Damon தென் ஆப்பிரிக்காவில் பிறந்தவர். நாடகாசிரியர் மற்றும் நாவலாசிரியர். இதற்கு முன் எட்டு நாவல்கள் எழுதியுள்ளார், அவற்றில் இரண்டு புக்கர் இறுதிப்பட்டியலில் வந்துள்ளன. 2021ல் எழுதப்பட்ட இந்த நாவலுடன் மூன்றாம் முறையாக புக்கர் நீண்ட பட்டியலில் இடம் பெறுகிறார்.

யூதர் இனம் மற்ற மதங்களைப் போலல்லாமல் தலைகீழ் வளர்ச்சி அடைந்துள்ளது. 1939ல் 17 மில்லியன் யூதமக்கள் தொகை 2015ல் 14 மில்லியனாகி இருக்கிறது. உலக யூத மக்கள் தொகையில் இஸ்ரேலில் 30% யூதமக்கள் தொகை இருக்கையில் அமெரிக்காவில் 51 சதவீத யூதர்கள் இருக்கிறார்கள். அமெரிக்காவில் Protestant மற்றும் பெந்தேகோஸ்தே தவிர வேறு மதங்கள் தழைப்பது சிரமம். எனவே யூத இனம் ஒரு இக்கட்டில் இருக்கிறது. இந்தப் பின்னணியில் ரச்செல் என்ற தென்ஆப்பிரிக்க வெள்ளையின கத்தோலிக் கிருத்துவரை மணந்த, மூன்று குழந்தைகள் கொண்ட பெண்ணின் ஈமச்சடங்கில் வரும் குழப்பத்தை அணுக வேண்டும்.

Promise- வாக்குறுதி இந்த நாவலில் கணவன் மனைவிக்குக் கொடுத்தது. உண்மையில் இரண்டு வாக்குறுதிகள். முதலாவது ரச்செல் தன் தாய் மதத்திற்குத் திரும்புவது. அதன்படி ரச்செலின் ஈமச்சடங்கு யூதமுறைப்படி நடக்கும், அவள் அவளது உறவினர்களுடன் யூதக்கல்லறையில் புதைக்கப்படுவாள், அவளது கணவன் இறக்கும் போது தனியாகப் புதைக்கப்படுவான், Death do us part என்பது இங்கே Literal meaning ஆகிப் போகிறது. இரண்டாவது அவ்வளவுகாலம் ரச்செல் படுத்தபடுக்கையாக இருந்த போது பணிவிடை செய்த கறுப்பினப் பெண்ணுக்கு வீடு கொடுக்க வேண்டும். கணவன் தன் வாக்குறுதிகளை நளன் போல் மறக்கிறான் அல்லது நினைவில் கொண்டு வர விரும்பவில்லை. ஒரே சிக்கல் என்னவென்றால் அவர்களது கடைசி மகள் வாக்குறுதிகள் கேட்கப்பட்டதையும், கொடுக்கப்பட்டதையும் கேட்டு விடுகிறாள்.

கிரிக்கெட் நீண்டகாலம் பார்த்துக் கொண்டிருந்தவருக்கு தென் ஆப்பிரிக்கா விளையாட்டில் உச்சத்தில் இருந்தபோது விதிக்கப்பட்ட 22 வருடத் தடை நினைவிருக்கும். இன்றும் தென் ஆப்பிரிக்காவில் நிறவெறி முற்றாக மறையவில்லை. Damon வெள்ளையினத்தவராக இருந்த போதிலும், நிறவெறியை அழுத்தமாகப் பதிகிறார்.

முற்றிலும் வேறுபாடான மூன்று குழந்தைகள். மூத்தவன் Anton ராணுவத்தில் இருந்து சொல்லாமல் கொள்ளாமல் விலகி வந்தவன், தந்தையை எதிரியாகப் பார்ப்பவன், சகோதரிகளுடன் ஒட்டுறவில்லாதவன், எப்போதும் எல்லோருடனும் indiffrrent ஆக நடப்பவன். Anton the stranger. அடுத்தது Astrid. இளமையில் அழகாக இருந்து, குழந்தைகள் பெற்று குண்டானவள். குடும்பத்தினர் எல்லோரிடமும் தொடர்பில் இருப்பவள். சிறுவயதில் தோன்றிய ஆணுடல் மேலான விருப்பத்தை, இரண்டு மணவாழ்க்குப் பிறகும் விட்டுவிடாதவள். வீட்டுக்கு காவல் இருப்பவனில் இருந்து அரசியல் பெரும்புள்ளி வரை ஆண்களைத் தவிர்க்க முடியாதவள். பாவமன்னிப்பு கேட்பதற்காகவே கத்தோலிக்க மதத்தில் விடாத பற்று கொண்டவள். Astrid the sinner.
Amor சிறுவயதில் அக்காவின் அழகைப் பார்த்து பிரமித்தவள். கவனிக்க யாரும் இல்லாத, அவள் தாய்க்கு ஈமச்சடங்கு நடந்து கொண்டிருந்த வேளையில் ருதுவானவள்.அசைவம் உண்ணாதவள். தர்மநியாயங்களில் நம்பிக்கை கொண்டவள். Amor the saint.

நான்கு பாகங்களாகப் பிரிக்கப்பட்ட நாவல், ஒவ்வொரு கதாபாத்திரத்தின் பெயரைத் தாங்கிவருவதன் காரணம் கடைசியில் விளங்கும். கிட்டத்தட்ட பத்துவருடங்கள் இடைவெளியில் ஒவ்வொரு பாகமும். ஒவ்வொரு பாகத்திலும் குடும்பத்தில் ஏதோ ஒரு மாற்றம் நிகழ்கிறது, அதே நேரத்தில் தென் ஆப்பிரிக்காவில் கருப்பின மக்களின் நிலை கொஞ்சம் கொஞ்சமாக முன்னேற்றம் அடைகிறது. தென் ஆப்பிரிக்கா குறித்த சித்திரமும் பின்னணியில் வந்து கொண்டே இருக்கிறது. Damon ஒரு Carefree மொழிநடையில் முழுக்கவே Black humourஉடன் எழுதியிருக்கிறார். எதுவுமே நாவலில் புனிதம் இல்லை, பாவமன்னிப்பு கொடுத்த பாதிரி அந்தப்பெண்ணின் உடலை வெறித்துப் பார்க்கிறார். குடும்பம் பற்றியோ, கருப்பினம் பற்றியோ அல்லது கொடுத்த வாக்குறுதி பற்றியோ இந்த நாவல் என இதைச் சுருக்க முடியாது. பல திசைகளில் பரவும் ஓளி போல பயணிக்கிறது. குறிப்பாக நான்கைந்து வாழ்க்கைகள் மூலம் பல புதிர்கள் கட்டவிழ்க்கப்படுகின்றன. மதங்கள் குறித்த கேள்விகளும் இருக்கின்றன. ஆழமும் அழுத்தமும் கொண்ட நாவல். மிகமிகத் திறமை வாய்ந்த எழுத்தாளர். இந்த நாவல் இறுதிப்பட்டியலில் நுழைவதற்கு யாரும் தடைசெய்ய இயலாது என உறுதியாக நம்புகிறேன்.

bookerlonglist2021

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s