அருட்பிரகாசம் கொழும்பில் தமிழ் பெற்றோருக்குப் பிறந்தவர். தத்துவயியலில் முனைவர் பட்டத்தை அமெரிக்காவின் கொலம்பியா பல்கலையில் பெற்றவர். The Story of a Brief Marriage என்ற இலங்கை இறுதிப்போரில் இளம் தம்பதியரைக் கதைக்களமாகக் கொண்ட இவரது முதல் நாவல் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது இந்தியாவிலும் இலங்கையிலும் வருடத்தின் பகுதிகளில் வசிக்கிறார். இவரது இந்த இரண்டாவது நாவல் புக்கர் 2021 நீண்டபட்டியலில் இடம்பெற்ற பதிமூன்று நாவல்களில் ஒன்று.
உலகத்தின் எல்லா எழுத்தாளர்களின் படைப்புகளில் இருந்து தொகுக்கப்பட்ட Flash Fiction தொகுப்பில் ஆசியாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே கதை இலங்கையில் இருந்து. சிங்களப்பெண் எழுதிய கதையில், கதாபாத்திரம் தெருவில் போகையில் பயங்கரவாதி மனிதவெடிகுண்டு வெடித்துப் படுகாயமடைந்து, சாலை நடைமேடையில் விழுந்து கிடக்கும் நிலையை வர்ணித்து, நான் என்ன தவறு செய்தேன் என்று கேட்டிருப்பாள். இது முக்கிய செய்தி. அவர்கள் உலகுக்கு தம்மை அப்பாவிகளாகக் காட்டிக் கொள்ளும் முயற்சி. ஆங்கிலத்தில் எழுதினால் உலகம் முழுதும் வாசிக்கப்படுகிறது. அருட்பிரகாசம் அதே வைத்தியத்தை அவர்களுக்குத் திரும்ப அளிக்கிறார். சிங்கள ராணுவம் அப்பாவிப் பொதுமக்களைக் கொன்றதை, குட்டிமணியின் கண்கள் மரணத்திற்குப்பின் தமிழ் ஈழத்தை பார்வையில்லாத ஒருவருக்குப் பார்வை அளித்துப் பார்க்கும் என்று சொன்ன ஒரே காரணத்திற்காக, அவர் கண்கள் தோண்டி எடுக்கப்பட்டதைத் தெளிவாகக் கதையினூடே பதிவு செய்கிறார். புக்கர் நீண்ட பட்டியலில் இடம்பெற்ற நூல் தொண்டை நெறிக்கப்பட்ட தமிழர் குரலை சத்தமாக உலகஅரங்கில் ஒலிக்க வைக்கிறது.
உலகம் முழுவதும் படிக்கப்படும் நூல்களுக்கு உலகத்தன்மை இல்லை என்றால் வரவேற்பு இல்லாது அலமாரியில் அடையும். பெரியபுராணத்திற்கும் உலக வாசகர்களுக்கும் என்ன சம்பந்தம்? கதையில் வரும் கிருஷ்ணன் பேரழிவின் போது டெல்லியில் கல்லூரியில் படிக்கிறான். அவன் மனம் எல்லாம் தாய்நாட்டில் அழிவுகள் நடுவே இருக்கிறது. இங்கே பூசலாரின் முழுக்கதையும் வருகிறது. சிவன் மன்னன் கட்டிய கோயிலை விட்டு மனத்தில் கட்டிய கோயிலுக்குப் போன கதை. ஒரு நாடோடிக்கதை போல் வரும் இந்தக்கதை இப்போது கிருஷ்ணனின் மனநிலையைத் தெளிவாக வாசகர்கள் புரியும் வண்ணம் சொல்கிறது, பெரிய புராணத்தையும் உலகஅரங்கில் சொல்லியாயிற்று, இலங்கை அரசின் அத்துமீறல்களையும் சொல்லியாயிற்று. மூன்றுமாங்காய்கள்.
இந்தியக் குடும்பங்களில் இன்று கூட பெண்கள் சமையலறையை அரசாட்சி செய்யும் இடமாக நினைப்பது வெகுசில வீடுகளில் தொடர்கிறது. பாட்டி, இருபத்தைந்து வயது பேரன் இருந்தும் சமையலறையில் மருமகள் நுழைவதை ரசிப்பதில்லை. கால்கள் முடியாது மாடி இறங்க பலநிமிடங்கள் ஆனாலும் சிரமப்பட்டு வந்து அங்கே பொருட்கள் சரியாக இருக்கிறதா என்று பார்த்துக் கொள்கிறாள். அதுவும் முடியாமல் போனபோது சமையலறையில் என்ன நடக்கிறது என்று எல்லோரிடமும் விசாரித்துத் தெரிந்து கொள்கிறாள்.
கிருஷ்ணன் என்ற இருபத்தைந்து வயது இளைஞனைச் சுற்றிக் கதை நகர்கிறது. இந்தியாவில் படித்து, அஞ்சும் என்ற பெண்ணுடன் வாழ்க்கை நடத்தி, அவள் ஜார்கண்ட் போராளிகளுடன் இணைந்து வேலைசெய்யப் போவதாகச் சொல்லிப் பிரிகையில், அவள் போல் தானும் தாய்நாட்டுக்குத் திரும்பி ஏதாவது செய்ய வேண்டும் என்ற உந்துதலில் கொழும்புக்கு வருபவன், அம்மாவுடனும், பாட்டியுடனும் இரண்டுமாடி வீட்டில் தங்குகிறான். அஞ்சும் இடமிருந்து நான்கு ஆண்டுகள் கழித்து ஒரு மெயில் வருகிறது, அதே நேரத்தில் பாட்டிக்கு Caretaker ஆக இருந்த ராணி வடகிழக்குப்பகுதி கிராமத்தில் இறந்த செய்தி வருகிறது. ஈமக்கிரியைக்கு கிருஷ்ணன் பயணத்தில் முன்னோக்கிச் செல்லும் போது அவன் நினைவுகள் பின்னோக்கிப் போகின்றன.
கிருஷ்ணன் இறந்து போன ராணி மற்றும் அவனது அப்பம்மா, பழைய காதலி அஞ்சும் ஆகிய மூவரையும் குறித்த நினைவுகளை அசைபோடுகிறான். ராணி தன் இரண்டு மகன்களையும் போரில் இழந்து மனநிலை பாதிக்கப்பட்டவள். கிணற்றில் விழுந்து கழுத்து முறிந்து அவள் இறந்தது விபத்தா? இல்லை தற்கொலையா? அவளது குடும்பத்தினர், அவள் கொழும்புவில் வேலைக்கு இருந்த சமயத்தில் இவர்கள் அவளை சரியாகக் கவனிக்காததால் தற்கொலை செய்து கொண்டாள் என்று பழிசொல்வார்களோ என்ற குற்றஉணர்வு அவனை ஈமச்சடங்கில் பங்குகொள்ளத் தூண்டுகிறது. கடைசியில் இவன் தெரிந்து கொள்வது என்ன?
அஞ்சும் இத்தனை வருடங்களுக்குப் பிறகு திடீரென ஏன் தொடர்பு கொள்ளவேண்டும்? இருவரும் ஒத்துக்கொண்டு தானே பிரிந்தனர்! இப்போது அவன் என்ன பதில் தர வேண்டும்? பழைய உறவைத் தொடரும்படியா இல்லை தொடராமல் இருக்கும் படியா?
Meursaultல் பாதி கிருஷ்ணன். எல்லாவற்றிலும் ஈடுபடுவதும் எதிலும் பற்றில்லாது விலகுவதும், மனதில் வெறுமை சூழ்ந்து இருப்பதும், தத்துவார்த்த சிந்தனைகளும் கலந்த கலவை கிருஷ்ணன். சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட மேகத்தைத் தூது விடும் பாடல், புத்தரின் சரிதை, குட்டிமணி கதை, பெண் கரும்புலிகள் கதை, பாலி மொழியில் எழுதப்பட்ட புத்தமதப் பெண்கள் எழுதிய கவிதைகள் என்று வேறுபட்ட விசயங்கள், நினைவுகளில் கலப்பதால் கதையுடன் இடைஞ்சல் இல்லாது கலக்கின்றன. இறப்புக்குப் பின் என்ன? மனம் தாளமுடியாத வலியை அனுபவிக்கும் பொழுது ஏன் உடல் அனுபவிக்கும் வேதனைகள் பெரிதாய் தோன்றுவதில்லை என்று தத்துவார்த்த விசயங்களும் கலந்து வருகின்றன. சிப்பத்தில் மொத்தமாகச் சேர்த்துக்கட்டிய பலவும் மேற்கத்திய வாசகர்களுக்கு புது உலகத்தின் வாயில். அந்தக் காரணத்தினாலேயே இது நீண்ட பட்டியலில் இடம் பெற்றிருக்கக்கூடும். அருட்பிரகாசத்தின் மொழிநடையும் அருமை.