முதலாண்டு நிறைவு இதழ் இது. இந்த சூழ்நிலையில் இது நிச்சயமாக ஒரு சாதனை. ஆசிரியர் குழுவிற்கு நன்றியும் பாராட்டுகளும்.
எம்.கோபால கிருஷ்ணனுக்கும் எனக்கும் ஏதோ ஒரு டெலிபதி வேலை செய்கிறது. போன முறை நான் எழுதிக்கொண்டிருந்த நூல் குறித்து அவர் எழுதி வெளிவந்து விட்டது. இம்முறை நான் தூசிதட்டி எடுத்துவைத்த எம்.எஸ். கல்யாணசுந்தரம் குறித்து அவர் எழுதிவிட்டார். எழுதுவதில் நான் எப்போதும் சோம்பேறி தான். நல்லதொரு எழுத்தாளர், மறக்கப்பட்டவர் குறித்து எழுதப்பட்ட, நல்ல கட்டுரை. படித்துப் பாருங்கள். நானா? எம்.எஸ்.க. குறித்து எப்போதாவது எழுதுகிறேன்.
முகாம் ஓவியங்கள்- லஷ்மி சிவக்குமார் :
Hudson Riverல் ஒரு விமானம் Emergency Landing செய்த சம்பவத்தை வைத்து Tom Hanks நடித்த Sully திரைப்படம் வந்தது. இந்தக் கதையிலும் விமானம் நதியில் Land ஆகிறது.
ஆனால் விமானம் ஆற்றில் இறங்குகையில் நடந்தது நன்கு சித்தரிக்கப்பட்டிருக்கிறது.
இறப்பு குறித்த பயம் எல்லோருக்கும் உண்டு. இல்லை என்று சொல்பவரும் கடைசிகட்டத்தில் இழை நீளாதா என்றே பார்ப்பார்கள். ஆனால் மரணத்தை விடக் கொடூரமான, நம்மைப் பாதிக்கும், பயமுறுத்தும் விசயங்கள் உண்டு. அது போல ஒரு விசயத்தை இந்தக்கதை தெளிவாகவே பதிவுசெய்திருக்கிறது.
வெங்கமூதிக்கு தங்கப் பாம்படம் – நாஞ்சில்நாடன்:
இவர் சொல்வதில் பலவற்றில் எனக்கு உடன்பாடு கிடையாது ஆனால் கும்பமுனி சிரிக்கவைக்கிறார். அத்துடன் எல்லாரையும் சரமாரியாகக் கிண்டல் செய்கிறார். எல்லாவற்றிலும் Top படிச்சால் தான் உலக எழுத்தாளர்கள் பெயரைக் Quote செய்ய வேண்டுமா என்ற கிண்டல். அட ஆமால்ல!
குறுங்கதை வரிசை- யுவன் சந்திரசேகர்:
கதை பதினொன்று- பழைய புகைப்படங்கள் பல நினைவுகளை இழுத்துவிடும். அதிலும் குரூப் போட்டோக்கள்! வங்கிக்காசாளர் குறித்த சமாச்சாரம் உண்மையிலேயே பல ஊர்களில் நடந்திருக்கிறது.
கதை பன்னிரண்டு- சாணைபிடிப்பவனின் நனவோடையில் நகரும் கதை.
கதை பதிமூன்று- இம்மாத காலச்சுவட்டில் வெளியான போகன் சங்கரின் ஒளிவலை கதைக்கு எதிர்க்கதை இது. ஆமாம் எப்போது நிறுத்திக் கொள்ள வேண்டும் என்பது நிறையப்பேருக்குத் தெரிவதில்லை.
கதை பதினாலு- மனப்பிறழ்வில் வரும் காலமயக்கம். மறைத்த உண்மைகளை சொல்லாதவரையில் சரி.
கதை பதினைந்து- குரு நடந்த பாதை.
மோதிரம்- பிரதிபா ரே- தமிழில் அனுராதா கிருஷ்ணசாமி:
சுஜாதாவின் நகரம் கதை நினைவிற்கு வந்தது, ஆனால் அதைவிட இது பல பரிமாணங்கள் கொண்ட கதை. முழுக்கவே வெளிப்பழக்கம் இல்லாத கிழவியின் பார்வையில் நகரும் கதை. கிழவிக்கு மகன் மேல் இருக்கும் பாசத்தில் பேரன்களைக்கூட அவன் சாப்பாட்டில் மண்போடுபவர்களாய் நினைக்கிறாள். மருமகள் ஏதும் புரியாது நிற்பதைப்பார்த்து முட்டாள் என்றாள். சந்தோஷமாக இருந்த காலத்தை மறந்து கணவனையும், மகனையும் ஏமாற்றியதாய் வசைபாடுகிறாள். கிழவி பாவம் தான் ஆனால் மருமகளும் பிள்ளைகளும் இன்னும் பாவமில்லையா? அனுராதா இந்தியக் கதைகளில் ரத்தினங்களைத் தேடி எடுத்துத் திறம்பட மொழிபெயர்க்கிறார்.ஒரு தொகுப்புத்தேறும். கடைவிரித்தாயிற்று, கொள்வார் எவரோ!
செம்மஞ்சள் நிற மயானம்- யதிராஜ ஜீவா:
இவரது கவிதைகளில் தொனிக்கும் அதே மொழிநடை இந்தக்கதையிலும் தெரிகிறது. மோகத்தைக் கொன்றுவிடு அல்லால் என் மூச்சை நிறுத்திவிடு என்பதே கதைக்கரு.
தாந்தரீகத்தை (பாலியலை) மையமாகக் கொண்டு கதை நகர்கிறது. சற்றே மயக்க நிலையை ஏற்படுத்தும் மொழிநடை.
நான் தான் செய்தேன் அதை – கன்யா டி அல்மெய்டா- தமிழில் அரவிந்த் வடசேரி:
காமன் வெல்த் முதல்பரிசு வென்ற கதை. இருபது வருடங்களுக்கு மேல் மனிதக் கழிவை சுத்தம் செய்யும் பெண்ணின் கதை. அது தரும் அதிர்ச்சியும், தான் பெறாத குழந்தை மீது கொண்ட பாசமும், கைவிடப்பட்ட பெண்களின் விடுதியும் சேர்ந்து ஒரு நல்ல Combination ஆகி இதை நல்ல கதையாக்கி இருக்கிறது. நாம் இதை விட எத்தனையோ கொடுமைகளைப் பார்த்து விட்டோம். சமீப காலத்தில் இலங்கை தொடர்ந்து உலக இலக்கியத்தில் தன் தடத்தைப் பதித்து வருகிறது. தெளிவான வாசிக்க எளிதான தமிழ் மொழிபெயர்ப்பு அரவிந்த் வடசேரியுடையது.