பா.வெங்கடேசன் மதுரையில் பிறந்து வளர்ந்தவர். ஓசூரில் வசிப்பவர். புனைவின் எல்லா வடிவங்களிலும் எழுதிய பா.வெங்கடேசன் அவரது நாவல்கள் மூலம் தனித்துத் தெரிகிறார். தாண்டவராயன் கதை, ராஜன் மகள் (குறுநாவல்கள்), பாகீரதியின் மதியம், வாராணசி முதலியன இவரது நாவல்கள். இந்த நூல் சமீபத்தில் வெளிவந்த புனைவைக் குறித்த உரையாடல்.

த.ராஜன் திருநெல்வேலியைச் சேர்ந்த விக்கிரமசிங்கபுரத்தில் பிறந்தவர். சென்னையில் வசிக்கிறார். தற்போது இந்து தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிகிறார்.

ராஜன் முன்னுரையில் வெகுளி வாசிப்பு, விமர்சனபூர்வ வாசிப்பு என்று இருவகைப் படுத்துகிறார். விமர்சனபூர்வ வாசிப்பைக் கூட இரண்டு வகைப்படுத்தலாம். ஒன்று பலன்நோக்கு விமர்சனம். மற்றொன்று சாதா தோசை போன்ற சாதா விமர்சனம்.

ஆரம்பக் கேள்வி பதில்கள் கற்பனைக்கும் புனைவுக்குமான வேறுபாட்டைச் சுற்றியே வருகின்றன. கற்பனை, புனைவு இரண்டிற்கும் அனுபவமே ஆதாரம். கற்பனை லாஜிக் குறித்துக் கவலைப்படுவதில்லை, புனைவு லாஜிக்குடன் கூடிய கற்பனை என்று சொல்லலாமா?

முழுக்கக் கற்பனை என்பது குறித்த ராஜனின் கேள்வி முக்கியமானது. யானையைப் பார்த்த குருடர்கள் தொடுஉணர்வு அனுபவத்தினால் வரும் கற்பனை. பக்கத்து வீட்டில் உமா என்னுடைய காதலை ஏற்றுக்கொண்டாள் என்ற கற்பனை காணும் அனுபவத்தில் வந்தது. Finance படித்து வளர்ந்த நான், அறிவியலுடன் ஸ்நானப்ராப்தி கூட இல்லாத நான், MSc Physics மாணவிகளுக்கு Solid State Physics வகுப்பெடுக்க நோட்டெடுத்து கடகடவென பாடத்திட்டம் குறித்து எழுத முடிந்தால் மட்டுமே அது முழுக்கக் கற்பனை.

சிறுகதையை புதினத்திலிருந்து வேறுபடுத்துவது வடிவமா, பக்க அளவா, உள்ளடக்கமா? ஆரம்பம், கதைப்பகுதி, முடிவு என்ற பாரம்பரிய வடிவமே இப்போது மாறிவிட்டபிறகு வடிவம் எப்படி தீர்மானிக்க முடியும்?.பக்க அளவு என்றால் Dostoevsky, White Nightsஐ சிறுகதையாகவே எழுதினார். உள்ளடக்கம் என்றால் பா.வெ சொல்வது போல் அக்னிப்பிரவேசம் சிறுகதைக்கும், சிலநேரங்களில் சிலமனிதர்கள் உள்ளடக்கத்திற்கும் பெரிய வித்தியாசமில்லை.

வாய்மொழிக் கதைகளுக்கும் அச்சுக் கதைகளுக்கும் உள்ள பெரிய வேறுபாடு, பின்னதில் இடைநிலையாளர்கள் பலர் சேர்வது மட்டுமல்ல, புரிதலும் கூடத்தான் என்று தோன்றுகிறது. உதாரணத்திற்கு இந்த நூலில் குறிப்பிட்டதையே எடுத்துக் கொள்வோம். க.நா.சு சொல்லும் அலங்காரத்தம்மாள் பாத்திரம் குறைப்பட்டதால் அம்மா வந்தாள் குறைப்பட்ட நாவல் என்னும் கூற்று. அம்மாவை புனிதமான பிம்பமாகக் கருதிய அப்புவின் கதை அது, அலங்காரத்தம்மாள் கதையல்ல என்பதை கநா.சு கவனிக்கத் தவறியதால் இந்தக் கருத்து. மோகமுள்ளில் அழகு, அறிவு, குறும்பு என எல்லாமாக இருந்த பெண் தொலைந்து போகிறாள். செருப்பு கூட இல்லாமல் தெருவில் நடக்கும்,பசியும், இருத்தல் குறித்த பேரச்சமும் கொண்ட பெண், உடல் குறித்த நுட்பமான உணர்வுகளை வாழ்க்கை அடித்த அடியில் இழந்த பெண், ” எல்லாம் இதற்குத் தானே பாபு” என்று கேட்கும் கேள்வி பாபுவை அறைகிறதோ இல்லையோ நம்மைக் கன்னத்தில் அறையவில்லை!

புரிதல், புரியாமை என்பது இலக்கியத்தில் அடிக்கடி பேசப்படும் பொருளாக இருக்கிறது. பா.வெ சொல்வது போல் ஆரம்பநிலை வாசகனுக்கு புதுமைப்பித்தனைப் படிப்பது கூட கடினமாக இருக்கலாம். புரிதலும் எப்படிப்பட்ட புரிதல் என்பதைப் பார்க்க வேண்டியிருக்கிறது. நளபாகம் ஆணியநாவல் என்று ஏதோ விமர்சனம் படித்தேன். இலக்கியம் ஒரு ஆனந்த அனுபவம், அறிவிற்கும் அதற்கும் சம்பந்தமில்லை என்ற புரிதல் இல்லாததாலேயே அதைப் படிக்கையில் Inferiority complexம் எழுதியவர்களுக்கு இன்டலெக்சுவல் பிம்பமும் கிடைக்கிறது.
உதாரணத்திற்கு இந்த பதில்களே கூட பா.வெ நினைத்தால் எளிய நடையில் சொல்ல முடியாதா? Complex ஆன நடை பீடத்தில் அமர்கிறது என்ற நம்பிக்கை தமிழில் அதிகம்.

முப்பது வருடங்களுக்கு மேல் புனைவுடன் பயணிப்பவர் பா.வெ. அவரது கருத்துக்களில் வேறுபட்டு விவாதம் செய்யலாம். பலவற்றுடன் உடன்படலாம். எப்படி இருந்தாலும் நேர்காணலைப் புத்தகமாகத் தமிழில் படிப்பது நல்லதொரு அனுபவம். ராஜன் ஆரம்பக் கேள்விக்குப் பிறகு, நதியோட்டத்தின் வேகத்தில் போவது போல் அடுத்து வரும் கேள்விகளை அமைத்துக் கொள்வது, கேள்விகளைப் பிரதானப்படுத்தாமல் பதில்களைப் பிரதானப்படுத்தியது சிறப்பு. பா.வெ அவரது படைப்புகளின் தகுதிக்கேற்ப இங்கே இலக்கிய உலகில் பேசப்படவில்லை. அவரது நாவல்கள் குறித்து குறிப்பாகக் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் சொன்னதையே என் படைப்புகள் குறித்து அதிகம் பேசி விட்டேன் என்கிறார்.

இது போன்ற நூல்கள் அதிகம் வரவேண்டும். பொதுவெளியில், சமூக ஊடகங்களில் அதிகம் பகிராத படைப்பாளிகள் அவர்களது கருத்துக்களைப் பதிவுசெய்ய நல்ல வாய்ப்பு. பா.வெங்கடேசனை இதுவரை படிக்காதவர்கள் ராஜன் மகளில் இருந்தோ அல்லது வாராணசியில் இருந்தோ ஆரம்பிப்பது நல்லது. தாண்டவராயன் கதையைக் கடைசியாக வைத்துக் கொள்ளலாம்

பிரதிக்கு:

எதிர் வெளியீடு 99425 11302
முதல்பதிப்பு ஜூலை 2021
விலை ரூ 250.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s