ஒரு கடிதம் – டெம்சுலா ஆவ்- தமிழில் எம்.ஏ.சுசிலா:
இந்தியாவின் வடகிழக்குப் பகுதியைச் சேர்ந்தவர் ஆசிரியர். வன்முறையில் நம்பிக்கை கொள்ளும் தீவிரவாத இயக்கங்களுக்கு, பாதுகாவலர்கள், பயங்கரவாதிகள் என்ற இரண்டு பெயர்களுக்கும் வாய்ப்பிருக்கிறது. யார் பார்வையில் என்பது தான் கேள்வி.
சீனா, பங்களாதேஷ், பர்மா இவற்றை எல்லைகளாகக் கொண்ட இந்தப் பகுதியில் போராளிகள் நிறைந்து வன்முறை நிற்காது அந்த நாடுகளும் பார்த்துக் கொள்கின்றன. இந்தியவெறுப்பு போராளிகளிடம் காஷ்மீரைப் போலவே இருக்கும்.
இந்தக் கதையில், யார்பக்கம் நியாயம் என்பதில் ஒருபக்கம் சரியாது, வாசகர்களுக்கும் எல்லோர் மீதும் பரிதாபம் வரும்வகையில் எழுதியிருக்கிறார். கண் முன் பார்த்த ஒரு வாழ்க்கை என்பதால் வெகு யதார்த்தம் இந்தக்கதையில். வழமை போல் இனிமையான தமிழ் மொழிபெயர்ப்பு.
அமுதம் – கமலதேவி:
முதுமையில் பிள்ளைகளால் கைவிடப்பட்ட இரண்டு ஜீவன்கள் என்றாலே சிக்கல், இங்கே அது போதாதென்று மூன்றாம் ஜீவன்.
எந்த எதிர்பார்ப்பும் இல்லாத பிரியம் தான் அமுதம். பின் எப்படி கசந்து போகும்? பிச்சியின் கையில் பச்சை குத்திய முருகனிலிருந்து, அவளது ஆற்றாமையை மென்று முழுங்குவதில் இருந்து எல்லாமே நுட்பமாக வந்திருக்கிறது. வட்டார வழக்கு கூடுதல் பலம் இந்தக் கதைக்கு. வாய்மொழிக்கதைகளில் வரும் அதே ராகம்
“அம்மாக்காரி ராணியாம்…..” அதிகம் பேசப்படாத நல்ல எழுத்தாளர் கமலதேவி.
மணப்பு – ஐ.கிருத்திகா :
மணை மேல் அமர்ந்து தோசை சுடுவது, பழம்பஞ்சுப் புடவையை கட்டிக்கொள்வது கர்ப்பவதிக்கு வசதியாக இருப்பது, இரண்டு பெண்கள் அந்தரங்கவிசயங்களைப் பேசும் போது பிள்ளைகளை விரட்டி விடுவது, உளுந்துப் பொங்கல், மிளகு ரசம், பலாக் கொட்டை சுட்டுத் தின்பது என்று எத்தனை எத்தனை விசயங்கள் இந்தக்கதையில்! பக்கத்து வீட்டில் இருப்பவர்களை அத்தை, மாமா என்றே அழைத்திருக்கிறோம். அத்தை-மாமா உடலமைப்பு மற்றும் மாமாவின் வேலை குறித்து சம்பந்நம் இல்லாதது போல் வரும் தகவல்களில் இன்னொருகதை ஒளிந்திருக்கிறது. அத்தை பொய் சொல்கிறாள். அவள் வர வேண்டாம் என்று தான் பார்த்தாள். தான் குழந்தையாய் ஏந்திய பெண் இப்போது குழந்தையை வயிற்றில் வைத்திருக்கையில் அவளால் பேசாமல் இருக்க முடியவில்லை. Beautiful story.
அந்தநாள் – பத்மகுமாரி:
பதிவிரதைக்கு இன்னல் வரும் கதைகள் காலங்காலமாக முடிவில்லாமல் வந்து நம்மை மூழ்கடிக்கின்றன. சரவணன் பயங்கர கொடுமைக்காரனாக இருப்பான் போலிருக்கிறதே!
விதி- ரக்ஷன் கிருதிக்:
அண்ணன் தம்பி அடிதடி சண்டை. பஞ்சாயத்து. முகத்தில் முழிக்க வேண்டாம் என்று சுவரும் கட்டியாச்சு. ஆனால்…….
இதைத்தான் ஆடு பகை, குட்டி உறவு என்கிறார்களோ!
அபிக்குட்டி – வைரவன் லெ.ரா:
மூளைவளர்ச்சி இல்லாத குழந்தையைப் பற்றிய மற்றொரு கதை. ஆச்சி இருக்கும் வரை அபிக்குட்டிக்குக் கவலையில்லை. இன்னொரு வகையில் பார்த்தால் இந்தக் குழந்தைகள், அவர்கள் உடன்பிறந்தவருக்கு
வரும் வாய்ப்பைக் கெடுக்கிறார்கள். நல்ல வேலையில் இருந்தும் இதைக் குறை என்று சொல்லி விலகிப்போகிறவர்கள் எத்தனை பேர்? இரண்டு தரப்புமே பரிதாபத்துக்குரியது தான்.