குழந்தையை மையப்படுத்தி வேறுவழி இல்லாது சேர்ந்தே இருப்போரும், சேராதிருப்போரும் நம்நாட்டில் அதிகம்.
சிருங்காரி என்னை நேசித்தாள்- எம்.எம்.நௌஷாத்:
நௌஷாத்தின் கதைகளில் இருக்கும் வித்தியாசமான கதைக்களம் இதிலும் இருக்கிறது. DMD நோய் பெரும்பங்கு வகிக்கும் கதை. கடைசிப்பத்தி இல்லாது, ஆறு பத்திகளிலும் கொஞ்சம் எடிட் செய்தால் கதை நன்றாக வந்திருக்கும். டாக்டர் கடைசியில் மனைவிக்கும் உண்மையாக இல்லை, காதலுக்கும் உண்மையாக இல்லை.
பற… பற…..- சூ.ம.ஜெயசீலன்;
தலைப்பிலேயே சிலேடை இருக்கிறது. கிராமத்தின் சாதிப்படிநிலைகள், சாதீய ரீதியிலான சுரண்டல்கள் நன்றாக பதிவாகி இருக்கின்றது. கதை நடக்கும் கிராமம் போலல்லாமல் இன்னும் பிறப்பினால் வரும் ஏற்றத்தாழ்வு இந்தியகிராமங்களில் ஏராளம்.
கண் முன் பார்த்த வாழ்க்கையைக் கதையில் கொண்டு வந்திருக்கிறார் ஜெயசீலன்.
உயர- லட்சுமிஹர்:
பணம், அந்தஸ்து, படிப்பு மூன்றும் இல்லாத சிறுவனுக்குத் தாழ்வு மனப்பான்மை இருந்தே தீரும். அவனது கோணத்தில் சொல்லப்பட்ட கதை நன்றாக வந்திருக்கிறது. சிறுவர் உலகத்தை வடிப்பது
சற்று கடினமான காரியம். மதி போன்ற சிறுவர்கள் நிஜவாழ்க்கையில் நாம் ரசிக்காமலும், கதைகளாய் வாசிக்கையில்
சுவாரசியமாகவும் தோன்றுபவர்கள்.
திரௌபதியின் சேலையில் பற்றி எரியும் அரளிப்பூக்கள் – க.மூர்த்தி :
புராணக்கதைகளில் ஆசிரியர் கற்பனை கலக்காவிடில் அவற்றை மீட்டுருவாக்கம் செய்வதில் பலனில்லை. மூர்த்தி இந்தக் கதையில் திரௌபதியின் கோணத்தை மாற்றியதால் கண்ணாடியில் வலது இடதாய், இடது வலதாய் தெரிவது போல் கதை மாந்தர் மாறிப்போகிறார்கள். இலக்கியத்தில் மீறல்கள் அழகு.
ஆயான் – மதுரா:
இரு தனிநபர்களின் உறவு எந்த விதத்தில் இருந்தாலும் மூன்றாம் நபர் கருத்து தேவையில்லாதது. பொறாமையினாலோ, பொழுது போகாமலோ அவர்கள் தான் அடுத்தவர் காரியத்தைப் பேசுகிறார்கள்.
இதற்குள் அம்மாவின் possessiveness மனைவி மீதான காதல் எல்லாம் வந்து போகிறது.
கரை(றை)- சென்றாயகுமார்:
கதையா அனுபவக்கதையா தெரியவில்லை.
என்ன படித்திருந்தாலும், என்ன வேலை கிடைக்கிறதோ அது போதும் என்று போவது, இந்த வேலை கிடைத்தால் தான் போவேன் என்று அதற்காகவே தவம் போல் முயற்சிப்பது, இந்த இரண்டிலும் எது சரி என்றும் தெரியவில்லை.
அலமு – அகராதி:
புல்லுக்கு இறைத்த நீர் நெல்லுக்குப் போய் சேருகிறது. எல்லா வேலைகளுக்கும் அட்வான்ஸ் என்று சிறிய தொகையேனும் கொடுப்பவர், வீட்டிலேயே சமையல் செய்து
கொடுப்போரிடம் தராமல் வேலை வாங்குவதும் சகஜம் தான்.
ஊருக்கெல்லாம் ஒரே வானம்- மஞ்சுநாத்:
மதவெறியைப் பேசும் கதை. மூக்கிருந்தால் சளிப் பிடிக்கும் என்பது போல் எந்த மதம் இருந்தாலும் வெறுப்பை, வன்முறையைத் தவிர்க்க இயலாது.
தகப்பன் சாமி – சாந்தி:
காதலில் நடுவே மதங்கள் குறுக்கே வரக்கூடாது என்பது எல்லோரும் சொல்வது ஆனால் கல்யாணத்தின் நடுவேயும் அது குறுக்கே வரக்கூடாது என்று சொல்வது வெகுசிலரே. தேவி சப்பைக்கட்டு கட்டினாலும் உண்மை சற்று தூரத்தில் நின்று கேலிச்சிரிப்பு சிரிக்கிறது.
உயில் – சிவமணி:
தொலைக்காட்சியில் வருவதை எல்லாம் அசரீரியாக எடுத்துக் கொண்டால் வாழ்க்கையை எப்படிக் கடத்துவது? எதுவாக இருந்தாலும் நம்முடைய முதலீடுகள் இத்யாதியை குடும்பத்தில் யார் பேருக்கேனும் எழுதிவிட்டு அவர்களுக்கும் தகவலைத் தெரிவிப்பது நல்லது.
தண்ணீர் பூதம் – எஸ்.ராஜகுமாரன்:
ஒரு நாளின் ஒருபகுதி வாழ்வே கதை. அதற்குள் சமகால பேரிடர், அதனால் சிதையும் வருமானம், குழந்தைகள் உலகம், Nostalgia, திருவையாறு நிலப்பரப்பு, Eloping, ஊர்பெருமை, Misfortunes never come single என்று எல்லாம் வந்து Silverlining ஆக ஒரு நம்பிக்கைக் கீற்றும் தெரிகிறது. நல்ல கதை. தொடர்ந்து எழுதுங்கள்.
கோணல் – கயல்:
“நடை பழகும்போது தென்றல் விடை சொல்லிக் கொண்டு போகும்” என்றது வாலி. குழலி நடக்கையில் விரல் மேல்படுமளவிற்கு விசுக்விசுக் நடை. அப்படி நடக்கும் பெண்கள் பெரும்பாலும் தன்னம்பிக்கை மிகுந்தவர்களாக இருப்பார்கள். அப்பா-பெண் பாசம், கணவனின் விட்டேத்தியான போக்கு, என்ன படித்தாலும் ஆதிஇயல்பு உணர்ச்சிவசப் படுகையில் வருவது எல்லாம் இந்தக் கதையில் கலந்து வருகிறது. நேரமெடுத்துக் கொண்டு பலமுறை எடிட் செய்து எழுதினால் இவரால் நல்ல கதைகள் எழுதமுடியும். மொழிநடை தனித்துவமாக இருக்கிறது. “இலைகளை அணைத்து முத்தமிட வேண்டும்”
கூடடைதல் – ஐ.கிருத்திகா:
திருமணம் வரை ஆண்வாடை/பெண்வாடை கிடையாது, பின் ஒருவரை திருமணம் செய்து Till death do us part என்பது எவ்வளவு Monotonousஆனது என்று தெரியாமலேயே கோடிப்பேர் இங்கே வாழ்ந்து மடிந்திருக்கிறார்கள். தகவல் தொழில் நுட்பம் அந்தக் கோட்டையைக் கொஞ்சம் தாண்டி உள்நுழைகிறது. துணை எவ்வளவு தான் அழகு என்றாலும் வருடங்களானதும்
போரடிக்கும் என்பதை இங்கு ஒத்துக் கொள்ளும் மனநிலை இல்லை. புதிதாகப் பார்ப்பவர்களுக்கு இருக்கும் பிரமிப்போ, அவர்கள் தரும் Attentionஐ துணை தர முடியாது போவதோ இயல்பான விசயங்கள்.
அதே போல் பெரும்பாலும் நடுத்தரவயதுப் பெண்ணுக்கு ஆதுரம், கரிசனம் தேவைப்படும் போதில், ஆணுக்கு எப்போதும் ஒரே Agenda. சிறகிற்கு சேதமில்லாது பறவை கூடடைகிறது. தோழியின் வாழ்க்கையை, உடலமைப்பை ஒப்புநோக்குவது நல்ல யுத்தி. கிருத்திகா புதுப்புதுக் கருக்களை எடுத்துக் கொண்டு அதை Develop செய்யும் விதமும், Present செய்யும் விதமும் நன்றாக இருக்கிறது.
காலத்தின் குரல் – தேவா:
நாம் பார்க்க கீழே இருந்தவர்கள் நமக்கு சமமாக உட்காருவதைப் பொறுக்காதது வர்க்கபேதம். உலகம் முழுதும் இதே மனநிலைதான். காலத்திற்கு இதுவெல்லாம் தெரியாது, மேலிருப்பவரைக் கீழே, கீழிருப்பவரை மேலே கொண்டு சேர்த்து கடந்து கொண்டே இருக்கும்.
கைபேசி அழைப்பு – மதுசூதன். எஸ்:
நெருக்கமானவர் இறந்ததை மனம் நம்பாது எப்போதும் போல் அவரிடம் கேட்கலாம் என்று வாய் வரை வரும் கேள்வி எல்லோருக்கும் பொதுவான அனுபவம். இறந்தவர் அலைபேசிஎண்ணில் இருந்து அழைப்பு வருகிறது எனும் போது முதுகு சில்லிடுவதும் இயல்பானதே.
விடுதி- மோப்பஸான்- தமிழில் கார்குழலி:
மோப்பஸானின் கிளாசிக்கல் சிறுகதைகளில் ஒன்று. இதில் இருக்கும் குளிர்காலச் சூழல் நம்மில் பலர் பார்த்தறியாதது. ஆனால் சுயநலம், சுரண்டல், பேராசை, போதை, பயம், Abandonment என்று எல்லா உணர்வுகளையும் அழகாக சிறுகதை வடிவில் கொண்டு வந்த கதை இது. இதைப் படிக்கும் போதெல்லாம் அசோகமித்ரனின் பிரயாணம் கதை நினைவுக்கு வரும். கார்குழலியின் மொழிபெயர்ப்பு அறியாத சூழலையும் அறியும் வகையில் அமைந்திருக்கிறது.
கலகம் காலாண்டிதழின் முதல் இதழ் சினிமா குறித்த கட்டுரைகள், அரசியல் கட்டுரைகள், கவிதைகள், மொழிபெயர்ப்பு கவிதைகள், சிறுகதைகள், மொழிபெயர்ப்புச் சிறுகதை, குறுங்கதை, இசை குறித்த கட்டுரை, நேர்காணல்கள், நூல் விமர்சனங்கள், பொதுக் கட்டுரைகள் என்று பல்சுவை அம்சங்களுடன் பூரணமான இலக்கிய இதழாக வந்திருப்பது மகிழ்ச்சி.
முதல் இதழுக்கென்று வழங்கும் சலுகைகளை அடுத்து வரும் இதழ்களில் வழங்காது Quantityஐ விட Qualityல் கலகம் ஆசிரியர் குழு உற்றுநோக்கவேண்டும். எல்லோருக்கும் எழுதக் கவிதைகள் இருப்பது போல் சொல்வதற்கு கதைகளும் இருக்கின்றன. எது நம்முடைய தேர்வு என்பதில் கண்டிப்பு காட்டுவதில் தான் தரம் எப்போதும் நிர்ணயிக்கப்படுகிறது. எந்த பலனும் கிடைக்காத ஒரு செயலுக்குக் கடுமையான உழைப்பைத் தருவதே இலக்கியப்பெருவெளியில் நம் தடத்தையும் பதிக்கும் அவா மட்டுமே.
கலகம் இதழ் தொடர்ந்து சிறப்பாக வருவதற்கும், பெரும்பான்மை இலக்கிய வாசகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்கும் இதழ்களில் ஒன்றாக இருப்பதற்கும் சந்தோஷூக்கு எனது வாழ்த்துகளும், பிரியங்களும்.