கனகராஜ் பாலசுப்பிரமணியம்-
கனகராஜ் கர்நாடகத்தில் பிறந்து வளர்ந்தவர். தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர். தற்போது சவுதி அரேபியாவில் ஆங்கில இலக்கியம் கற்பித்துக் கொண்டிருக்கிறார். கன்னடத்தில் இரண்டு சிறுகதைத் தொகுப்புகள் கொண்டு வந்துள்ளார். இந்திரா பார்த்தசாரதியின் ஔரங்கசீப் நாடகத்தை கன்னடத்திற்கு மொழிபெயர்த்திருக்கிறார். தற்போது தமிழிலும் கதைகள் எழுதி பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன. ஒரு குறுநாவல் அமேசான் கிண்டிலில் வெளியாகி உள்ளது. இது இவர் கன்னடத்தில் எழுதிய சிறுகதைத் தொகுப்பின் மொழிபெயர்ப்பு.
கே.நல்லதம்பி:
லங்கேஷ்பாரதி, ஷான்பாக் புத்தகங்கள் உட்பட பலநூல்களைக் கன்னடத்திலிருந்து இருந்து தமிழுக்கும், சுந்தரராமசாமியின் ஒரு புளியமரத்தின் கதை உட்பட சில நூல்களை தமிழில் இருந்து கன்னடத்திற்கும் மொழிபெயர்ப்பு செய்தவர். தி.ஜாவின் சில சிறுகதைகளை கன்னடத்தில் மொழிபெயர்த்துள்ளார்.
ஆங்கிலம் தவிர்த்த இரண்டு மொழிகளில் எழுதுபவர்கள் இந்தியாவில் வெகு குறைவு.
Jhumba Lahiri ஆங்கிலத்தில் எழுதி பிரபலமான பின் வெகுகாலம் கழித்து இத்தாலியில் எழுத ஆரம்பித்தார். ஒரு மொழியில் சிந்தித்துப் பழகியவர்கள் அடுத்த மொழியில் எழுதுவது கடினம். கனகராஜூக்கு இரண்டாவது எழுதும் மொழி தாய்மொழியானதால் அவரால் பாலைவனத்தின் ஐந்தாம் சுவர் போல குறுநாவலை தமிழில் எழுத முடிந்திருக்கிறது.
பதினோரு கதைகள் கொண்ட தொகுப்பு. அநேகமான கதைகள் இருத்தலுக்காகப் புலம் பெயர்ந்தவர்களின் அலைக்கழிப்புகள்.
ஆடுஜீவிதம் போன்ற வழக்கமான துயரக் கதைகள் இல்லை இவை சொல்லிய முறையிலும், பின்நவீனத்துவ பாணி, சர்ரியல் பாணி என வித்தியாசப்படுபவை.
வாசகர்களுக்கான பங்கைக் கோரும் கதைகள் இவை. கொச்சி விமானநிலையத்தில் இருந்து போகையில் நடுத்தெருவில் காருடன் ஆட்கள் எப்படி மறைய முடியும்? வந்த டாக்ஸி டிரைவர் ரஞ்சித்தா என்று எப்படிக் கேட்கமுடியும்?
வந்து இறங்கியது ரஞ்சித்தா அல்லது பிள்ளை இல்லையே என்ற அவனது ஏக்கமா என்று வாசகர் யோசிக்கையில் திரை விலகி விடுகிறது. அதே போல் இந்தியாவும் ஏற்றுக் கொள்ளாமல், பாகிஸ்தானும் ஏற்றுக் கொள்ளாமல், வந்த தேசமும் ஏற்றுக் கொள்ளாமல் அங்கே ஆட்களை உயிருடன் தலைவெட்டும் காட்சியைப் பார்க்கையில் ஆடுபுலி கதை விளங்கும்.
மேலே சொன்ன இரண்டு கதைகளில் மட்டும் வித்தியாசமான புலம்பெயர்ந்தோரின் கதைகள் இல்லை. தாத்தா தேவரைப் பார்த்து பயந்தால் பேரன் அராபியனைப் பார்த்துப் பயப்படுகிறான். இரண்டு காலகட்டத்திற்கும் ஒடுக்குமுறை பொதுவானது. அப்பா உயிராகப் பாதுகாத்த சைக்கிளை காணாமல் செய்து அரேபியா வந்தவனைப் போல வெகுசில கதைகள் எளிமையான கதைகள். ஸ்டேட்யூ ஆஃப் லிபர்டி கதையில் ஹிந்துஸ்தானி இசை கதை முழுதும் ஒலிக்கின்றது. சுதந்திரத்தை விரும்பும் அதே சமயத்தில் சுதந்திரத்தின் வீச்சை எதிர்கொள்ள முடியாத பழமையில் ஊறிய மனம் கொண்ட பெண்ணின் காமமும் கதை முழுதும் வருகிறது. Statue of Liberty ஒரு குறியீடு. எங்கு சுற்றினாலும் ஸ்மிதாவின் மனம் காமத்தில் போய் முடிவது அழகாகச் சொல்லப்பட்டிருக்கிறது. வாட்டர் மெலன் வித்தியாசமான கதை. Superstition. கடைசிப்பகுதி திரில்லர் போல் Sharp ஆக வந்திருக்கிறது. இடையில் Racism பற்றியும்.
காலச்சுவடில் வெளிவந்த பனிப்பாறை என்னும் இவர் கதையைப் படித்தவர்கள் இவர் தமிழில் முதலாக எழுதிய கதை என்று நம்புவது கடினம். வித்தியாசமான தொகுப்பு இது. சில கதைகள் முதல் வாசிப்பில் புரியாதவை. பரிட்சார்த்த முயற்சிகள் இந்தத் தொகுப்பில் நிறையவே செய்திருக்கிறார். கன்னடம், தமிழ் இரண்டிலும் இல்லாத கதையுலகத்தை இவர் எழுத்தில் வடிப்பதற்கு இவருடைய சவுதி அரேபியா வாழ்க்கை துணைபுரிந்திருக்கும். பல நாடுகளில் வாழ்பவர்கள் தமிழ் சிறுகதைக்களங்களின் எல்லைகளை விரிவாக்குகிறார்கள். கன்னடத்தின் நல்ல படைப்புகள் எல்லாவற்றையும் தமிழுக்குக் கொண்டுவந்து விடுங்கள் என்பதைத் தவிர கே.நல்லதம்பியிடம் வேறு என்ன நாம் கேட்கப்போகிறோம்?
மொழிபெயர்ப்புநூல்கள்
பிரதிக்கு :
யாவரும் பதிப்பகம் be4books 90424 61472
முதல்பதிப்பு பிப்ரவரி 2021
விலை ரூ.180.
: