நாவலின் இறப்பு பற்றி ஆங்கிலத்தில் அடிக்கடி விவாதங்கள் நடந்திருக்கின்றன.
தமிழில் கூட நாம் சாகாவரம் பெற்ற படைப்புகள் என்கிறோம். Animal Farm இறப்பில்லாத நாவல்களில் ஒன்று. இரண்டு உலகயுத்தங்களையும் பார்த்து வாழ்ந்த ஆர்வெல் அடிப்படையில் ஒரு பத்திரிகையாளரும், கட்டுரையாளரும் ஆவார். Burmese Daysல் ஆரம்பித்து தொடர்ந்து சுயசரிதைக்கூறுகள் கொண்ட நாவல்களை எழுதிய ஆர்வெல் இருபதாம் நூற்றாண்டின் முக்கியமான இரு நூல்களை தன் வாழ்வின் கடைசி ஐந்தாம் வருடத்தில் எழுதினார். அவை The fable, ANIMAL FARM மற்றும் an anti-utopian satire 1984. அவரது அல்புனைவுகளில் மிகச்சிறந்தது Homage to Catalonia.

ஆர்வெல், ஐரோப்பாவில் இரண்டு மாபெரும் அரசியல் சித்தாந்தங்கள் கோலோச்சிய காலத்தில் பெரும்பாலான படைப்புகளைப் படைத்தவர். ஒன்று சமூகச்சமநிலையைக் கோரிய கம்யூனிசம். மற்றொன்று அடக்குமுறையில் நம்பிக்கை கொண்ட சர்வாதிகாரம். ஆர்வெல் இரண்டின் மீதும் நம்பிக்கை இல்லாத ஜனநாயக சமதர்மத்தில் நம்பிக்கை கொண்டிருந்தார்.
நான் ஏன் எழுதுகிறேன் என்ற கட்டுரையில் அரசியலைக் கலைவடிவில் தரும் முயற்சியே எனது எழுத்துக்கள் என்றிருக்கிறார்.

ஆர்வெல் ஒரு நாவலாசிரியரே இல்லை, அவர் இலக்கியம் தெரிந்த விமர்சகர், ஆனால் புனைவை இலக்கியமாக எழுதத் தெரியாத எழுத்தாளர் என்பது போல் பல விமர்சனங்களும், 1984 மற்றும் Animal Farm இரண்டுமே Over rated என்றும் விமர்சனங்கள் பல இன்னும் வந்து கொண்டிருக்கின்றன.
இவரது புகழ்பெற்ற இரண்டு நாவல்களையும் முதலில் தமிழில் தான் 1984ல் (What a coincidence?) படித்தேன். இருபது வருடங்கள் கழித்து இந்தியாவில் ஆங்கிலேயஆட்சி தொடர்வதைக் கடுமையாக எதிர்த்தவர் இவர் என்பதை நண்பர் அனுப்பிய கட்டுரையில் படித்து, இவர் மேல் வந்த பிரியத்தில் மீண்டும் இந்த இரண்டு நாவல்களை ஆங்கிலத்தில் படிக்கையில் நன்கு உள்வாங்க முடிந்தது. 1984 ஆர்வெல்லின் ஆகச்சிறந்த படைப்பு. Winston Smithன் தனிமை, குற்றஉணர்வு, காமம், கடந்தகாலத்தில் இருந்து வெளிவர முடியாத தன்மை இவற்றால் அவன் மற்றவர்களிடமிருந்து தனிமைப்படுவதன் கதை. 1930ன் இங்கிலாந்தை அப்படியே படம் பிடித்திருக்கும். ஒருவகையில் அவரது அரசியல் விமர்சனம் மற்றும் ரஷ்ய கம்யூனிசம் மீதான அவரது தாக்குதலும் நையாண்டியும் இரண்டு நூல்களிலுமே வந்துள்ளன. ஒன்றில் மனிதர்களையும் மற்றொன்றில் விலங்குகளையும் கதாபாத்திரங்களாக்கியிருப்பார். Animal Farmல் இருக்கும் முழுமையான Symbolism என்னைக் கவர்ந்ததால் இங்கே அதைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன்.

Animal Farm எளிதான, சிறிய, நகைச்சுவையான நாவல். விலங்குகளின் நற்குணத்தையும் மனிதனின் குரூரத்தையும் பேசும் நாவல். ஆர்வெல் இதில் விலங்குகளை மனிதனின் குணாதிசயங்களின் குறியீடாக்கி இருப்பார். உண்மையான வரலாற்று சம்பவங்களை எடுத்துக் கொண்டு அதன் காலக்கிரமத்தை மாற்றி இருப்பார். Manor Farm தான் ரஷ்யா, Mr.Jones ஜார்மன்னர், போல்ஸ்விக்ஸ் இந்த நாவலில் பன்றிகள், மனிதர்கள் ஆளும் வர்க்கம், விலங்குகள் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள். அது போலவே Molly, புரட்சியை எதிர்த்து நாட்டைவிட்டு வெளியேறிய வெள்ளை ரஷ்யர்கள், Dogs ரகசிய போலீஸ், Sheeps அப்பாவி மக்கள். முழுமையான Political allegory நாவல் இது.நாவலைப் படிக்க விரும்புபவர்கள் அதில் வரும் கதாபாத்திரங்கள் யாரைக் குறிக்கின்றன என்று குறித்து வைத்துக் கொண்டு படித்தால் சுவாரசியமாக இருக்கும்.

அரசியல் விமர்சனம் என்பதைத் தாண்டி, பசுக்களை, கோழிகளை Mr.Jones கேட்கும் கேள்வியின் மூலம் பெண்களின் உழைப்பும் உற்பத்தியில் ஒரு பகுதி என்ற கருத்தைத் தெரிவிக்கிறார். ஆணாத்திக்கம் மிகுந்த ஆங்கிலேய சமுதாயத்தில் நாற்பதுகளில் இது ஒரு முக்கியமான விசயம்.

Animal Farm இரண்டு தளங்களில் இயங்குகிறது. முதலாவது நாடோடிக்கதைகளில் வருவது போல் மனிதரின்குணம் கொண்ட பண்ணை விலங்குகள், அவற்றின் வெற்றிகள், துரோகமும் தோல்வியும். விலங்குகளின் கதையில் நடப்பது, அரசியலின் துணை இல்லாது புரியும் கதை. (அப்படியும் கூட Shilpa Shetty சொன்னது போல் இது விலங்குகளைப் பேணும் கதையல்ல).இரண்டாவது தளத்தில் அடக்குமுறை, துரோகம், வாதை ஒரே கோட்டில் நகரும் Political Allegory.

“எல்லா விலங்குகளும் சமமானவை, ஆனால் சில விலங்குகள் மற்ற விலங்குகளை விட சமனுக்கு மேலானவை” இது தான் நாவலின் கரு. பண்ணையின் தலைமை மாறுகிறது ஆனால் விலங்குகளின் நிலைமை மாறவில்லை. எல்லா விலங்குகளுக்கான ரேஷன் குறைக்கப்படுகிறது, ஆனால் பன்றிகளுக்கும், நாய்களுக்கும் குறைக்கப் படுவதில்லை.

Animal Farm எழுப்பிய பல கேள்விகளுக்கு இன்று மட்டுமல்ல என்றும் பதில் இருக்கப் போவதில்லை. முழுமையான சமத்துவம் நிறைந்த சமுதாயத்திற்கு வாய்ப்பிருக்கிறதா? எப்போதும் எல்லா சமூகத்திலும் உயர்ந்தோர் தாழ்ந்தோர் இடைவெளி இருக்குமா? மக்களின் உரிமைகள் எப்படி பறிக்கப்படுகின்றன? அரசாங்கங்கள் திட்டமிட்டுப் படிப்படியாக அதைப் பறிப்பதன் உள்நோக்கம் என்ன? முழுமையான கல்வியும் அறிவும் மொத்த மக்களிடத்தில் சாத்தியமா? எனில் அது அரசியல் சுதந்திரத்திற்கு வழிவகுக்குமா? இது போல் பல விடை தெரியாத கேள்விகள் இந்த நாவலில் எழுப்பப்பட்டுக் கொண்டே இருக்கின்றன.

ஆபிரகாம் லிங்கன் கூறிய ” ஒரு மனிதனின் உண்மையான தன்மையை அறிய அவனுக்கு அதிகாரத்தைக் கொடுக்க வேண்டும்” என்ற புள்ளியிலேயே இந்த நாவலும் நகர்கிறது. Napoleon உடல் உழைப்பை விட மூளை செய்யும் வேலை தான் அதிக களைப்பு, அதனால் அதிக உணவு தரவேண்டும் என்கிறான். விலங்குகள் படுக்கையில் படுக்கக்கூடாது என்பது உட்பட பல சட்டங்களைத் திருத்துகிறான். விக்கிரமாதித்யனின் சிம்மாசனம் போல் விந்தைகள் செய்யக்கூடியது அதிகாரம்.

ஆர்வெல் 1945ல் எழுதிய நாவல் இது. 1950ல் மறைந்தார். அதன் பின் நிறைய மாற்றங்கள். 1951ல் இருந்து அமெரிக்கா உள்நோக்கத்துடன் இவரது இரண்டு நாவல்களின் பல மொழிபெயர்ப்புகளுக்கு நிதி உதவி அளித்தது. இன்று, ஐரோப்பாவில் மட்டுமல்ல, வளர்ந்த எந்த நாடுகளிலும் ஜார் வகை மன்னர்கள் இல்லை. மாபெரும் ரஷ்யசாம்ராஜ்ஜியம் பதினைந்து துண்டுகளாகிப் போனது. இந்த நாவலில் பரவலாகக் கிண்டல் செய்யப்படும் ஸ்டாலினை பின்வந்த ரஷ்யத் தலைமுறையே ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் இந்த நாவல், ஒரு உண்மை வரலாற்றை புனைவின் எல்லா சுதந்திரங்களுடன் அணுகிய நூல். Symbols expressing Metaphysical realities என்ற வகையில் முதலில் மனதில் தோன்றும் நாவல். Political Allegoryக்கு உதாரணமாகச் சொல்லப்படும் நாவல். வல்லாளன் சொன்னதே வழக்கு என்ற எப்போதும் மாறாத தத்துவத்தைப் பேசும் நாவல். சமகால இலக்கியத்தில் தவிர்க்க முடியாத நாவல். இவரது மாஸ்டர்பீஸான 1984 நாவல் கூட இந்த நாவலின் நீட்சியே. இது போன்ற பல காரணங்களினால் இந்த நாவல் தவறாது படிக்க வேண்டிய நூறுநாவல்கள் பட்டியலில் இடம்பெறுகிறது.

100literaryclassics

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s