அமிதபா பக்சி இந்திய எழுத்தாளர். IIT டெல்லியில் உதவிப்பேராசிரியராகப் பணிபுரிபவர். ஏற்கனவே மூன்று நாவல்களை எழுதிய இவரது சமீபத்தியதும் நான்காவது நாவலுமிது.
இல.சுபத்ரா கவனத்திற்குரிய மொழிபெயர்ப்புக் கட்டுரைகளைத் தொடர்ந்து செய்து வருகிறார். ஆங்கில
இலக்கியத்தில் ஆய்வியல் நிறைஞர் பட்டம் பெற்றவர். இது இவருடைய முதல் மொழிபெயர்ப்பு நூல்.
அமிதபா பக்சியின் முதல் நூல் Above average மும்பையில் பெரிதும் பரபரப்பை ஏற்படுத்தியபோது அங்கிருந்தேன். அந்த நூல் படித்தபின்,சராசரிக்கு மேலாகத் தோன்றாததால் அவரது மற்ற புத்தகங்கள் அவ்வப்போது செய்திகளில் அடிபட்ட போதும் படிக்கவில்லை. அடிக்கடி நான் சொல்வது போல் இவருடைய நான்காவது நூலில் என் பெயர் எழுதியிருக்கின்றது போலும்.
கதைக்குள் கதையாக ஆங்கிலத்தில் பல நூல்கள் வந்திருக்கின்றன. அவற்றுள் Carlos Ruiz Zafon ன் The Shadow of the Windம், Markus Zusakன் Book Thiefம் தவறாது படிக்க வேண்டியவை. அதே பாணியைப் பின்பற்றி எழுதப்பட்ட நாவல் இது. முதல் கதை சாகித்ய அகாதமி விருதுபெற்ற பிரபல இந்தி எழுத்தாளர் விஸ்வநாத், தனது மகன் இறந்த புத்திரசோகத்தில் தன் வாழ்வில் செய்த தவறுகளை, சம்பந்தப்பட்டவரிடம் எல்லாம் பாவமன்னிப்பு கேட்கும் தொனியில் கடிதம் எழுதுவது. இரண்டாவது கதை விஸ்வநாத் கடைசியாக எழுதிய முற்றுப்பெறாத நாவல். அதற்குள் லாலா மோதிசந்த் அவரது இரு மகன்கள் மற்றும் மருமகள்களின் கதைகள். முதல் கதையின் சாயல் இரண்டாவது கதையில் படிகிறது. இல்லை இரண்டிலுமே இராமாயணத்தின் சாயல் படிகிறது.
விதவைகள் வாழ்வு இந்தக் கதையில் முக்கிய பங்கு வகிக்கிறது. சாவை எதிர்நோக்கிக் காத்திருக்கும் ஒரு வாழ்வு, அது எவ்வளவு நீளுகின்றதோ அவ்வளவு துயரம். ஆறுவயதில் விதவையாகி எண்பது வயதைக் கடந்து வாழும் விதவைகள் எந்தக்கடனை தீர்க்கப் பிறந்திருப்பார்கள். காலமெல்லாம் அடுத்தவரை அண்டி வாழும் ஒரு வாழ்வு எதற்காக? . விருந்தாவனத்தில் எல்லாப் பெண்களும் மீரா தான். வாய்ப்பிருப்பவர்கள் K R Meeraவின் Poison of Love படித்துப் பாருங்கள்.திலிப்குமாரின் கடவு கதையில் கங்குப்பாட்டி 27 வயதில் விதவையானதும் அவளுக்கு நேரும் பயங்கரம்.
குணத்தால் முற்றிலும் மாறுபட்ட சகோதரர்கள் இரண்டு கதைகளிலுமே வருகிறார்கள். இரண்டாவது கதையில் வரும் தினாநாத் வழக்கமான வியாபாரக் குடும்பத்தில் பிறக்கும் பையன். சுவாரசியமே திவான் சந்த்திடம் தான். தன்னம்பிக்கை இல்லாது வளரும் பையன், அண்ணனை ராமனாகக் கருதிய தம்பி, Hamletன் To be or not to be சிக்கலைக் கொண்டவன், ஆன்மீகத்தில் புகலிடம் தேடியது ஆச்சரியமில்லை.
ஸ்வர்ணலதா- கமலா பால்ய நட்பில் இருந்துவித்தியாசமான சூழலில் மீண்டும் நட்பு. “உயர்ந்தோரும் தாழ்ந்தோரும் உறவு கொள்வது அது சிறுமை என்பது.. அதில் அர்த்தம் உள்ளது”. கஷ்டத்தில் இருப்பவர் சிரமங்களையே தொடர்ந்து பேசுவதும், ஆனந்தத்தில் இருப்பவர் அந்த சந்தோஷத்தைப் பகிர முடியாததுமான நட்பு எவ்வளவு நாள் தொடர முடியும்? கமலாவை தன் வீட்டின் படுக்கையறைக்கு அழைத்த பின் இருவர் நிலையும் கணத்தில் மாறலாம் என்று ஸ்வர்ணலதா நினைப்பதும், பிருந்தாவன் போ என்றதற்கு கமலாவின் பதில் உரையாடலும் நுட்பமானவை.
துளசிதாசரின் ராமசரிதமானஸ் மற்றும் ஹனுமன் சாலிஸாவும் நாவலெங்கும் கையாளப்பட்டிருக்கிறது. குற்றஉணர்வின் கதை இது. இந்த முறை புக்கர் விருதை வென்ற At Night All Blood Is Black என்ற நாவலும் கூட குற்றஉணர்வின் கதை தான்.
பிரஞ்சு மொழியில் எழுதப்பட்டு பின் ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கப்பட்ட நாவல் கூறும் குற்றஉணர்வை நாம் எளிதாகப் புரிந்து கொள்வது போல், இந்த நாவலை இந்தியரல்லாதோர் முழுமையாகப் புரிந்து கொள்ளல் கடினம். இந்திய நாவல்களின் பலம் என்றோ பலவீனம் என்றோ அதைச்சொல்லலாம். சிறந்த மொழிபெயர்ப்பை முதல் நாவலிலேயே செய்திருக்கிறார் சுபத்ரா. ராமசரிதமானஸ் மற்றும் கதாகாலட்சேபப் பகுதிகள் கடினமானவை. தமிழில் Reliable translator எண்ணிக்கையில் ஒன்று கூடுகிறது.
மொழிபெயர்ப்புநூல்கள்
பிரதிக்கு:
எதிர் வெளியீடு 99425 11302
முதல்பதிப்பு பிப்ரவரி 2021
விலை ரூ.450.