மிச்சமாக முடியாத நினைவுகள் – சமயவேல்:
” புஸ்தகம் எழுதுவது, வாசிப்பது, அது காரணமாக மிகுந்த அன்புடன் இருப்பது என்பது இங்கே யாருக்குத்தான் புரியும்”.
கி.ராவை நினைவு கூறும் இந்தக் கட்டுரையில், தொழில்முறை கதைசொல்லிகள் வருகிறார்கள், கு.அழகிரிசாமி அந்தக்கதையை ஏன் எழுதினார் எனும் பின்னணி வருகிறது, பெரிய தவில், உறுமி மேளம், ஊமைக்குழல், கம்மஞ்சோறு, மிதுக்கம்பழ மோர்மிளகாய் வத்தல்கள், கோடாங்கிப்பட்டி நார்த்தங்காய் ஊறுகாய் என்று கொண்டாட்டமாய் முடிகிறது. பெருவாழ்வு வாழ்ந்தவரைக் கொண்டாடத்தான் வேண்டும், சமயவேல் எழுதாத விசயங்கள் ஏராளம் என்ற என் சந்தேகமும் உறுதியானது.
செல்வசங்கரனின் நான்கு கவிதைகள்:
“நதியிலிருந்து கொஞ்சம் பிடித்துச்
செடிக்கு ஊற்றினேன்
நதியில் கொஞ்சம் பிடிப்பதென்பது
கொஞ்சம் மீன்களைப் பிடிக்கச் சமம்
மீன்களைப் பிடிக்கவந்த கொஞ்சம்
கால்களைப்பிடிக்கச் சமம்
…………..
நதியிடம் போய் வருகிறோமெனச்
சொல்லி அங்கிருந்து கிளம்ப
சரியென நதி தலையை ஆட்டுகிறபோது
எல்லாமே ஆடியது
வீட்டு செல்ஃபிலிருந்த புத்தகஅடுக்கும்
ஆடி அதிலிருந்த இலக்கியவிசாரம்
கீழே சரிந்தது.
என்ன க.நா.சு நீங்கள் மட்டும் எழுகிறீர்கள்
எல்லா எழுத்து ராட்சசர்களையும்
தூக்கி விடுங்கள்
எல்லோரும் எல்லாமுமாக சேர்ந்து
உலகம் இருக்கிற இடத்தில்
தூக்கி ஒரு நதியை வைத்தோம்”
நூறுகோடி ஜன்னல்கள் – கார்த்திகா முகுந்த்:
ஸ்டீபன் வில்ட்ஷைரின் நகர ஓவியங்களை முன்வைத்து இந்தக்கட்டுரை. முத்தையா முரளிதரனின் Bend arm அவரை உலகின் சிறந்த Spinner ஆக்கியது போல ஒரு குறைபாடு இவரை சிறந்த ஓவியராக்குகிறது. படித்துப் பாருங்கள்.
மேழியின் ஏழு கவிதைகள்:
” வீட்டினுள் அலையற்று இரைகிறது கடல்
அதனுள் ஒரேயொரு மீன்
பழந்தண்ணீரில் நீந்தும்
ஒற்றைப்பருக்கையென
முன்னெப்போதோ எங்கோ அலைதள்ளி
விளையாட்டு சாமானுடன்
செல்லரித்துக்கிடந்த கிளிஞ்சலொன்றை
உள்ளிடுகிறாள் மகள்
ஒரு அலை மெல்லக் கரைபுரள்கிறது”
கௌரிப்ரியா கவிதைகள் நான்கு:
“பேச யாருமற்ற
பிறழ் மனசுக்காரி
சன்னலருகில் வைத்தலுண்டு
மௌனத்தில் புரட்டிய
நெல்மணிகளை
செம்மஞ்சள் பெருவட்டத்துள்
சின்னதொரு கருவட்டமாய்
வீட்டுப்புறாவின் விழியில் சுழலும்
தகித்துத் தீர்ந்த
தாரகையின் கருந்துளை
…………………”
டோனி ப்ரஸ்லர் கவிதைகள் நான்கு:
“தொங்கும் சிலுவைகளுக்கு
கண்ணிவெடி
புத்தனுக்கு கஞ்சா பொட்டலம்
துருவேறிய காங்கோ
ரவை தோட்டா
மெதுஸாவை முத்திய
எரிநட்சத்திரக்கோலம்
எரிந்தும் தணியாத
காஃப்காவின் புகைப்படம்”
மனக்கேணியின் பாதாளக்கரண்டி கமலதேவியின் கடுவழித்துணை- லாவண்யா சுந்தரராஜன்:
கடுவழித்துணை சிறுகதை தொகுப்பைக் குறித்து லாவண்யாவின் பார்வையில். கமலதேவி இன்னும் பரவலாக வாசிக்கப்பட வேண்டிய நல்ல எழுத்தாளர். அவரது மாயை கதை படித்து ஆச்சரியம் அடைந்தது இன்னும் நினைவிலிருக்கிறது. பெரும்பாலும் நனவோடையில் மனம் தோய்ந்து மீளும் மொழிநடை கமலதேவியுடையது.
அறம் என்றொரு புனைவு- குமார நந்தன்;
சந்தேகம் எவ்வளவு தூரம் பயணிக்கும்?
Fantasize செய்வது பிரியமான விசயங்களுக்கு என்று மட்டுமில்லை. கட்டவீழ்த்து தறிகெட்டு ஓடும் குதிரை.
கணேசன் பாத்திரத்தை இடையில் உபயோகித்தது நல்ல யுத்தி.
விண்வெளியும் விரிகடலும்- நாராயணி சுப்ரமணியனின் மற்றுமொரு சூழலியல் கட்டுரை.
நந்தா குமாரனின் தாந்த்ரீகக் கவிதைகள் இரண்டு:
” ………….
இந்தக்கரண்டியில் இவ்வளவு காதல்தான்
அள்ளமுடியுமென்றால்
நீயோ நானோ கொள்ள முயலும்
மேலும் ஒரு சிட்டிகை காதல் கூட
நிறைதலின் சாத்தியத்தை
மிகைப்படுத்தும் தானே
உன் மோகத்திற்கு நான்
மொழித்துணையாவதும்
என் தாகத்திற்கு நீ
வழித்துணையாவதும்
பழைய மொந்தையில் புதிய கள் தான்
………….”
படைப்பின் ஊற்றுக்கண்ணை கண்டடைதல்- வேல்கண்ணன்:
மொழியின் நிழல் என்ற ந.பெரியசாமியின் கட்டுரைத்தொகுப்பை முன்வைத்து.
ஆறு கவிதைகள்- முத்துராசாகுமார்:
“நிலா மங்கிய நாளில்
வெள்ளரிப்பிஞ்சுகள் களவாங்க
சும்மா கொடிகளுக்குள்
சாக்கோடு நெளிந்தேன்.
தப்பிக்கையில்
இடத்துப்பெரியாம்பளையிடம்
ஆம்பட்டேன்
எனது எளுறுக்கு
புகையிலை கொடுத்து
தனது களவுச்சரிதங்களை
நடுக்கமெடுத்து வாசித்தார்
விடிந்து வழியனுப்புகையில்
வெடித்த வெள்ளரிப்பழத்தை
கோரை படுக்கையிலிட்டு
கைக்குழந்தையாகத் தந்தவர்
விதைகளை மட்டும்
வழித்துக் கொண்டார்”
அகச்சேரன் கவிதைகள் 8:
“கோடிக்கண்ணாடிச் சிறுசிறகுகள்
மொய்த்த அந்தியை
கதவடைத்துக் கழித்தபின்
கூட்டித்தள்ளும் உடல்களில்
எது என்னுடையது…?”
சுழலும் வெற்றிடத்தின் முகவரி தேடியலையும் சூறாவளி வார்த்தைகள்- அதிரூபனின் மணற்புகைமரம் கவிதைத் தொகுப்பு குறித்து நந்தா குமாரனின் கட்டுரை.
சிறப்புப் பக்கங்களில் சீன எழுத்தாளர் கான் சியுயெவின் கதைகள், கட்டுரைகள் மற்றும் நேர்காணலின் மொழிபெயர்ப்பு.
முதலில் கார்த்திகா முகுந்த்தின் தெளிவான அறிமுகக் கட்டுரை.
ச.வின்சென்ட்டின் மொழிபெயர்ப்புச் சிறுகதை ஒரு சிறுமி அவளது நண்பியுடன் ஒரு Alternate Universeக்குப் போய் வருவதைப் பற்றிய கதை.
கான் சியுயெவின் வாசிப்பு தொற்றிக் கொண்ட அனுபவம் குறித்த கட்டுரை சமயவேல் மொழிபெயர்ப்பில் (என்னுடைய ஒவ்வொரு நூலையும் நான் தான் வாங்கினேன். அப்பா நூலகத்தை விட்டுச்செல்லும் பிள்ளைகள் அதிருஷ்டசாலிகள்)
கான் சியுயெவின் சொர்க்கத்தின் உரையாடல்கள் என்ற சிறுகதைத் தொகுப்புக்கு எழுதிய முன்னுரையைத் தமிழாக்கம் செய்திருப்பவர் கார்த்திகா முகுந்த். பாட்டியுடனான வாழ்வியல் அனுபவம் மிகச்சிறப்பாக வந்திருக்கிறது.
சிவப்பு இலைகள் – கனியமுது அமுதமொழி:
சிவப்பு இலைகள் கதையில் ஹுவின் விசாரணை முன்னோக்கி செல்கையில் அல்லது பின்னோக்கி செல்கையில் மூளையில் சிக்கலான இழைகள் பின்னிக் கொள்கின்றன. மரணத்தின் முன் கடைசிகட்ட அதிர்வுகளையும், பல காலம் முன்பு மறக்கப்பட்ட குற்ற உணர்வையும் வெளிக்கொணருகின்றன. மருத்துவமனையின் ஒவ்வொரு படுக்கையிலும் மரணம் ஒளிந்திருக்கிறது.
மரணம் இங்கே போய்சேருமிடம் அல்ல a form of catharsis. மரணங்களைச் சந்திக்கையில் ஹூ அவர் இழந்த நினைவுகளைச் சந்திக்கிறார். நல்ல, திருத்தமான மொழிபெயர்ப்பு அமுதமொழியுடையது.
ச.வின்சென்ட் மொழிபெயர்த்த கான் சியுயெவின் நேர்காணல் சுவாரசியமானது.
கான் சியுயெ தாந்தே, போர்ஹேஸ், கால்வினோ, கதே, ஷேக்ஸ்பியர் போன்றோரின் நூல்களை பகுப்பாய்வு செய்து ஆறு திறனாய்வு நூல்களை வெளியிட்டிருக்கிறார்.
சார்லஸ் சிமிக் கவிதைகள் ஆறு- மொழிபெயர்ப்பு வே.நி.சூர்யா:
“சாயங்காலத்தின் முதல் பனியில்
ஒரு பெண்ணின் நடுங்கும் விரல்
கீழ் நோக்கிச் செல்கிறது
இறந்தவர்களின் பட்டியலில்
வீடு குளிர்ந்திருந்தது மேலும்
பட்டியலோ வெகுநீளமாக இருந்தது
எங்கள் அனைவரின் பெயரும்
சேர்க்கப்பட்டிருந்தது”
• தமிழ்வெளி தனி இதழ்: விலை ரூ. 120
• ஆண்டுச் சந்தா: விலை ரூ. 480
(நான்கு இதழ்கள்)
• தமிழ்வெளி இதழ்பெற –
• Buy Books By Phone:
• WhatsApp: wa.me/+919094005600
• சென்னையில் ‘தமிழ்வெளி’ இதழ் கிடைக்கும் இடங்கள்:
- நியு புக் லேண்ட், தி.நகர்
- டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே.நகர்
- பாரதி புத்தகாலயம் Bharathi Puthakalayam, தேனாம்பேட்டை
- யாவரும் பதிப்பகம், வேளச்சேரி
- பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர்
- பரிசல் புத்தக நிலையம், அரும்பாக்கம் பரிசல் சிவ. செந்தில்நாதன்