நான்கு நாட்கள் வெளியூர் செல்வதாக இருந்தது. நெரிசலாக வீடுகள் என்றாலும், பூட்டிச்செல்வதால் எதிர்வீட்டுப் பெண்ணிடம் ஒரு வார்த்தை சொல்லலாம் என்று அழைப்பு மணியை அழுத்தினேன். முகத்தை மட்டும் கதவிற்கு வெளியே காட்டிய பெண், முகபாவனையில் என்ன வேண்டும் என்றது. ஒருவேளை shorts போல் ஏதாவது உடை அணிந்திருக்கலாம் என்று, வந்த வேலையான, கள்வரின் கயமையில் இருந்து வீட்டைப் பாதுகாக்க ஒரு கண் வைத்துக் கொள்ளச் சொல்லித் திரும்பினேன். அங்கிள் ஒரு நிமிடம், உங்களுக்கு புக் ஒன்று வந்திருக்கிறது என்று சொல்லி கதவை இன்னும் அரை இஞ்ச் திறந்த பெண் அணிந்திருந்த முழுநீள உடை தரையைக்கூட்டும் அளவு நீளம். இந்தப்பெண் வங்கி குறித்த சந்தேகங்களில் இருந்து வீட்டில் மின்சாரம் இருக்கிறதா என்பது வரை குறைந்தது இருபத்தைந்து தடவையாவது என்னிடம் உரையாடியிருக்கும்.
வங்கியில் வாடிக்கையாளர்களைப் பார்க்க அல்லது அசையாச்சொத்துகளை சோதனையிட, நினைத்த நேரத்தில் நான் செல்வதால் காப்பறையின் சாவிகளை எப்போதும் எடுத்து செல்வதில்லை. ஒரு பெண் அலுவலரின் நெருங்கிய உறவினர் இறந்ததாக செய்தி வந்ததால் அவர் இன்னொரு அலுவலரை இரவு பத்து மணிக்கு அழைத்து செய்தியை சொல்லி அவரை வந்து இவரிடமிருந்த சாவிகளை வாங்கிச் செல்லும்படி வேண்டிக்கொண்டார். விதி எப்போதும் விளையாட்டுகளில் விருப்பமுள்ளது. சாவியை வாங்கிச்சென்ற ஆண் அலுவலருக்கு மூன்றுமாதம் கழித்து ஏதோ அவசரவேலை என்று இரவு எட்டுக்கு அந்த அலுவலரை அழைத்து சாவியைக் கொண்டு வந்து தரலாமா என்று வேண்டியிருக்கிறார். சரி என்று ஒப்புக்கொண்ட இவர் ஆறுமணிக்கு நான் கிளம்பியபோது கொடுத்திருந்தால் இருவருக்கும் தொல்லையில்லை, இப்போது வீட்டில் உள்ளவருக்கு நான் விளக்கம் கொடுக்க வேண்டும் என்றாராம். என்னிடம் இப்படி நடந்தது என்று ஆண் சொல்கையில்
” அது அப்படித்தான்” என்று முழுவாக்கியமாக நான் சொன்னதை தொடர்வாக்கியமாக புரிந்து கொண்டு சற்றுநேரம் என் முகத்தைப் பார்த்தார் அவர்.
யாரென்று அடையாளம் தெரிந்திருந்தால் பரவாயில்லை,அவர்கள் ஏதாவது வேலையாக இருப்பார்கள் என நினைத்துக் கொள்ளலாம். உட்பெட்டியில் ஏதேனும் கேள்வி கேட்பவரில் சிலர் நம்பொம்மையைப் பார்த்ததும் சட்டென மாயமாகி நாம் மறுமொழி சொல்லிப் பதினேழு நிமிடங்கள் கழித்து வந்து என்ன என்று பார்ப்பது குறித்து இப்போதெல்லாம் நான் பெரிதாய் எடுத்துக்கொள்வதில்லை, நகைக்கடைக்குள் நுழைபவர் யாராயிருந்தாலும் எச்சரிக்கையாக நடந்து கொள்வது ஊழியர்களின் கடமை. ஆனால் நான்கு நாட்கள் கழித்து நன்றி சார் என்று பதில் வந்ததும் காலையில் என்னிடம் தான் பில் போட வேண்டும் என்று காத்திருக்கச் சொன்ன பெண்ணாகத் தான் இருக்கும் என்று நினைத்து ஏமாந்திருக்கிறேன். அப்புறம், ரஷ்யாவில் இருந்து வந்த Trust but verify என்ற Phraseஐ அமெரிக்கர்களும் உலகமெங்கும் பரப்பி ஒருவேளை இங்கேயும் கூட கடைபிடிக்க ஆரம்பித்திருக்கலாம்.